முகப்பு
நலம் நலமறிய ஆவல்

21. மருத்துவ உலகின் மனசாட்சி

அப்போதெல்லாம் மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே நம்பிக்கை என்ற ஒன்று இருந்தது… கொஞ்ச நேரம் நோயாளியோடு நான் அன்பாகவும் அரவணைப்போடும் பேசிக்கொண்டிருந்தாலே,

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:14 PM
பகிர்:
ஒரு டாக்டரின் கையெழுத்து வேண்டுமானால் உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால், அவர் கொடுக்கும் ‘பில்’கள் எல்லாம் தெளிவாகப் புரியும்படி தட்டச்சு செய்யப்பட்டிருக்கும்.
- எர்ல் வில்சன்

அவர் ஒரு ஆயுர்வேத மருத்துவர். அவர் தன் காரில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு விபத்து ஏற்பட்டது. எதிரே சென்றுகொண்டிருந்த ட்ரக் ஒன்று திடீரென்று நிற்கவும், இவருடைய கார் ட்ரக்கின் மீது லேசாக மோதி நின்றது. அந்த லேசான மோதலில், காரின் ஸ்டீயரிங் அவருடைய வயிற்றிலும் நெஞ்சுப் பகுதியிலும் குத்தியது. ஆனால், அவருக்கு அப்போது பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. காரை ஓட்டிக்கொண்டே வீட்டுக்குப் போய்விட்டார். ஆனால், கொஞ்ச நேரம் கழித்து கடுமையான வியர்வையும் நெஞ்சுவலியும் ஏற்பட்டது. உடனே பக்கத்து நகரத்திலிருந்த ஒரு மல்ட்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவருக்கு ஆன்ஜியோக்ராஃபி செய்யப்பட்டு, உடனே ஆன்ஜியோப்ளாஸ்டியும் (கையில் செருகப்பட்ட ஊசி மூலமாக இதய அடைப்பை நீக்குதல்) செய்யப்பட்டது.

மறுநாள், தன் அடிவயிற்றுப் பகுதியில் கடுமையான வலி இருப்பதாக நோயாளி சொன்னார். ஆனால் அதுபற்றி ஐ.சி.யு.வில் இருந்த யாரும் கண்டுகொள்ளவில்லை. அன்று பகல் அங்கு அவரைப் பார்க்க வந்த அவர் நண்பர் ஒருவரிடம் விஷயம் சொல்லப்பட்டது. அவர் ஒரு ஜெனரல் சர்ஜன். உடனே அவர் அங்கிருந்த ட்யூட்டி டாக்டரிடம் நண்பருக்கு நடந்த விபத்து பற்றியும், அவர் நெஞ்சில் கார் ஸ்டீயரிங் அடித்தது பற்றியும் சொல்லிவிட்டு, உடனே அடிவயிற்றை ‘அல்ட்ரா சவுண்டு ஸ்கேன்’ (sonography) செய்து அந்த அறிக்கையை சீனியர் டாக்டரிடம் காட்டும்படியும் சொல்லிவிட்டுச் சென்றார்.

அவர் சென்ற மூன்றாவது நாள், அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
அந்த ஆயுர்வேத மருத்துவ நண்பர் மிகவும் சீரியஸாக இருப்பதாகவும், அவரது ரத்த அழுத்தம் நார்மலுக்கு மிகவும் கீழே இறங்கிவிட்டதாகவும், அவரது நாடித்துடிப்பு விகிதமும் ரொம்ப அதிகமாக இருப்பதாகவும், அவரது அடிவயிறு பெருத்து வீங்கியிருப்பதாகவும் செய்தி சொன்னது அது.

