16. ஹலோ, அலோபதியா?
மனத்தின் ஆற்றல் பற்றி அவர் சொல்லும் ஒரு தகவல் சிந்திக்கத்தக்கது. குறிப்பிட்ட வயதில், உதாரணமாக முப்பது என்று வைத்துக்கொள்வோம். மனநலக் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட சிலர் பல ஆண்டுகள் அங்கே இருந்து பின்பு குணமடைந்து திரும்பினர். ஆனால் அவர்களுக்கு வயதாகவே இல்லை! அதாவது, பத்து இருபது ஆண்டுகள் கழிந்த அடையாளம் அவர்கள் உடலில் எங்குமே இல்லை.
ஒவ்வொரு நோய்க்கும் ஒரு மாத்திரை உண்டு என்பது உண்மையல்ல. ஆனால், நாளடைவில் ஒவ்வொரு மாத்திரைக்குப் பின்னாலும் நிச்சயமாக ஒரு நோய் உண்டு. - டாக்டர் பி.எம்.ஹெக்டே |
ஒரு பயிற்சி டாக்டரின் அனுபவம்
எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு பயிற்சி மருத்துவராக அவர் இருந்தார். அவரோடு படித்த இன்னொரு நண்பரும் உடன் இருந்தார். அவர்களோடு ஒரு சீனியர் டாக்டர். ஆக, மூன்று பேர். சீனியர் டாக்டர் பத்து நோயாளிகளைப் பார்த்து முடித்திருந்தார். ஆனால் நம் நாயகரோ, ஒரேயொரு நோயாளியோடு மல்லாடிக்கொண்டிருந்தார். ஐந்து ஆண்டுகள் படித்ததெல்லாம் மறந்துபோன மாதிரி இருந்தது. ஒன்றும் ஓடவில்லை. அவர் திண்டாடுவதைப் பார்த்துக்கொண்டிருந்த செவிலியர், அவரைப் பார்த்து சிரித்துக்கொண்டே சென்றனர். அந்த ஏளனச் சிரிப்பு அவருக்கு அவமானமாக இருந்தது. அப்போதுதான் படிப்பை முடித்திருந்த இளைஞர்கள் இருவரும் செய்வதறியாது திகைப்பதைப் பார்க்க அவர்களுக்கு வேடிக்கையாக இருந்திருக்க வேண்டும்.
திடீரென்று அவர்கள் பக்கம் திரும்பிய சீனியர் டாக்டர், ‘என்னப்பா, என்ன செய்கிறீர்கள்? நானும் உங்கள மாதிரிதான் இருந்தேன். சரி சரி, நான் சொல்ற மாதிரி மருந்து எழுதிக்கொடுங்க’ என்றார். தூரத்தில் இருந்தே மருந்தையும் சொன்னார். இளைஞர்கள் இருவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஆஹா, ‘சீனியர் டாக்டர் என்றால் சீனியர் டாக்டர்தான்’ என்று இருவரும் வியந்தனர்.
அடுத்த நோயாளி வந்து தன் பிரச்னைகளைச் சொன்னபோதும் அந்த இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அதைக் கவனித்த சீனியர் டாக்டர் அடுத்து வந்த நோயாளிக்கும் மருந்தைச் சொன்னார். ஆனால், என்ன ஆச்சரியம்! முதலில் சொன்ன அதே மருந்துதான்! அதுமட்டுமல்ல, அடுத்தடுத்து வந்த நோயாளிகளுக்கும் அதே மருந்துதான்!
கூட்டிக் கழித்து, வந்துபோன ஐம்பதுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு அந்த மூன்று டாக்டர்களும் கொடுத்த மருந்துகள் நான்குதான்! SDT, APC, Gelusil, Deriphyllin! அவ்வளவுதான்!
