முகப்பு
லீ குவான் யூ

16. கம்யூனிச முகமூடிகள்

புதிதாய்ப் பிறந்த பீப்பிள்ஸ் ஆக்‌ஷன் பார்ட்டியின் முதல் தீர்மானம், ஏப்ரல் மாதம் வரும் தேர்தலில் போட்டியிடுவது. லீ, தேவன் நாயர், மற்றும் மூன்று

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:


புதிதாய்ப் பிறந்த பீப்பிள்ஸ் ஆக்‌ஷன் பார்ட்டியின் முதல் தீர்மானம், ஏப்ரல் மாதம் வரும் தேர்தலில் போட்டியிடுவது. லீ, தேவன் நாயர், மற்றும் மூன்று பேர் என கட்சி சார்பில் ஐந்து பந்தயக் குதிரைகள். புயல்வேகப் பிரசாரங்கள் தொடங்கின.

ப்ரொக்ரெஸிவ் கட்சி, லேபர் அணி (Labour Front), டெமாக்ரட்டிக் கட்சி, லீயின் பீப்பிள்ஸ் ஆக்‌ஷன் கட்சி (இனிமேல் சுருக்கமாக PAP என்று சொல்லுவோம்), சில உதிரிக் கட்சிகள், சுயேச்சைகள் ஆகியோர் களத்தில். ஆங்கிலேய ஆட்சி எதிர்ப்பும், விடுதலை கோஷமும் PAP – இன் முக்கிய முழக்கங்கள்.

லீக்குப் பல புது அனுபவங்கள். இரவு நேரங்களில்தான் பிரசாரம் சூடு பிடிக்கும். திறந்த வெளி லாரிகளில், கண்களைக் கூச வைக்கும் விளக்குகள் நடுவே நின்றபடி பயணம். கையில் மைக். வோட்டுக்கேட்டு முழங்கவேண்டும். ஒரு பெரிய பிரச்சனை. அவருக்குச் சீன மொழியில் சரளமாகப் பேச வராது. சமாளிப்பார். தன் மக்களிடம் தாய்மொழியில் பேச முடியவில்லையே என்று வெட்கப்பட்டார். தேர்தல் முடிந்தவுடன் முதல் வேலை, சீன மொழியில் பேசக் கற்றுக்கொள்ளவேண்டும்.

Advertisement

பிரசாரத்துக்காகத் தன் தொகுதியின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் லீ போனார். பொட்டிக்கடைக்காரர்கள்., ரிக்‌ஷாக்காரர்கள், கூலிகள், கஞ்சா விற்பவர்கள் என அடிமட்ட மக்கள் வாழ்ந்த குடிசைப் பகுதிகள். எங்கும் குப்பை, கூளங்கள், மனிதக் கழிவுகள். ஊர்வலம் வரும் நாய்கள், பன்றிகள். நம் சகோதர சகோதரிகளின் வாழ்க்கை இத்தனை அவலமா என்னும் நிதர்சனத்தை உணரும் முதல் வாய்ப்பு. அவர்கள் அன்றாட ரத்தக் கண்ணீரைத் துடைப்பது முதல் கடமை என வைராக்கியம் வந்தது. .

வோட்டுக்கள் எண்ணப்பட்டன.  யாருமே எதிர்பாராத ஆனந்த அதிர்ச்சி முடிவுகள். லீ மாபெரும் வெற்றி கண்டார். அவரை எதிர்த்த இரு போட்டியாளர்களுக்கும் டெபாசிட் இழந்தனர். லீ கட்சியில் மற்ற மூன்று பேர் வெற்றி: ஒருவர் படுதோல்வி. அந்த ஒருவர், PAP  கட்சியில் அரசியல் பின்புலம் கொண்ட ஒரே தலைவராக இருந்த தேவன் நாயர். அறிமுகத் தேர்தலிலேயே, போட்டியிட்ட ஐந்தில் நான்கு இடங்களில் வெற்றி. லீயின் அரசியல் சாமர்த்தியம் எதிரிகளை ஆச்சரியப்பட வைத்தது, இந்த ஆள் கவனிக்கப்படவேண்டியவர்.