உடனே மருத்துவமனைக்கு விரைந்த ஜென்ரல் சர்ஜன், தன் நண்பரின் நிலையைப் பார்த்து அதிர்ந்துபோனார். மூன்று நாளாகியும் அவர் கேட்டுக்கொண்டபடி ஸ்கேன் எதுவும் எடுக்கப்படவில்லை! ஏன் எடுக்கவில்லை என்று கோபமாக அவர் அங்கிருந்த இதயவியல் மருத்துவரிடம் கேட்டபோது, ‘அதெல்லாம் ஆன்ஜியோக்ராஃபி செய்ததன் பின்விளைவுகள்’ என்று சாதாரணமாக அந்த ‘இதய நிபுணர்’ சொன்னார். ஆனால், நம் சர்ஜன் நண்பர் அவருடன் மிகவும் கடுமையாகப் பேசிய பிறகு வேண்டா வெறுப்பாக ஸ்கேன் எடுக்கப்பட்டது.


நோயாளியின் அடிவயிற்றில் இரண்டு லிட்டர் ரத்தம் தேங்கியிருந்தது ஸ்கேன் ரிபோர்ட்டில் தெரியவந்தது. உடனே, அதற்கான சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனாலும், ஆயுர்வேத டாக்டர் பிழைக்கவில்லை. அதுமட்டுமா? அவர் குடும்பத்துக்கு எட்டு லட்ச ரூபாய்க்கு ‘பில்’ கொடுத்தது மருத்துவமனை!
கடுப்பாகிப்போன சர்ஜன் நண்பர், மருத்துவமனை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். எல்லாம் சரியாக நடந்ததாகவே அவர்கள் ‘பேப்பர்’களைக் காட்டினார்கள்! மருத்துவமனை மீது வழக்குத் தொடுக்க, இறந்தவரின் மனைவி விரும்பவில்லை. அந்த மனநிலையில் அப்போது யார்தான் இருப்பார்கள்? கடைசியில், எட்டு லட்சமாக இருந்த பில் தொகை பேச்சுவார்த்தைகள் மூலம் நான்கு லட்சமாகக் குறைந்தது, அவ்வளவுதான் (பக்கம் 55-56)!


ஒரு மனிதனின் உயிரையும் கொடுத்து, அவன் உடலை மீண்டும் பெறுவதற்குப் பெரும் தொகையையும் கொடுக்கவேண்டி இருப்பதைவிட பெரிய மானிட சோகம் வேறு எதுவும் உண்டா? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளி இறந்துவிட்டாரென்றால், அவர் குடும்பத்தாரிடம் ஒரு பைசாவும் கேட்கக்கூடாது என்று இந்த உலகில் எந்த அரசாவது அறிவித்துள்ளதா? அப்படி ஒரு அதிசயம் நடக்காதா என்று என் மனம் ஏங்குகிறது!
எந்த மருத்துவத் துறையானாலும் மனசாட்சி உள்ள மனிதர்கள் சிலராவது இருக்கத்தான் செய்வார்கள். அலோபதியும் அதற்கு விதிவிலக்கல்ல. டாக்டர் ஹெக்டே, டாக்டர் தீபக் சோப்ரா போன்றவர்களின் கருத்துகளை ஏற்கெனவே பார்த்தோம். அந்த வரிசையில் இப்போது மேலும் இரண்டு பேர்.


அலோபதி டாக்டர்களான டாக்டர் அருண் காத்ரே, டாக்டர் அபய் ஷுக்லா ஆகிய இருவரும், மேலே விவரித்த மாதிரியான பல நிகழ்வுகளை ஒரு நூலில் பதிவு செய்திருக்கின்றனர். மருத்துவமனைகள், மருந்துக் கம்பனிகள், மருத்துவர்கள் – இந்த முக்கோணம் எப்படியெல்லாம் வேலை செய்கிறது, எப்படியெல்லாம் மக்களைச் சுரண்டுகிறது என்பதை தங்களுக்குத் தெரிந்த நேர்மையான, துணிச்சலான டாக்டர்களிடம் நேர்காணல்கள் செய்து, அதை ஒரு நூலாக இருவரும் வெளியிட்டனர். Dissenting Diagnosis என்ற அந்த நூலைப் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். ‘‘Voices of Conscience from the Medical Profession” என்று அதற்கு உப தலைப்பும் உண்டு. ஆரோக்கியம் பற்றி எழுத்தில் உருவான சத்யமேவ ஜயதே என்று அந்த நூலைச் சொல்லலாம்.