சளி, இருமல், காயம், புண்கள் என்று சொன்னால் SDT. வலி, ஜுரம் ஆகியவற்றுக்கு APC. வயிற்றுத் தொந்தரவுகளுக்கு Gelusil. மூச்சிரைப்பு, ஆஸ்துமா என்று சொன்னால் Deriphyllin என்று சொல்லி, “ஐந்து வருடப் படிப்புக்கு நான்கே நிமிடத்தில் முற்றுப்புள்ளி வைத்தார்” சீனியர் டாக்டர்!
இதைச் செய்வதற்கு ஏன் ஐந்து ஆண்டுகள் மெனக்கெட்டுப் படிக்க வேண்டும் என்ற கேள்வி, மனசாட்சியுள்ள அந்த இளம் மருத்துவருக்கு ஏற்பட்டது. “இவ்வளவுதானா எம்.பி.பி.எஸ்.? அப்படியானால் இதை ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் சொல்லிக்கொடுத்து, ஒவ்வொருவர் வீட்டுக்கும் மாதாமாதம் ரேஷனைப்போல மாத்திரைகளைக் கொடுத்துவிடலாமே” என்று அங்கலாய்க்கிறார் அந்த டாக்டர். அவர் வேறு யாருமல்ல, நாம் ஏற்கெனவே சந்தித்த டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான்தான்! தன் அனுபவங்களை ஒளிவு மறைவின்றி “நீங்களும் ஆங்கில மருத்துவராகுங்கள்” என்ற தனது நூலில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்!
இன்றைக்கு உலகெங்கிலும் பரவியிருக்கின்ற, படித்தவர்களாலும் படிக்காதவர்களாலும் மிகுந்த மரியாதையுடன் நம்பப்படுகிற அலோபதி மருத்துவம் பற்றி அவ்வப்போது ஆங்காங்கே பார்த்துக்கொண்டுதான் வந்தோம். அலோபதியின் ‘கவனிப்பில்’ சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்னைகள் எவ்விதம் மோசமாகின்றன என்றும் பார்த்தோம். அலோபதியின் இயங்கு முறை பற்றி இங்கே இன்னும் கொஞ்சம் விலாவாரியாகப் பார்க்க இருக்கிறோம்.
மனிதனுக்கு சேவை செய்ய வரும் எல்லா மருத்துவமும் மரியாதைக்குரியதுதான். சந்தேகமே இல்லை. இன்று ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு, குறிப்பாக பெரு நகரங்களில், 24 மணி நேர க்ளினிக்குகளும், எல்லா வசதிகளும் கொண்ட மருத்துவமனைகளும் பெருகிவிட்டன. அவற்றில் நோயாளிகளாக இருக்க ‘விரும்பி வரும்’ மனிதர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டேதான் போகிறது. ‘அமெரிக்கர்கள் சந்திரனுக்கு அப்போலோவை (ராக்கெட்டை) அனுப்புகிறார்கள். ஆனால் நாம், அப்போலோவுக்கு சந்திரனை (நோயாளியின் பெயர்) அனுப்புகிறோம்’ என்று நகைச்சுவை ததும்ப ஓர் உண்மையைச் சொன்னார் ஒரு பேராசிரிய அண்ணன்!
மருத்துவமனைகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தமாதிரி, நோயாளிகளின் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டு போவதுதான் வாழ்க்கை நமக்குக் காட்டும் முரண். இது முரணழகு அல்ல. முரணசிங்கம்! இயற்கையின் ஏளனப் புன்னகை! ரொம்ப நுட்பமானது. அதை நாம் கவனிப்பதே இல்லை!
எதிர்மறையான கருத்துகளெல்லாம் இருக்கட்டும். அலோபதி மருத்துவம் மனிதனை முற்றிலுமாகக் குணப்படுத்துகிறதா என்ற கேள்விக்கு, இன்று தேசிய அளவிலும், உலக அளவிலும் புகழ் பெற்றிருக்கும் பல அலோபதி மருத்துவர்கள் சொல்லும் ஆணித்தரமான, அழுத்தமான பதில், ‘இல்லவே இல்லை’ என்பதுதான்!