ஆட்சியைப் பிடிப்பார்கள் என்று எல்லோரும் நினைத்த ப்ரொக்ரெஸிவ் கட்சி படுதோல்வி கண்டது. லேபர் அணி பெரும்பான்மை. மார்ஷல் என்பவர் தலைமையில் ஆட்சி அமைத்தது. சிங்கப்பூர் முதலமைச்சர் மார்ஷல்.

ப்ரொக்ரெஸிவ் கட்சி, லீயின் முதலாளி லீகாக் கட்சி. தன் கீழ் வேலை பார்ப்பவரிடமே தோல்வி கண்டதை அவரால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.  தன் கம்பெனியிலிருந்து விலகச் சொன்னார். ஐந்து வருட உறவு முடிந்தது. லீகாக் தனக்கு அமைத்துகொடுத்த மேடைக்கு லீ மனதுக்குள் நன்றி சொன்னார். முதலாளியின் கோபம் அவருக்குத் தப்பாகத் தெரியவில்லை. எந்த மனிதரும் இதைத்தான் செய்திருப்பார் என்று தன்னைத் தேற்றிக்கொண்டார்.

லீ முன்னால் இப்போது இரண்டு சவால்கள். தனியாக வழக்கறிஞர் தொழில் தொடங்கவேண்டும். இது வருமானத்துக்காக, தனக்காக, குடும்பத்துக்காக. PAP கட்சியைக் கட்டுக்கோப்பானதாக, பெரும் மக்கள் ஆதரவு கொண்டதாக வளர்க்கவேண்டும். இது நாட்டுக்காக.   

புதிய கட்சியின் தலைவராக லீ மலாய், சிங்கப்பூர் அரசாங்கங்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார் - அவசர நிலையை நீக்கவேண்டும், வன்முறை வழக்குகள் நிரூபிக்கப்படாத கம்யூனிஸ்ட்கள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும், மலாய்க் கம்யூனிஸ்ட் கட்சி மீதிருக்கும் தடைகளை நீக்கி அவர்களைச் சுதந்திரமாக இயங்க விடவேண்டும். இரு அரசுகளும் இதை ஏற்றுக்கொண்டன. 

PAP, கம்யூனிஸ்ட்கள் ஆகிய இருவர் இலக்கும் மலாயா – சிங்கப்பூர் விடுதலைதான். என்றபோதும், அவர்கள் பாதை எத்தனை வித்தியாசமானது என்பதைத் தொடர்ந்த நாட்கள் லீக்குக் காட்டின. அவர் ஆங்கிலேயரை வெறுக்கவில்லை: ஆங்கிலேய ஆட்சியை மட்டுமே வெறுத்தார். ஆனால், கம்யூனிஸ்ட்களின் அணுகுமுறை வர்க்க துவேஷம். ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டார்கள். ரப்பர் தோட்டத் தொழிலாளிகளை முதலாளிகளுக்கு எதிராகக் கொடி பிடிக்க வைத்தார்கள். நாட்டின் ஸ்திர நிலைமையைக் கெடுத்து, அந்தக் குழப்பத்தில் விடுதலை பெறுவது அவர்கள் குறிக்கோள். இந்த வன்முறைப் பாதை, வெறுப்பு வழி, லீயால் ஒத்துக்கொள்ளவே முடியாத வழி.    

நாட்டில் தெருச் சண்டைகள், கலவரங்கள், ஆசிட் வீச்சுக்கள் வளர்ந்தன. அதிகாரிகள் மட்டுமல்ல, அப்பாவிக் குடிமக்களும் இவற்றுக்குப் பலிக்கடாக்களானார்கள். கம்யூனிஸ்ட்கள்தாம் இவற்றைத் தூண்டி விடுகிறார்கள் என்று அரசாங்கம் நம்பியது. அவர்களைக் கைது செய்யத் திட்டமிட்டது. மக்களவையில் இதை லீ காரசாரமாக எதிர்த்தார். அடக்குமுறை தீர்வு அல்ல, ஒரே வழி, ஜனநாயக வழிதான் என்று வாதாடினார்.