 
டாக்டர் அருண் காத்ரே - டாக்டர் அபய் ஷுக்லா
மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடக்கும் பரிசோதனைகளில் இருக்கும் குளறுபடிகளைப் பற்றிக் கொஞ்சம் பார்த்தோம். மருத்துவமனைகள், மருந்துக் கம்பனிகள், மருத்துவர்கள் என்ற முக்கோணம் செய்யும் கோணல்களை இங்கே கொஞ்சம் பார்க்க இருக்கிறோம். இந்த கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் நிகழ்வுகள், மேற்கோள்கள் எல்லாம் மேலே சொன்ன நூலில் இருந்து எடுக்கப்பட்டவை.


மருத்துவ உலகம் முழுக்க முழுக்க வணிகமயமாகிவிட்டது. ஆயிரத்தில் ஒருவர்கூட மனித உயிருக்கு மதிப்பு கொடுப்பதில்லை. ஒரு பக்கம் தீவிரவாதிகள், ஜாதி, மத வெறியர்களின் வன்முறை என்றால், இன்னொரு பக்கம் வணிகமயமாகிவிட்ட மருத்துவ உலகின் நுட்பமான, அதிநவீன தொழில்நுட்பக் கொலைகள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன, அன்றாடமும். அதைப் புரிந்துகொள்வது நம் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, நம் உயிருக்கும் நல்லது என்பதால், அந்தப் புத்தகத்தில் உள்ள சில முக்கியமான தகவல்களையும் நிகழ்வுகளையும் இங்கே பகிர விரும்புகிறேன்.

டாக்டர் அருண் காத்ரே, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மும்பையில் பணியாற்றிவரும் ஒரு கைனகாலஜிஸ்ட் (மகளிர் நல மருத்துவர்). டாக்டர் அபய் ஷுக்லா, பொதுமக்கள் ஆரோக்கியத் துறையில் உள்ளவர். ‘சாத்தி’ என்ற அமைப்பின் உதவியோடு (Support for Advocacy and Training to Health Initiatives), 78 மனசாட்சியுள்ள நேர்மையான டாக்டர்களைப் பேட்டி கண்டு அவர்களது வாக்குமூலங்களையும், அனுபவங்களையும் அந்த நூலில் பதிவு செய்துள்ளனர். ஹிந்தியில் ‘சாத்தி’ என்றால் ‘நண்பன்’ என்றுதான் அர்த்தம்!


 
மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, நாசிக், புனே, டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள பல டாக்டர்கள், துணிச்சலாகப் பேட்டி கொடுத்துள்ளனர். சரி, அவர்கள் நேர்மையானவர்கள், மருத்துவ ஒழுக்கம் தவறாதவர்கள் என்று எப்படித் தெரியும்? ரொம்ப சிம்பிள். நீங்கள் நேர்மையானவராக இருக்கும்பட்சம், உங்கள் நண்பர்களில் யார் நேர்மையானவர் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? அப்படித்தான். தங்களின் நெருங்கிய, நேர்மையான நண்பர்களை அந்த இருவரும் முதலில் பேட்டி எடுத்தனர். பின், அவர்கள் மூலமாக மற்றவர்கள். ஒரு நேர்மைச் சங்கிலித் தொடர்போல. அதில் ‘சாத்தி’யின் பங்கும் உண்டு. இது ‘சாத்தி’யம்தானே?
ஆனால், அதிலும் சில பிரச்னைகள் இருந்தன. சிலர் உண்மையைச் சொல்ல விரும்பினர். ஆனால், அதனால் அவர்களுக்குப் பிரச்னைகள் வரும் என்ற நிலை இருந்தது. உதாரணமாக, அதில் 66 பேர் தனிப்பட்ட முறையில் ‘ப்ராக்டீஸ்’ செய்பவர்கள். பலர் மல்ட்டி-ஸ்பெஷாலிடி மருத்துவமனைகளில் பணிபுரிபவர்கள். தான் யார், பணிபுரியும் மருத்துவமனையின் பெயர் முதலிய விவரங்களையெல்லாம் சொன்னால், அவர்கள் சோற்றில் மண் விழுந்துவிடலாம்! எனவே, அவர்களில் 37 டாக்டர்கள் மட்டுமே தங்கள் பெயர்களை வெளியிட அனுமதி கொடுத்தனர். ஆனால், தங்கள் பேட்டிகளைப் பதிவு செய்துகொள்ளலாம் என்று அனைவருமே எழுத்தில் அனுமதி கொடுத்தனர். அவர்கள் சொன்னதெல்லாம் முறையாகப் பதிவு செய்யப்பட்டது.