நான் எந்த மருத்துவத்துக்கும் எதிரான கருத்தை முன்வைக்கவோ, முன்முடிவுகளுடனோ இதை எழுதவில்லை. ஆனால் என் மனத்தில் எழும் கேள்விகளுக்கும், அறிவுள்ள, மனசாட்சியுள்ள மனிதர்களின் மனங்களில் எழும் கேள்விகளுக்கும் அலோபதி நியாயமான பதில் சொல்லுமா என்று தெரியவில்லை. ஏற்கெனவே நான் சொன்னதுபோல, அச்சத்தை வைத்து லட்சங்களில் அமோகமாக வியாபாரம் நடக்கிறது என்பதுதான் அலோபதி காட்டும் நிஜம். நியாயமான எந்தக் கேள்விக்கும் பதில் கிடையாது. விஷத்தன்மையுள்ள வேதிப்பொருள் கலக்காத ஒரு மாத்திரைகூட அலோபதியில் கிடையாது என்பதுதான் சத்தியம். அலோபதி பற்றிய ஆழமான புரிந்துகொள்ளலை ஏற்படுத்தவே நான் முயன்றுகொண்டிருக்கிறேன்.
மெக்காலேயின் விஷக்கருத்துகள்
இந்திய மரபில் ஆயுர்வேதம், சித்தா, இயற்கை மருத்துவம் போன்ற பாரம்பரிய மருத்துவங்கள் இருந்தன; இருக்கின்றன. அதேபோல யூனானி, ஹோமியோபதி, அக்குபஞ்சர் போன்ற மருத்துவங்களும் இருக்கின்றன. ஆனால், இன்று எல்லாவற்றிலும் அலோபதியின் தாக்கம் இல்லாமலில்லை. இந்திய அக்குபஞ்சரைத் தவிர.
மனித உடலை அலோபதி கூறுபோட்டுப் பார்க்கிறது. ஆங்கிலேயர்களைப்போல அலோபதியும் ‘பிரித்தாளும் தொழில்நுட்ப’த்தையே கடைப்பிடிக்கிறது. குருடர்கள் யானையைப் பார்த்த மாதிரி, அலோபதி உடலை அணுகுகிறது. பகுதி பகுதியாக, உறுப்பு உறுப்பாக. பல்லைப் பிடுங்க வேண்டுமென்றால் அதற்கு இ.என்.டி. மருத்துவர் தேவை. ஆனால் நோயாளிக்கு இதயத்தில் பிரச்னை இருக்குமானால் பல்லைப் பிடுங்கலாமா வேண்டாமா என்று ‘கார்டியாலஜிஸ்ட் ஒபினியன்’ பெற்ற பிறகுதான் செய்யமுடியும்! ஏனெனில், பல் மருத்துவருக்கு இதயத்தைப் பற்றி எதுவும் தெரியாது! அதேபோல இதய நிபுணருக்கு பல்லைப் பற்றி எதுவும் தெரியாது! இதுதான் நடைமுறை.
பல்லில் உள்ள உயிரணுக்களும், இதயத்தில் உள்ள உயிரணுக்களும் வேறு வேறான கூறுகளையும், அமைப்பையும் கொண்டவை அல்ல. ஒரு உயிரணு எப்படி உருவாகிறதோ அதேபோலத்தான் நம் உடலில் உள்ள கோடிக்கணக்கான உயிரணுக்களும் உருவாகியுள்ளன. செய்யும் வேலையும், இடமும், தோற்றமும்தான் வித்தியாசமாகத் தெரிகிறதே தவிர, அடிப்படை அமைப்பில் எந்த வித்தியாசமும் இல்லை. கண் என்றால் அது பார்க்கிறது. காது என்றால் அது கேட்கிறது. மற்றபடி கண்ணின் உயிரணுக்களுக்கும் காதின் உயிரணுக்களுக்கும் அடிப்படை வித்தியாசம் எதுவும் இல்லை. ஒரு மருத்துவருக்கு ஒரு ‘செல்’லில் உள்ள நோயை குணப்படுத்தத் தெரிந்தால், அவரால் உடல் முழுவதையும் குணப்படுத்த முடிய வேண்டும். சாப்பிடும்போது நாம் இட்லியின் இந்தப் பகுதி கண்ணுக்கு, இந்தப் பகுதி கல்லீரலுக்கு என்றா சாப்பிடுகிறோம்? ஒட்டுமொத்த உடலுக்குமாகத்தானே எல்லாம் நடக்கிறது! எனவே, தனித்தனி உறுப்புகளுக்கென்று தனித்தனி ஸ்பெஷலிஸ்ட்டுகள் தேவையில்லை என்கிறார் ஹீலர் பாஸ்கர்! அவர் கேள்வியில் உள்ள நியாயம் இந்நேரம் உங்களுக்குப் புரிந்திருக்கும்.
