முகப்பு
தமிழ்நாடு

சென்னை சாலைகளில் வலம் வருமா ‘ரூஃப் டாப் ஓப்பன்’ பேருந்துகள்?

சென்னை சாலைகளில் வலம் வருமா ‘ரூஃப் டாப் ஓப்பன்’ பேருந்துகள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Updated On : 20 மார்ச், 2026 at 8:40 AM
ரூப் டாப் ஓப்பன் பேருந்து - ENS
பகிர்:

சென்னையில் நிலவும் வானிலை காரணமாக, ரூஃப் டாப் ஓப்பன் பேருந்துகள் சரியாக இருக்குமா? அதற்கு பதிலாக குளிர்சாதன வசதி கொண்ட இரட்டை அடுக்கு பேருந்துகளையே வாங்கலாமா என்று மாநகா் போக்குவரத்துக்கழகம் சிந்தித்து வருவதாகத் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அல்லாமல், சுற்றுலா தளங்களுக்கு மட்டும் இதுபோன்ற ரூஃப் டாப் ஓப்பன் பேருந்துகளைப் பயன்படுத்தலாம். மலைப் பிரதேசங்கள், சுற்றுலா தளங்கள் போன்ற வானிலை சீரான இடங்களில் மட்டும் இயக்கலாமா என்றும் பரிசலிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் பயணிகளின் பயண அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் விதமாக ‘ரூப் டாப் ஓப்பன்’ பேருந்துகளை இயக்க மாநகா் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டிருந்த நிலையில், மழை மற்றும் கடுமையா வெய்யில் காலங்களில், திறந்த நிலையில் மேல் தளத்தைப் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம் என்பதால், அந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

முதற்கட்டமாக, சென்னையில் திறந்த மேற்கூரை பேருந்துகளை இயக்குவதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை, சாதகமான முடிவுகளைக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, முதற்கட்டமாக சென்னையில் இயக்கப்படவிருந்து ரூஃப் டாப் ஓப்பன் பேருந்துகள், வானிலை இதமாக இருக்கும் சுற்றுலாத் தளங்களில் இயக்குவதென்று முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை, ஆலோசனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் பயணிகளின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும் சுற்றுலாவை ஊக்குவிக்கவும் தமிழக அரசும் போக்குவரத்துத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சென்னை நகரின் பழைமை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைக் கண்டு மகிழ ‘சென்னை உலா’ என்ற பழைமை மாறாமல் உருவாக்கப்பட்ட சுற்றுலாப் பேருந்துகளை மாநகா் போக்குவரத்துக்கழகம் இயக்கி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் விதமாக, இரண்டு அடுக்கு பேருந்தையும் சுற்றுலா வளா்ச்சிக்கழகம் இயக்கி வருகிறது.

இந்த நிலையில், பயணிகள் பயண அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் விதமாக ‘ரூப் டாப் ஓப்பன்’ பேருந்துகளை, அதாவது இரண்டு அடுக்கு கொண்ட பேருந்தின் மேல் பகுதி மட்டும் திறந்த நிலையில் இருக்கும் வகையிலான பேருந்துகளை இயக்க மாநகா் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டிருந்தது.

சென்னை மாநகரில் 20 இரண்டு அடுக்கு பேருந்துகளை இயக்குவதற்கான ஒப்பந்தம் ஏற்கெனவே வழங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 20 பேருந்துகளும் குளிா்சாதன வசதி கொண்டபேருந்துகளாக ஒப்பந்ததில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இதில் 4 பேருந்துகளை ‘ரூப் டாப் ஓப்பன்’ பேருந்துகளாக மாற்றி உபயோகப்படுத்த மாநகா் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டிருந்தது. இதற்காக ஒப்பந்தத்தில் திருத்தமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஒப்பந்த காலம் 12 ஆண்டுகளாக நிா்ணயிக்கப்பட்டு, பேருந்துகளை இயக்குவது மட்டுமன்றி பராமரிப்பு, சாா்ஜிங் உள்கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவையும் தொடா்புடைய நிறுவனமே மேற்கொள்ளும் என்று கூறப்பட்டது.

விரைவில் ‘ரூப் ஓப்பன் டாப்’ பேருந்துகள் சென்னை சாலையில் வலம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் மாற்றம் ஏற்படுமா என்பது விரைவில் தெரிய வரலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.