இதே நேரம். கம்யூனிஸ்ட்கள் வம்பை விலைக்கு வாங்கிக்கொண்டிருந்தார்கள். ஹாக் லீ பஸ் கார்ப்பரேஷன் (Hock Lee Bus Corporation) என்னும் பேருந்து நிறுவனத்தில், தங்கள் யூனியனை மட்டுமே அனுமதிக்கவேண்டும் என்று கம்யூனிஸ்ட்கள் நிர்வாகத்தை எச்சரித்தார்கள். மறுத்தால், சிங்கப்பூரின் அனைத்து பஸ் யூனியன்களும் வேலை நிறுத்தம் செய்வோம், நாட்டின் போக்குவரத்தையே நிறுத்துவோம் என்று பயம் காட்டினார்கள். வேலை நிறுத்தத்தில் பங்கெடுக்கும் அத்தனை தொழிலாளிகளையும் வீட்டுக்கு அனுப்புவோம் என்று நிர்வாகம் பதில் எச்சரிக்கை விடுத்தது. லீ வேலை நிறுத்தத்துக்கு ஆதரவளித்தார்.

வேலை நிறுத்தத் தொடக்க நாள். பணியப்போவதில்லை, பஸ்களை ஓட்டுவோம் என்றது நிர்வாகம். 150 தொழிலாளிகள் மனிதச் சங்கிலியாகக் கம்பெனி வாசலில் நின்றார்கள். பஸ்கள் டெப்போவை விட்டு வெளியே வருவதைத் தடுத்தார்கள். திரண்டு வந்தது போலீஸ் படை. கலந்துபோகுமாறு எச்சரித்தார்கள். தொழிலாளர்கள் அசையவில்லை. அவர்கள்மேல் வேகமாகத் தண்ணீர் பாய்ச்சினார்கள். கூட்டம் கலைந்து ஓடியது. சுமார் 40 பேருந்துகள் வெளியே வந்தன, ஓடின.

யூனியன், நிர்வாகம் ஆகிய இரு தரப்பினரும் இறங்கி வருவதாக இல்லை. யூனியன் சார்பாக லீ பேச்சு வார்த்தைகள் நடத்தினார். இரு தரப்பினரின் முரட்டுப் பிடிவாதத்தால், தீர்வே கண்களுக்குத் தெரியவில்லை. நிலைமை இன்னும் சிக்கலாகிக்கொண்டிருந்தது. ஏராளமான மாணவர்களும், பல யூனியன்களும் பஸ் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மறியலில் இறங்கினார்கள். நாடு முழுக்கக் கொந்தளிப்பு, என்ன நடக்குமோ என்று யாருக்கும் தெரியாத படபடப்பு. சாதாரணக் குடிமகன் பயந்து நடுங்கினான்.

நிலைமையின் வீரியத்தை முதலமைச்சர் மார்ஷல் உணர்ந்தார். ஹாக் லீ பஸ் கார்ப்பரேஷன் அலுவலகம் போனார். நிர்வாகம், யூனியன் பிரதிநிதிகள் ஆகியோரோடு பேசினார். ஒப்பந்தம் முடிவானது. மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கை பஸ்கள் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த தொழிற்சங்கத்திடம் விடப்படும்: மீதம் பஸ்கள் தொழிலாளர் யூனியனிடம். மார்ஷல் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். ஆனால், இந்த நிம்மதி சில மணி நேரங்கள்தாம் நீடித்தது. காயலான் கடை ஓட்டை பஸ்களைத் தங்களிடம் தள்ளி விட்டார்கள் என்று தொழிலாளர்கள் யூனியன் கூக்குரலிட்டது.

மறுபடியும் ஸ்ட்ரைக். இம்முறை அடக்குமுறைக்குப் பணியாமல் வேலை நிறுத்தத்தையும், மறியலையும் தொடரவேண்டும் என்று தொழிலாளிகள் முடிவு செய்தார்கள். இந்த முறை, தொழிலாளர்கள் பஸ்கள் மீது கற்களை வீசினார்கள். போராளிகள் பஸ்களுக்குள் ஏறினார்கள். சீட்களைக் கிழித்தார்கள், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தார்கள்.   

மதியம். 20 லாரிகள் நிறைய 2000 மாணவர்கள் வந்து இறங்கினார்கள். போலீஸோடு நடந்தது மோதல் அல்ல, யுத்தம். கற்களோடு, பாட்டில்களும் வீசப்பட்டன. வேலை நிறுத்தம் அசிங்கமான கலவரமாக் மாறியது.