ஒரு யூனானி மருத்துவரிடம் சென்றால்கூட, அவரும் அலோபதி மருந்துகளைக் கொடுப்பவராகவும் ஊசி போடுபவராகவும்தான் உள்ளார். முழுக்க முழுக்க தூய யூனானி, தூய சித்தா, தூய ஆயுர்வேதா இன்று கிடையாது என்பதுதான் நிதர்சனம்.
அடிப்படைத் தத்துவமும் அணுகுமுறையும் தவறாக இருக்கும் அலோபதியைச் சேர்த்துக் கொடுக்கும் எந்த மருத்துவ முறையும் தவறான விளைவுகளைக் கொடுக்கும் சாத்தியங்கள்தான் அதிகம். பாத்திரத்தின் நடுவில் கொட்டப்பட்ட சோற்றைப்போல அலோபதியும், ஓரத்தில் வைக்கப்பட்ட ஊறுகாய் மாதிரி நம் பாரம்பரிய மருத்துவங்களும் ஆகிப்போனது துரதிருஷ்டமே. இதிலிருந்து எப்படி மீள்வது? அலோபதியை ஆழமாகப் புரிந்துகொள்வதுதான் வழி. ஒரு எதிர்மறையான விஷயத்திலிருந்து முற்றிலுமாக விடுபடுவதற்குச் சிறந்த வழி அதை எதிர்த்து, அதனுடன் போராடுவதல்ல. அதை ஆழமாகப் புரிந்துகொள்வதுதான் சரியான வழி. புரிந்துகொள்ளலே விடுதலை. அந்த விடுதலையை நோக்கிச் செல்வோமா, வாருங்கள்.
அலோபதி இங்கே வேறூன்றுவதற்கு அடிப்படையாக ஆங்கிலம் இங்கே வேறூன்றியதைப் பார்க்க வேண்டும். இந்தியா சுதந்தரம் அடைந்ததைப் பற்றிய ஒரு கவிதையில் கவிக்கோ அப்துல் ரகுமான் இப்படிச் சொல்வார் –
விலங்குகள் இன்னும் கழற்றப்படவில்லை
சாவிகள்தான் கை மாறின!
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்! அலோபதியின் இந்திய வருகைக்கும் ஆங்கில மொழியின் இந்திய வருகைக்கும் தொடர்புண்டு. பின்னதின் விளைவாக முன்னது. அது மெக்காலே என்ற மோசமான ஆங்கிலேயனின் மூளையில் தோன்றிய விஷ வித்து. ஆங்கிலத்தை இந்திய மண்ணிலும் கலாசாரத்துக்குள்ளும் புகுத்த அவன் செய்த வேலைகள், நம்மை என்றென்றும் அடிமைப்படுத்த வல்லவை. மெக்காலேயின் கருத்துகளின் அடிப்படையில் எப்போது இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனி மூன்று மருத்துவக் கல்லூரிகளை 1857-ல் நிறுவியதோ, அப்போதிருந்தே மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் கல்வியை நாம் ஊக்குவிக்க ஆரம்பித்துவிட்டோம். சுயமாகச் சிந்திப்பதிலிருந்து விடுபட்டுவிட்டோம்.