உதாரணமாக, அவர்கள் அனைவரிடமும் ஒன்பது கேள்விகள் கேட்கப்பட்டன.

1. தனியார் மருத்துவமனைகள் / நிறுவனங்கள் செயல்படும் விதம் உங்களுக்குத் திருப்திகரமாக உள்ளதா?
2. இல்லைனெனில், எந்தெந்த விஷயங்களில் தரம் குறைந்துபோயுள்ளது? எங்கேயெல்லாம் பிரச்னைகள் எழுந்துள்ளன?
3. உங்கள் அனுபவங்களில் இருந்து, மருத்துவத் துறையின் முறைகேடான செயல்கள் தொடர்பான சில உதாரணங்களைச் சொல்ல முடியுமா?
4. நோயாளிகளுக்குப் பிரச்னையையும் துன்பத்தையும் ஏற்படுத்திய மருத்துவத் துறையின் முட்டாள்தனமான செயல்பாடுகள் பற்றி உங்கள் அனுபவம் சார்ந்த உதாரணங்கள் கொடுக்க முடியுமா?
5. மருத்துவச் சேவைக்காக அநியாயமாக, கொடுப்பவர் தகுதிக்கு மேல் மிக அதிகமாகப் பணம் பிடுங்கப்பட்டது பற்றிச் சொல்ல முடியுமா?
6. மருத்துவத் துறையில் மல்ட்டி-ஸ்பெஷாலிடி மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்கள் ஏற்படுத்திய பாதிப்பு என்ன என்று நினைக்கிறீர்கள்?
7. மருத்துவமனைகளின் இயக்கத்தில் இன்சூரன்ஸின் பங்கு என்ன?
8. மருத்துவமனைகள் இயங்குவதன் பின்னணியில், மருந்துக் கம்பனிகளின் தாக்கம் என்ன?
9. நிகழ்கால நிலைமையை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
இந்தக் கேள்விகளுக்கு ஒவ்வொருவரும் கொடுத்த பதில்களையும், அவர்களது அனுபவங்களையும் நூலாக வெளியிட்டுள்ளனர்.

பிணத்தின் ஒரு பாதத்தில் கட்டித் தொங்கவிடப்பட்ட ஒரு அட்டையைக் காட்டும் புத்தகத்தின் முகப்பு வரைபடம் என்னென்னவோ சொல்கிறது.
 