லீ சம்பவ இடத்துக்குப் போனார். நிலைமை கட்டுக்கு அடங்காமல் போவதை உணர்ந்தார். இரவு. வானொலியில் முதலமைச்சர் மார்ஷல் பேசினார், ‘நான் எப்போதும் அடிமட்டத் தொழிலாளிகள் பக்கம்தான்.  சிங்கப்பூரை வளம் கொழிக்க வைப்பதற்கு எனக்கு இன்னும் நேரம் தாருங்கள். ஆஸ்திரேலியாவில் ஆர்தர் லூயி என்னும் உலகப் புகழ்பெற்ற பொருளாதாரப் பேராசிரியர் இருக்கிறார். சிங்கப்பூருக்கு வருமாறு அவரை அழைத்திருக்கிறேன். அவர் சோஷியலிஸக் கொள்கை கொண்டவர். நம் பொருளாதாரத்தைச் சீர் செய்யவும், அனைத்து மக்களும் முன்னேற்றம் காணவும் அவர் உதவுவார்.“            

நாடு பற்றி எரியும்போது, அதை அணைக்கும் திராணி இல்லாமல், இது என்ன வழவழா கொழகொழா வெண்டைக்காய்ப் பேச்சு? லீ கருத்துத் தெரிவித்தார், ‘ (கம்யூனிஸ்ட்களின்) குறிக்கோள் விவாதமல்ல, பேச்சு வார்த்தையல்ல, தீர்வு காண்பதல்ல. லெனின் காட்டிய வழியில், புரட்சிக்கான சூழ்நிலையை உருவாக்குவதுதான். அதற்காக, முதலில், அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது என்னும் , நிலையை உருவாக்குவார்கள்.  இரண்டவதாக, எதிர்நோக்கும் பிரச்சனைகள், சட்டவிர்ரோதச் செயல்கள், வறுமை, வன்முறை ஆகியவற்றை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை அரசிடம் இல்லை என்று காட்டுவார்கள்.”

லீ கணித்ததுபோலவே, நிகழ்ச்சிகள் நகர்ந்தன. ஹாக் லீ பஸ் டெப்போவில் தொடங்கிய கலவரங்கள் நாடு முழுக்கக் காட்டுத்தீயாகப் பரவின. சக யூனியன்கள், மாணவர்கள் மட்டுமல்லாமல் சமூக விரோதிகளும் வந்து கும்பலில் சேர்ந்தார்கள். கற்கள் பறந்தன. பாட்டில்கள் உடைந்தன. போலீசாரின் தண்ணீர்க் குழாய்கள் பீறிட்டன. கண்ணீர்ப் புகை விண்ணை நிறைத்தது. விரைவில், பகல் மோதல்கள் இரவுக்கும் விரிந்தன.   

பிரிட்டீஷ் அதிகாரியோடு வந்துகொண்டிருந்த ஒரு போலீஸ் கார்மீது   போராளிகள் கற்களையும், பாட்டில்களையும் வீசினார்கள். கொலைவெறியோடு நெருங்கினார்கள். அதிகாரி பயந்தார். தலைமைக் காவல் நிலையத்துக்கு அபயக் குரல் கொடுத்தார். பதில் இல்லை. அவருக்கு வேறு வழி தெரியவில்லை. துப்பாக்கியை எடுத்தார், சுட்டார். பாய்ந்த ஒரு குண்டு 17 வயதுச் சீன மாணவன் உடலில் பாய்ந்தது.

அந்த மாணவனை உடனேயே மருத்துவ மனையில் சேர்த்திருக்கவேண்டும். இள ரத்த உணர்ச்சி வேகமோ, அல்லது அரசியல் ஆதாயம் தேட ஆசைப்பட்ட தலைமையின் ஆலோசனையோ, காரணம் தெரியவில்லை. மாணவர்கள் குண்டடி பட்டவனை லாரியில் ஏற்றி ஊர்வலம் வந்தார்கள். பொதுமக்களைத் தூண்டிவிடும் முயற்சி. மூன்று மணி நேரம் பறந்தது. மாணவன் உயிர் பிரிந்தது. 