இந்தியாவில் ஆங்கிலம் வேறூன்றுவதற்கும், சமஸ்கிருதம், அரபி, பாரசீகம் ஆகிய மொழிகள் பயன்பாட்டில் இல்லாமல் போனதற்கும் காரணமாக இருந்தது லார்டு மெக்காலே ஹௌஸ் ஆஃப் காமன்ஸில் பிப்ரவரி 1835-ல் பேசிய இந்த பேச்சுதான் -
“இந்தியா முழுவதும் நான் குறுக்கும் நெடுக்குமாகப் பயணம் செய்துள்ளேன். ஒரேயொரு பிச்சைக்காரனையோ அல்லது திருடனையோ நான் பார்க்கவில்லை. அப்படியொரு செல்வச் செழிப்பும், உயர்ந்த பண்புகளும், சிறப்புகளும் கொண்ட நாடு அது. அந்த நாட்டின் முதுகெலும்பை உடைத்தாலன்றி அந்த நாட்டை நம்மால் வெற்றிகொள்ளவே முடியாது என்றே நினைக்கிறேன். அதன் ஆன்மிக, கலாசார பாரம்பரியம்தான் அந்த முதுகெலும்பு. அதனால், இந்தியாவின் பண்டைய கல்வி முறையை அடியோடு களைந்து மாற்றிவிட வேண்டும். அப்போதுதான் அந்நியத்தன்மை கொண்ட எதுவும், குறிப்பாக ஆங்கிலமும், ஆங்கிலக் கல்வியும், தம் நாட்டினதைவிட எல்லா வகையிலும் உயர்ந்தது என்று இந்தியர்கள் நினைப்பார்கள். அப்படி ஒரு நினைப்பை அவர்களிடம் விதைத்துவிட்டால், அவர்கள் நாளடைவில் தம் சுயமரியாதையையும், பண்பாட்டையும் நிச்சயம் இழப்பார்கள். அதன்பிறகு, நாம் விரும்புவதைப்போல, நம் அடிமை நாடாக மாறிவிடுவார்கள்”. மெக்காலேயின் பேச்சின் நீட்சியாகத்தான் நான் அலோபதி மருத்துவத்தைப் பார்க்கிறேன்.
1857-ல் லண்டன் பல்கலைக் கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட எம்.பி.பி.எஸ். படிப்புக்கான பாடத்திட்டம், சுதந்தரம் பெற்ற பிறகான இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் மாறவில்லை. பாடத்திட்டத்தில் நிறைய தகவல்கள் உள்ளன. நோயாளிகளைப் பார்த்து, அவர்களைப் படித்துக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பே ஒரு மாணவருக்கு வாய்ப்பதில்லை. மனித உடல் சூழலுக்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது. ஆனால் ஆங்கில மருத்துவமோ, ஒரே நேர்க்கோட்டில் செல்லும் தன்மை கொண்டது. 16-ம் நூற்றாண்டில்தான் ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் மூலமாக மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சை புகுந்தது. ஆனால், அலோபதி மருத்துவமானது ‘‘விஞ்ஞான அடிப்படையில் அமைந்த ஒரு கலையாகும்” என்கிறார் டாக்டர் ஹெக்டே.
ஆங்கில மருத்துவம் எப்படிச் செயல்படுகிறது என்று ஒருசில அனுபவ உதாரணங்களின் மூலம் பார்க்கலாமா?