பெயர் சொல்ல விரும்பாத ஒரு டாக்டர் சொன்ன அனுபவம்தான் மேலே விவரிக்கப்பட்டது. அதனால்தான், பக்கங்களைக் கொடுத்துள்ளேன்.
‘‘மருத்துவத் துறையில் நேர்மையை நாம் கைவிட்டுவிட்டோம். அது வியாபாரமாகிவிட்டது… முன்பெல்லாம், மாத்திரைகளல்லாத வெறும் ‘ப்ளேசிபோ’க்களைக் கொடுத்துக்கூட குணப்படுத்திக்கொண்டிருந்தோம். மக்களும் குணமடந்தனர். காரணம், அப்போதெல்லாம் மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே நம்பிக்கை என்ற ஒன்று இருந்தது… கொஞ்ச நேரம் நோயாளியோடு நான் அன்பாகவும் அரவணைப்போடும் பேசிக்கொண்டிருந்தாலே, அவருடைய ரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாகக் குறைவதை என்னால் காண முடிந்தது… மருந்துகள் மட்டும் உதவுவதில்லை. டாக்டருக்கும் நோயாளிக்கும் இடையே உள்ள உறவு மிக முக்கியமானது… இப்போதெல்லாம் நாங்கள் மனிதர்களுக்கு வைத்தியம் செய்வதில்லை. ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன் அறிக்கைகள் ஆகியவற்றுக்குத்தான் வைத்தியம் செய்துகொண்டிருக்கிறோம்… மருத்துவப் படிப்பின் பயிற்சியில்கூட, நாங்கள் ஒரு மனிதனை முழுமையாகப் பார்ப்பதே இல்லை. உறுப்பு உறுப்பாகத்தான் பார்க்கக் கற்றுக்கொள்கிறோம்”
இப்படிச் சொன்னவர், பேட்டி எடுக்கப்பட்ட முதல் டாக்டர். மும்பையில் இருக்கும் மூத்த சர்க்கரை நோய் நிபுணர், டாக்டர் விஜய் அஜ்கோன்கர். மருத்துவ உலகின் மனசாட்சிபோல, சில முக்கியமான விஷயங்களை அவர் சொல்லியிருக்கிறார். ஒரு மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே இருக்க வேண்டிய அன்னியோன்யமான உறவு எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதை அவர் புரிந்துகொண்டுள்ளார். அதுமட்டுமல்ல, அலோபதியின் அடிப்படைத் தவறே மனிதனை முழுமையாகப் பார்க்க அது மறுப்பதுதான். அடிப்படைத் தத்துவம், பயன்பாடு இரண்டிலும் உள்ள முக்கியக் குறைபாடுகளை அவர் அடையாளப்படுத்தியுள்ளதாக நான் உணர்கிறேன்.

Caption


என் மாமனார் உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்தபோது, நாங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மருத்துவமனை வாசலில் காத்திருந்தோம். வெளியே வந்த டாக்டரிடம், அவருக்கு என்ன பிரச்னை என்று நான் கேட்டேன். ‘ஹீ இஸ் சிக்’ என்று ஒரு காப்பியம் எழுதக்கூடிய அளவுக்கு விளக்கமான விவரங்களைக் கூறிவிட்டு, ஒரு கணம்கூட நிற்காமல், என்னை ஏறிட்டுக்கூடப் பார்க்காமல், அந்த இளம் புது மருத்துவர் சென்றார்! என் ‘குட்டியாப்பா’ கதையில்கூட இந்நிகழ்ச்சியை நான் குறிப்பிட்டிருந்தேன்.

அலோபதி மருத்துவத்தின் மூலமாக வரும் எல்லாப் பிரச்னைகளுக்குமே இந்த இரண்டுதான் காரணம். படித்துவிட்டோம் என்ற திமிர். நோயாளிகளை நோக்கிய ஒரு அலட்சியம். லட்சம் லட்சமாகக் கொடுத்து வாங்கிய படிப்பு. கோடி கோடியாகச் சம்பாதித்தால்தான் கணக்கு சரியாகும். அந்தக் கணக்கை நோக்கித்தான் பெரும்பாலான டாக்டர்கள் விரைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன சொன்னாலும், அதை நாம் வேதவாக்காக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், வேதம் ஓதுவதெல்லாம் ‘டிகிரி’ வாங்கிய சாத்தான்கள் என்பதுதான் பிரச்னையே!