சீன மாணவனின் மரணம் புரட்சித் தீயைக் கொழுந்துவிட்டு எரியச் செய்யும் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆச்சரியம், மனப் பக்குவத்தைக் கொண்டுவந்தது. ஹாக் லீ பஸ் கார்ப்பரேஷன் நிர்வாகிகளும், தொழிலாளிகளும் தொடர்ந்து பேசினார்கள். நிர்வாகம் தன் யூனியனைக் கலைத்தது. பதிலாக 160 பேரை வேலை நீக்கம் செய்யத் தொழிலாளிகள் சம்மதித்தார்கள். கம்யூனிஸ்ட்கள் தங்கள் வெற்றியாக உடன்பாட்டை விளம்பரப்படுத்திக்கொண்டார்கள். இன்னும் பல பஸ் கம்பெனி யூனியன்கள் அவர்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன.    

தொழிலாளிகள் கம்யூனிஸ்ட்கள் பக்கம் சாயத் தொடங்கியிருக்கலாம். ஆனால், இந்தத் தினசரிப் போராட்டங்கள் மக்கள் மனங்களில் சலிப்பை ஏற்படுத்தின.

தேவன் நாயர் நாடு தழுவிய போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்தார். ஆனால், பெரும்பாலான தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலக்குப் போனார்கள். மக்கள் வாழ்க்கையும் சகஜ நிலையில். தேவன் நாயர் ஸ்டிரைக்கைப் பின் வாங்கினார்.

வேலை நிறுத்தங்கள், வன்முறை, கலவரங்கள், புரட்சி ஆயத்தங்கள் – தன் சகாக்களின் நடவடிக்கைகள் லீ மனதில் வெறுப்பை ஏற்படுத்தின. இவற்றிலிருந்து விலகிநிற்க நினைத்தார். மனைவி சூவோடு காமரூன் தீவுகளுக்கு விடுமுறைக்குப் போனார். திரும்பி வந்தவுடன், இத்தகைய வன்முறை நடவடிக்கைகளில் தன் கட்சித் தோழர்கள் தொடர்ந்தால், தான் அவர்களிடமிருந்து பிரியவேண்டிவரும் என்று உறுதியாகத் தெரிவித்தார். 

கொஞ்ச நாட்கள் சகாக்கள் அமைதிப் பாதையில் நடந்தார்கள். சீக்கிரமே, பழக்க தோஷம் அவர்களைப் போராட்டப் பாதைகளுக்கு அழைத்துப்போனது.

ஆங்கிலேயர், கம்யூனிஸ்ட்கள் ஆகிய இருவரில், ஆங்கிலேயர்கள்தாம் லீயின் முதல் எதிரிகள். அதே சமயம், கம்யூனிஸ்ட்களும் தம் எதிரிகள்தாம் என்பதில் லீ தெளிவாக இருந்தார். PAP கட்சியில் இரண்டு அணிகள் இருப்பது ஊரறிந்த ரகசியமாகிவிட்டது. PAP  போர்வையில் ஏராளமான கம்யூனிஸ்ட்கள்: அவர்கள் சித்தாந்தத்தை எதிர்த்தாலும், அவர்கள் ஊடுருவலைத் தவிர்க்கும் வழி தெரியாத லீயும் அவர் பின் நிற்பவர்களும். இந்தப் பிளவை விரிசலாக்கி, இரு சாராருக்கும் அரசியல் சாவு மணி அடிக்க அரசாங்கம் திட்டமிட்டது. முதலமைச்சர் அசெம்பிளியின் அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்தார்.

அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் பில் கூடே (Bill Goode) தாக்குதல்  தொடங்கினார். நாட்டின் அமைதியைச் சில தீய சக்திகள் குலைப்பதாகக் குற்றம் சாட்டினார். பொதுவான இந்தத் தாக்குதல் அடுத்தபடியாக, PAP மீது திரும்பியது. ‘ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்னும் பேராசையால், PAP – யும்,  அவர்களிடையே நிறைந்திருக்கும் கம்யூனிஸ்ட்களும், சிங்கப்பூர் வீதிகளில் வன்முறை, ரத்த வெள்ளம், அமளி ஆகியவற்றைத் தூண்டிவிடுகிறார்கள். நம் மாண்புமிகு அங்கத்தினர் (லீ) ஜனநாயக சுயாட்சியில் சிங்கப்பூர் முன்னேறும் என்று நம்பினால், அவர் கம்யூனிஸ்ட்களை எதிர்க்கவேண்டும். இங்கே, இப்பொழுதே, இந்த சபையில் தன் எதிர்ப்பை உரத்த குரலில், சுற்றி வளைத்து மழுப்பாமல், வார்த்தை ஜாலங்கள் இல்லாமல்,  தெளிவாகச் சொல்லவேண்டும்.’