டாக்டர் தீபக் சோப்ரா
இவர் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வாழும் அலோபதி டாக்டர் (neuro endocrinologist). மாற்று மருத்துவ ஆலோசகராகவும், புகழ்பெற்ற எழுத்தாளராகவும், ஆன்மிகத்தையும் க்வாண்டம் விஞ்ஞானத்தையும் இணைத்துப் பேசும் பேச்சாளராகவும் இருக்கிறார். ஆயுர்வேதத்தின் கோட்பாடுகளையும் அலோபதியையும் இணைத்துப் பார்க்கும்போது உடலுக்கும் மனத்துக்கும் இடையிலான உறவை சிறப்பாகப் புரிந்துக்கொள்ள முடியும் என்று இவர் கூறுகிறார். கேன்ஸர் நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த, தீவிரமான சிகிச்சை கொடுத்தால் மட்டுமே கொஞ்ச காலம் உயிர் வாழலாம் என்றும் சொல்லப்பட்ட, ஆங்கில மருத்துவத்தால் கைவிடப்பட்ட சில நோயாளிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திட்ட உணவும் (டயட்), தியானமும் கொடுத்து குணப்படுத்தியிருக்கிறார். அந்த அனுபவங்களை அவர் தன் Quantum Healing என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார். எல்லா அலோபதி மருந்துகளும், அது valium 5 போன்ற சின்ன மாத்திரையாக இருந்தாலும் சரி, வேதிப்பொருள்கள்தான். அவை நம் உடலில் உள்ள உயிரணுக்களுக்கு அந்நியமானவை என்று அடித்துக்கூறுகிறார். மனமானது ஆரோக்கியத்தை ஏற்படுத்தவல்லது என்று எழுதியும் பேசியும் வருகிறார். கேன்சர் நோயாளிகளை குணப்படுத்த அலோபதியை மட்டுமல்ல, ஆயுர்வேதத்தையும் அவர் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மனத்தின் ஆற்றல் பற்றி அவர் சொல்லும் ஒரு தகவல் சிந்திக்கத்தக்கது. குறிப்பிட்ட வயதில், உதாரணமாக முப்பது என்று வைத்துக்கொள்வோம். மனநலக் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட சிலர் பல ஆண்டுகள் அங்கே இருந்து பின்பு குணமடைந்து திரும்பினர். ஆனால் அவர்களுக்கு வயதாகவே இல்லை! அதாவது, பத்து இருபது ஆண்டுகள் கழிந்த அடையாளம் அவர்கள் உடலில் எங்குமே இல்லை. அதற்குக் காரணம், தங்களுக்கு வயதாகிவிட்டது, அல்லது வயதாகிக்கொண்டிருக்கிறது என்ற எண்ணமே அவர்களுக்கு வந்ததில்லை. ஏனெனில், மனநிலை பாதிக்கப்பட்டிருந்த அவர்களுக்கு அது தெரியாது! காப்பகத்துக்குள் வந்தபோது எந்த நிலையில் உடல் இருந்ததோ அதே நிலையில்தான் அவர்கள் வெளியே சென்றார்கள் என்கிறார்!
மனத்தில் தோன்றும் நம்பிக்கையின் வலிமை பற்றி The Unconditional Life என்ற நூலில் தீபக் சோப்ரா சொன்னதை ஏற்கெனவே பார்த்தோம். நாற்பது ஆண்டுகளாக ஒருவருக்கு ரத்தம், யூரியா, நைட்ரஜன் ஆகிய மூன்றும் 90-க்கு மேல் இருந்தது. அப்படி ஒருவருக்கு இருக்குமானால், சிறுநீரகம் போன்ற முக்கிய உள்ளுறுப்புகள் கெட்டுப்போகும், அவர் இறந்துவிடுவார் என்பது அலோபதியின் கருத்து. ஆனால், நாற்பது ஆண்டுகளாக தன் பிரச்னையை மறந்துவிட்டு சந்தோஷமாக இருந்தார் ஹெரால்டு என்ற அந்த நோயாளி.
மூன்று ஆண்டுகள்கூட தாங்கமுடியாது என்று அலோபதி கணித்திருக்கும்போது, ஹெரால்டால் எப்படி நாற்பது ஆண்டுகள் ‘நார்மலாக’ இருக்க முடிந்தது? அதை ‘மறக்கின்ற ஞானம்’ என்று சொல்வார் என் குருநாதர். ஆமாம். இருக்கும் நோயை மனத்திலிருந்து சுத்தமாகத் துடைத்துவிட்டு நீங்கள் காரியங்கள் ஆற்ற முடியுமெனில், அந்த நோய் உடல் ரீதியாக எந்தப் பிரச்னையும் கொடுக்காது என்று முடிக்கிறார் தீபக் சோப்ரா!
இன்னும் பார்க்கலாம்…