‘‘ஒரு நோயாளி இரண்டாம் மருத்துவரைப் பார்க்கும்போது, முதல் மருத்துவர் கொடுத்த அதே மருந்தைத்தான் இரண்டாம் மருத்துவரும் கொடுப்பார். ஆனால், கம்பெனியை மாற்றிவிடுவார்! அவர் வேறு ஏதோ புதியதைக் கொடுப்பது மாதிரியான ஒரு பிம்பத்தை ஏற்படுத்திவிடுவார்!... சக மனிதர்களின் நோயைப் பயன்படுத்தி பணம் பண்ணுவது நமது நோக்கமே அல்ல. ஆனால், அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. செத்துவிடுவார் என்று நன்றாகத் தெரிந்தும், எழுபது எண்பது வயதுடைய முதியவரை ஐ.சி.யு.வில் வென்ட்டிலேட்டர்களில் வைத்திருக்கிறார்கள். ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? வேண்டாமே, அந்த முதிய நோயாளி வீட்டுக்குப் போய் தன் குடும்பத்தினர் சூழ நிம்மதியாக உயிர் விடட்டுமே, விட்டுவிடுங்களேன்… இன்றைக்கு சாகப்போகிறவரை நாளைவரை உயிர் வாழவைப்பதன் நோக்கம் என்ன? பொருளாதார ரீதியில் அவருக்குப் பிரச்னை கொடுக்கலாம், குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தலாம் என்பதைத் தவிர?...” என்று கேட்கும் டாக்டர் அஜ்கோன்கர், நம் மரியாதைக்கு உரியவராகிறார்.

குடிப்பதற்கான சமாசாரங்களை டாக்டர்களுக்கு மருந்துக் கம்பெனிகள் இலவசமாக வாங்கிக் கொடுத்து, தம் கம்பெனி மருந்துகளையே அவர்கள் நோயாளிகளுக்கு எழுதிக்கொடுக்குமாறு வற்புறுத்துகின்றன என்றும் குற்றம் சாட்டியுள்ளார் அவர்! ‘கிக்’ ஏற்றப்பட்ட டாக்டர்களால் சிபாரிசு செய்யப்படும் மருந்துகளால் மக்களுக்கு என்னாகுமோ என்று நினைத்தால் ‘பக் பக்’ என்று மனம் அடித்துகொள்கிறது!


ஒரு நீதிபதிக்குப் பதவி உயர்வு கிடைத்தது. ஆனால், அதற்காக சில மருத்துவப் பரிசோதனைகளையெல்லாம் செய்து சான்றிதழையும் அவர் காட்டவேண்டி இருந்தது. அதற்காக அவர் ஒரு மருத்துவரிடம் சென்றார். அவர் அரசு நியமித்த மருத்துவர் என்பது சொல்லாமலே தெரிந்திருக்கும். ஆனால், நீதிபதி புதிய பதவியை வகிக்கத் தகுதி இல்லாதவர் என்றும், அவருடைய ரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருப்பதாகவும் அந்த மருத்துவர் சொன்னார்.

உண்மையிலேயே நீதிபதிக்கு ரத்தம் கொதித்தது! வேறு ஒரு மருத்துவரிடம் காட்டிய நீதிபதி, தன் ரத்த அழுத்தம் நார்மலாகத்தான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார். ஏன் இப்படி தவறாகச் சொல்கிறாய் என்று அந்த அரசு மருத்துவரைக் கேட்டபோது, சரியான அறிக்கையைக் கொடுப்பதானால் எனக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்று கேட்டிருக்கிறார்! வென்றது நீதிமானா புத்திமானா என்று பட்டிமன்றம் நடத்தலாம்! இந்த நிகழ்ச்சியையும் டாக்டர் அஜ்கோன்கர்தான் குறிப்பிடுகிறார்.
இன்னும் இருக்கிறது, பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.