பதில் கொடுத்தார், ‘PAP – ன் கொள்கை காலனி ஆட்சியை அஹிம்சை வழியில் அழிப்பதுதான். நாங்கள் வன்முறையை வெறுக்கிறோம். சுதந்திரமான, கம்யூனிஸம் இல்லாத ஜனநாயக நாடு உருவாவதைக் கம்யூனிஸ்ட்கள் மட்டுமல்ல, வேறு யார் தடுத்தாலும், அவர்களை எதிர்த்துப் போராடுவோம். ’                                            

தேவன் நாயரும், கூட்டாளிகளும் கைகளில் எடுத்திருக்கும் யூனியன் ஆயுதத்தாலேயே, அவர்களுக்குப் பதிலடி தர லீ முடிவு செய்தார். பொதுஜனங்களைப் போலவே, பெரும்பாலான தொழிலாளர்களும் அமைதி விரும்பிகள். வன்முறையில் ஈடுபடுவதும், தூண்டி விடுவதும் ஒரு சில விஷமிகள்தாம். பிரச்சனைகளுக்கு வன்முறை என்றுமே தீர்வு தராது, அஹிம்சை வழிதான் ஒரே வழி என்று அவர் நிரூபித்துவிட்டால், யூனியன்களைக் கம்யூனிஸப் பாதையிலிருந்து மீட்டுவிடலாம். அந்த வாய்ப்பு லீக்கு வந்தது.

ஜூன் 1955. சிட்டி கவுன்சில் லேபர் யூனியன் (City Council Labour Union) என்னும் தொழிற்சங்கம், நகரத் துப்புரவுத் தொழிலாளிகளின் அமைப்பு. பல்லாயிரம் உறுபினர்கள் கொண்டது. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். தினசரிச் சம்பளக்காரர்கள். ஊதிய உயர்வு கேட்டார்கள். அரசாங்கம் தரவில்லை. ஆகஸ்ட் 17 முதல் வேலை நிறுத்தம் செய்வதாக யூனியன் நோட்டீஸ் விட்டார்கள். அவ்ர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, கான்ட்ராக்டர்கள் மூலமாகத் துப்புரவுப் பணிகளைச் செய்துகொள்வோம் என்று  அரசாங்கம் சொன்னது. பேச்சு வார்த்தைகள் பல சுற்றுக்களாக நடந்தன. அத்தனையும் தோல்வி கண்டன.

எச்சரித்தபடியே, தொழிலாளிகள் வேலை நிறுத்தம் தொடங்கினார்கள். யூனியன் தலைவர் சுப்பையா என்னும் தமிழர்.லீயைச் சந்தித்தார். தங்கள் சட்ட ஆலோசகராக இருக்குமாறு லீயைக் கேட்டுக்கொண்டார். லீ சம்மதித்தார். ஒரே ஒரு நிபந்தனை விதித்தார் – வேலை நிறுத்தம் அமைதி வழியில் மட்டுமே நடக்கவேண்டும். ஒருவேளை, பாதை மாறினால், லீ பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வார், அவர்கள் நடவடிக்கைகளைப் பகிரங்கமாகக் கண்டிப்பார். சுப்பையா ஒத்துக்கொண்டார்.

லீ சிட்டி கவுன்சில் அதிகாரிகளோடு பேச்சு வார்த்தைகள் நடத்தினார். இரு தரப்பிலும், முரட்டுப் பிடிவாதமாக இருக்காமல், விட்டுக்கொடுத்தார்கள். சுமுக முடிவு. தொழிலாளிகளுக்குச் சம்பள உயர்வு கிடைத்தது. ஜனநாயக வழியில், அமைதிப் பாதையில், சட்ட வரம்புகளை மீறாமல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் திறமை கொண்ட லீ வன்முறையைக் கடைப்பிடித்துக்கொண்டிருந்த கம்யூனிஸ்ட்களுக்கு மாற்றாக இருப்பார் என்னும் எண்ணம், நம்பிக்கை மக்கள் மனங்களில் வளர்ந்தது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments