முகப்பு
நலம் நலமறிய ஆவல்

18. ஹலோ, அலோபதியா? - 3

51 வகையான நோய்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அந்த நோய்களை ஆங்கில மருத்துவத்தின் மூலம் கட்டுப்படுத்துகிறோம், வராமல் தடுக்கிறோம், குணப்படுத்துகிறோம் என்று சொன்னால், அது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்! அந்த லிஸ்ட்டுக்கு ஷெட்யூல் ஜே (Schedule J) என்று பெயர்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:13 PM
பகிர்:
 

நவீன மருத்துவம், அதன் எல்லாவிதமான முன்னேற்றங்களையும் தாண்டி, பைசா நகர சாய்வு கோபுரத்தைப்போல கொஞ்சம் சமநிலை தவறியதாகவே தோன்றுகிறது.

- சார்லஸ் இளவரசர்

டாக்டர் ஃபிலிப் ப்ளைபெர்க் செத்தது எப்படி?

இது நடந்ததும் தென் ஆப்பிரிக்காவில்தான். நீச்சலுக்குப் போன ஒரு இளைஞர், உணர்வற்ற நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். டாக்டர் பர்னார்டின் செல்வாக்கினால் அந்த இளைஞருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லி கையெழுத்திடும்படி, பொறுப்பிலிருந்த டாக்டர் ரேமண்ட் வற்புறுத்தப்பட்டார். அவரும் வேறு வழியின்றி கையெழுத்திட்டார். என்ன பிரச்னை என்று கண்டுபிடிக்கமுடியாத இதய நோய்க்காக அம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இன்னொரு நோயாளியான டாக்டர் ப்ளைபர்க் என்பவருக்கு அந்த இளைஞரின் இதயம் பொருத்தப்பட்டது! அதைச் செய்தவர் டாக்டர் பர்னார்ட். அதுதான் உலகின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை என்று விளம்பரப்படுத்தவும் பட்டது! “அது இன்னொரு பொய்” என்கிறார் டாக்டர் ஹெக்டே.

டாக்டர் பர்னார்ட்

பல் மருத்துவரான டாக்டர் ப்ளைபர்க் 18 மாதங்கள் உயிர் வாழ்ந்தார். லூயி இறந்தது 18 நாள்களில். பாவம், பர்னார்ட் என்ற சனி அவர்களுக்கு பதினெட்டில் இருந்துள்ளது! டாக்டர் ப்ளைபர்க் நீச்சலடிக்கிறார், மனைவியோடு நல்ல முறையில் உடலுறவு கொண்டார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. உண்மையில் அவர் நீச்சலடிக்கவே இல்லையென்றும், ஒரு ‘ஹை-டெக்’ ஆம்புலன்ஸில் அவரை நீருக்குள் அமிழ்த்தி, ஒரு சில விநாடிகள் அவரை மட்டும் ஒளிப்படம் எடுத்து அப்படி விளம்பரம் கொடுத்தார்கள் என்று கூறும் ஹெக்டே, நல்லவேளையாக அவர் மனைவியோடு உறவு கொண்ட ஒளிப்படங்கள் எதுவும் எடுக்கவில்லை என்று முடிக்கிறார்!

டாக்டர் ப்ளைபர்க்

அலோபதியில் மூளைச்சாவு என்று சொல்லப்படும் விஷயம் பற்றி நாம் சிந்திக்கவேண்டி உள்ளது. மூளைச்சாவு என்பது உண்மையில் இறப்பல்ல. அது மூளையின் தூக்கம். எப்போது வேண்டுமானாலும் அது விழித்துக்கொள்ளலாம். டாக்டர்கள் சொல்லும் அந்த அயோக்கியத்தனமான கருத்தை நம்புபவர்களுக்குத்தான் மூளைச்சாவு!

டார்வால் என்ற அந்த அப்பாவிப் பெண்ணின் இதயம் இயங்கிக்கொண்டுதான் இருந்தது. ஆனால் அவர் மூளைச்சாவு ஏற்பட்டு செத்துவிட்டார் என்ற முடிவுக்குத்தான் பர்னார்ட் போன்ற டாக்டர்கள் வந்தார்கள். ஏன்? அப்போதுதான் அவருடைய இதயத்தை எடுத்து இன்னொருவருக்கு வைத்து பர்னார்ட் புகழடைய முடியும்! எவ்வளவு குரூர மனத்தை அலோபதி கொடுத்திருக்கிறது! ஒருவருக்கு மரணம் ஏற்பட்டால் இதயம் மட்டும் இயங்கிக்கொண்டிருக்குமா? அது டார்வாலுக்கு துடித்துக்கொண்டிருந்தது என்றால் என்ன அர்த்தம்? மூளையின் கட்டுப்பாட்டில் முக்கியமான உள் உறுப்புக்கள் இல்லை என்றுதானே அர்த்தம்?

அடுத்து, இன்னொரு மனிதரின் உடலுறுப்புகளை நம் உடல் என்றுமே ஏற்றுக்கொள்வதில்லை. இன்னொருவரின் ரத்தத்தைக்கூட நம் உடல் ஏற்றுக்கொள்வதில்லை! இது ஆச்சரியமூட்டும் விஷயமாக இருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை. பி பாசிட்டிவ் (+) குரூப் ரத்தம் தேவைப்படும் ஒருவருக்கு அதே க்ரூப் ரத்தம் கொடுப்பதாக வைத்துக்கொள்வோம். முதலில் கொஞ்ச நேரத்துக்கு ரத்தம் ஏன் தேவைப்பட்டதோ அந்தப் பிரச்னை தீர்ந்துவிட்டதைப்போல இருக்கும். ஆனால், பிரச்னை அமுக்கி ஆழத்தில் வைக்கப்பட்டிருக்கும். நீருக்கு மேலே சுற்றிக்கொண்டிருந்த கப்பல்கள் இப்போது நீர்மூழ்கிக் கப்பல்களாகிவிட்டன என்று அர்த்தம். கொஞ்ச நாள் கழித்து எந்தப் பிரச்னையை ஒட்டி ரத்தம் கொடுக்கப்பட்டதோ அதே பிரச்னை திரும்ப வரும்!

எனவே, மூளைச்சாவு ஏற்பட்ட ஒருவரின் கிட்னியை எடுத்து எனக்கு வைப்பீர்களேயானால் அந்த அந்நியப் பொருளை எதிர்த்து என் எதிர்ப்பு சக்தி தீவிரமாக வேலை செய்யும். அது அப்படி வேலை செய்தால் கதை கந்தலாகிவிடும் என்று அலோபதி மருத்துவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான், இப்படியான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் நோய் எதிர்ப்பு சக்தியை மழுங்கடிக்கும் மருந்துகளை (immunosuppressive drugs) கொடுக்கிறார்கள்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மூலம் நீண்ட காலம் ஒருவர் உயிர் வாழ்ந்ததாக வரலாறு கிடையாது. அது சாத்தியமும் இல்லை. ஜெருசலத்தில் ஒரு இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அது கொஞ்சம் வித்தியாசமானது. ஒரு மனிதரின் இதயத்தை இன்னொருவருக்கு மாற்றியதையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் இதுவரை பார்த்தோம். ஆனால் ஜெருசலத்தில் ஒரு இஸ்ரேலி அறுவை சிகிச்சை நிபுணரால் ஒரு மனிதருக்கு முதன்முறையாக செயற்கை இதயம் பொருத்தப்பட்டது! அதுவும், உலகில் முதன்முதலில் நடந்த சாதனை என்றே பிரிட்டிஷ் ஆராய்ச்சி இதழ் செய்தி வெளியிட்டது. பன்னிரண்டு மணி நேரம் நடந்த அந்த ஆபரேஷனுக்குப் பிறகு மூன்றரை நாள்தான் அந்த நோயாளி உயிரோடு இருந்தார்!

இங்கே நமக்கொரு கேள்வி எழுவது இயற்கை. செயற்கை இதயத்தால் ஒரு மனிதனை மூன்று நாட்களுக்கு உயிருடன் வைத்திருக்க முடியுமென்றால் அது ஒரு சாதனைதானே? அதையே இன்னும் கொஞ்சம் மேம்படுத்தினால் வாழ்நாளை நீடிக்க முடியும்தானே என்று தோன்றலாம். ஆனால், உண்மையில் அவரை மூன்றரை நாள்கள் வாழவைத்தது அந்த செயற்கை இதயமல்ல. அதை வைக்கும்போது அவருக்கு ஆண்டவன் கொடுத்த இதயம் இருந்த இடம் காலியாகவும் இல்லை. அவருடைய இதயம் இருக்கத்தான் செய்தது. ஆனால் கொஞ்சம் பிரச்னையோடு இருந்தது. மேலே சொன்ன செயற்கை இதயமானது, இயற்கையான மனித இதயத்தைத் தேவையற்றதாக ஆக்கும் ஒரு அமைப்பல்ல.

உண்மையில் அந்தச் செயற்கை இதய சாதனத்தின் பெயர் இரண்டாவது ஹார்ட் மேட் (Heart Mate II). தெர்மோ கார்டியோ சிஸ்டம்ஸ் என்ற ஒரு கம்பெனி அதை பிட்ஸ்பர்க்கிலும் பென்சில்வேனியாவிலும் வடிவமைத்து விற்பனை செய்துகொண்டிருந்தது. 350 கிராம் எடை மட்டுமே கொண்ட ஒரு சின்ன உபகரணம் அது. முதலில் அதை மிருகங்களுக்கு வைத்துப் பார்த்தார்கள். அபாரமாக வேலை செய்தது. அது வைக்கப்பட்ட மிருகங்கள் ரொம்ப நாளைக்கு உயிர் வாழ்ந்தன! மிகச் சின்னதான அந்த அமைப்பு மனித இதயத்துக்கான மாற்று அல்ல. இடது இதய அறைக்கு உதவி செய்யும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு அது. அவ்வளவுதான். அதை வயிற்றில்கூட பொருத்தலாம். அங்கிருந்து அது ஆக்ஸிஜன் ஏற்றப்பட்ட ரத்தத்தை இதயத்தின் இடது அறை வழியாக உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் செலுத்த உதவும். மனித இதயத்தின் மற்ற அறைகள் அந்த அமைப்போடு இணைந்து செயல்படும். பெரும்பாலான இதயம் தொடர்பான பிரச்னைகளுக்குக் காரணம் இடது இதய அறை செயலிழப்பாகத்தான் உள்ளது. எனவே, இரண்டாம் ஹார்ட் மேட் என்ற இந்த குட்டி அமைப்பு ஒரு செயற்கை இதயம் மாதிரி செயல்படுவதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால், விரைவிலேயே இவன் அந்நியன், நம் ஆளில்லை என்று உடல் உணர்ந்துகொள்ளும்போது பிரச்னை ஏற்படும்.

இயற்கையால் நம் உடலுக்குக் கொடுக்கப்பட்ட எதிர்ப்பு சக்திதான் நம்மை உயிர் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. அதை அடித்து உதைத்து படுக்கவைத்துவிட்டால் என்னாகும்? உயிர் போகும். அதுதான் மேலே பார்த்த இருவருக்கும் நடந்திருக்கிறது. என்ன, ஒருவருக்கு பதினெட்டு நாள்கள். இன்னொருவருக்கு பதினெட்டு மாதங்கள். இதில் ஏதோ சாதனை செய்துவிட்ட மாதிரியான புகழும் செல்வாக்கும் மட்டும் அந்தக் கொலைகளை நிகழ்த்திய ‘அறுவை’ மன்னர்களுக்கு! ஆண்டவன் எந்த உறுப்பையும் காரணமின்றி கொடுக்கவில்லை. யோசியுங்கள்.

டாக்டர் பி.கே. சென்

மும்பையைச் சேர்ந்த டாக்டர் பி.கே. சென், 1968-ல் இதய மாற்று அறுவை சிகிச்சையை ஒருவருக்கு வெற்றிகரமாகச் செய்தார். ஆனால், அறுவை சிகிச்சை முடிந்த உடனேயே நோயாளி இறந்துவிட்டார். ஆனால், டாக்டர் சென் உண்மையான ஆராய்ச்சி மனமும் மனசாட்சியும் கொண்டவர். எனவே, அவர் பர்னார்டைப்போல எதுவும் சொல்லி மழுப்பாமல், ஆபரேஷன் முடிந்த உடனேயே நோயாளி இறந்துவிட்டார் என்று பத்திரிகையாளர்களிடம் நேர்மையாகக் கூறினார்.

டாக்டர் பி.கே. சென்

1967 டிசம்பரில், தென் ஆப்பிரிக்காவின் ஒரு மருத்துவ ஆராய்ச்சி இதழில் டாக்டர் பர்னார்டை புகழ்ந்து பல ‘ஆராய்ச்சிக்’ கட்டுரைகள் வந்தன. தென் ஆப்பிரிக்க அரசு தன் செலவில் டாக்டர் பர்னார்டையும், அவரது மனைவியையும், ஒரு சிறு உதவியாளர் குழுவையும் உலகம் முழுவதும் சுற்றிப்பார்க்க அனுப்பியது! கொலைகார பர்னார்டுக்குப் பணமும் புகழும் சேர்ந்துகொண்டே போனது என்கிறார் ஹெக்டே.

ஹெக்டேயின் அனுபவம்

முன்னர் குறிப்பிட்ட ஹெக்டேயின் நூலில், டாக்டர் ஹெக்டே தன் அனுபவம் ஒன்றை எடுத்துரைக்கிறார். லண்டனில் உள்ள மிடில் செக்ஸ் ஹாஸ்பிடல், நேஷனல் ஹார்ட் ஹாஸ்பிடல் மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்ட் மெடிகல் ஸ்கூலின் பீட்டர் பெரெண்ட் பிரிகாம் ஹாஸ்பிடல் போன்ற உலகின் தலைசிறந்த கல்லூரிகளில் இதயவியல் படித்தவர் ஹெக்டே. ஒருநாள், முப்பதுகளில் இருந்த ஒரு இளைஞர், கடுமையான மாரடைப்பு வந்து ஹெக்டே வேலைபார்த்த மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். ஆனால், ஹெக்டேயால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அந்த இளைஞர் இறந்துபோனார். அவரது மனைவி ஐ.சி.யு.வில் ஹெக்டேயின் கால்களைக் கட்டிக்கொண்டு கதறி அழுதார். ‘என் கணவர் ஏன் இறந்தார்?’ என்று கேட்டுக்கொண்டே இருந்தார். அந்தக் கேள்வி ஹெக்டேயை உலுக்கியது. எப்படி இறந்தார் என்று கேட்டால் மணிக்கணக்கில் விளக்கியிருக்க முடியும். ஆனால் ஏன் இறந்தார் என்ற கேள்விக்கு ஹெக்டேயிடம் பதிலில்லை.

அந்தக் கேள்வி ஹெக்டேயின் மனத்தை அரித்தது. ஒரு மனைவியின் எளிமையான கேள்விக்குத் தன் மருத்துவ அறிவால் பதில் சொல்ல முடியவில்லையே என்று ஹெக்டே கூசிப்போனார். தன்னுடைய படிப்பறிவெல்லாம் பயனற்றதாகிவிட்டதாகத் தோன்றியது அவருக்கு. அதுவரை அவர் மீது பொழியப்பட்டு வந்த புகழுரைகளெல்லாம் அர்த்தமற்றதாகத் தோன்றியது. மனித உடல் பற்றியும் அதன் இயக்கம் பற்றியும் அதுவரை அவர் சேமித்து வைத்திருந்ததெல்லாம் வெறும் தகவல்கள்தான் என்பது முதன்முறையாக அவருக்கு உரைத்தது. மனித உடலும் இந்தப் பிரபஞ்சமும் எப்படி இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது புரியாத புதிராகிப்போனது. எல்லா நோய்களுக்கும் பின்னால் மனம் இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டதாக ஒப்புக்கொள்கிறார் ஹெக்டே.

நோய் குணமாவதற்குக் காரணம், உடலின் குணப்படுத்தும் அமைப்புதான். ஒரு டாக்டர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாகவே அந்த அமைப்பு வேலை செய்கிறது. ‘ஒவ்வொரு மருத்துவருக்குள்ளும் காயம்பட்ட ஒரு நோயாளியும், குணப்படுத்துபவர் ஒருவரும் உள்ளனர். ஒவ்வொரு நோயாளியும் ஒரு குணப்படுத்துபவராக ஆகக்கூடிய சாத்தியம் உண்டு. பெரியம்மையைக் கொடுப்பவளும் குணப்படுத்துபவளும் தேவிதான் என்பதுபோல. ஒரு நோயாளிக்கு உள்ளே உள்ள ஹீலரை, குணப்படுத்துபவரை நவீன மருத்துவம் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை’ என்கிறார் ஹெக்டே.

ஆங்கில மருத்துவத்தின் மனசாட்சியாக தீபக் சோப்ரா, ஹெக்டே போன்ற மருத்துவர்களை எடுத்துக்கொள்ளலாம். மனசாட்சி எப்போதுமே பொய் சொல்லாது.

எல்லாம் வியாபாரம்

அப்படியானால், இந்த மருந்து அதைக் குணப்படுத்தும், அந்த மருந்து இதைக் குணப்படுத்தும் என்றெல்லாம் சொல்லப்படுவது பொய்யா? ஆமாம். சுத்தமான நெய்யில் வறுத்தெடுக்கப்பட்ட சுவையான மொறுமொறு பொய்கள்! கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறேன் என்று சொல்லி மருந்துகள் விற்கும் கம்பெனிகள் மட்டும், ஆண்டொன்றுக்கு 15 முதல் 18 பில்லியன் டாலர்கள் (ஏறக்குறைய 1 லட்சத்துக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய்) லாபம் சம்பாதிக்கின்றன! இதய அறைகளில் பொருத்தப்படும் ‘கார்டியாக் ஸ்டென்ட்’ தயாரிப்பதற்குப் பத்து டாலர்களே செலவாகிறது. ஆனால், இரண்டாயிரம் டாலர்களுக்கு அது விற்கப்படுகிறது. மாரடைப்பு வந்து அலோபதி டாக்டரிடம் ஆலோசனை கேட்டால், ‘நீங்கள் ஒரு எரிமலையின் மீது இப்போது அமர்ந்திருக்கிறீர்கள். அது எந்த நேரமும் வெடிக்கலாம். உடனே ஆபரேஷன் செய்தாக வேண்டும்’ என்பார். ‘நான் வீட்டுக்குப் போய் என் குடும்பத்தாரிடம் கேட்டுவிட்டு வரவா?’ என்று கேட்டால், ‘அது ரொம்ப ஆபத்து. நீங்கள் போகும் வழியிலேயே இறந்துபோகலாம்’ என்று பயமுறுத்துவார்கள். ஏனெனில், ‘அப்படியொரு பலியாடு வெளியே போனால் திரும்பி வராமல் போகலாம்’ (If the ‘bakra’ goes out, he may not come back again”) என்று கிண்டலாகச் சொல்கிறார் ஹெக்டே!

இறுதியாக

The Drugs and Cosmetics Act 1940 என்று ஒரு சட்டம் உண்டு. இந்திய அரசு இயற்றிய அந்தச் சட்டத்தை மெடிகல் கௌன்ஸில் ஆஃப் இந்தியாவும், மாநில அரசுகளும் ஏற்றுக்கொண்டுவிட்டன. ஆண்டுக்கு ஆண்டு அச்சட்டம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, சீர் செய்யவும் படுகிறது. அதன்படி, 51 வகையான நோய்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அந்த நோய்களை ஆங்கில மருத்துவத்தின் மூலம் கட்டுப்படுத்துகிறோம், வராமல் தடுக்கிறோம், குணப்படுத்துகிறோம் என்று சொன்னால், அது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்! அந்த லிஸ்ட்டுக்கு ஷெட்யூல் ஜே (Schedule J) என்று பெயர். அந்த நோய்களின் வரிசை இதோ:

1. எய்ட்ஸ்

2. நெஞ்சுவலி (angina pectoris)

3. அப்பென்டிசைட்டிஸ் (appendicitis) என்னும் குடல் வால் நோய்

4. இதய ரத்தக் குழாய்களில் அடைப்பு (arteriosclerosis)

5. தலை வழுக்கை

6. கண்பார்வையின்மை

7. ஆஸ்துமா

8. கட்டிகள் முதல் புற்று நோய் வரை

9. கண் புரை (cataract)

10. தலை முடி வளர, நரை அகற்ற

11. கருவில் உள்ள குழந்தையை பால் மாற்றம் செய்வோம் என்று சொல்வது

12. பிறவிக் கோளாறுகள்

13. செவிட்டுத்தன்மை

14. நீரிழிவு நோய் (diabetes)

15. கர்ப்பப்பை தொடர்பான கோளாறுகள்

16. வலிப்பு மற்றும் மனநோய்கள்

17. மூளைக்காய்ச்சல்

18. உடல் கருப்பு நிறத்தை மாற்றுதல்

19. மார்பக வளர்ச்சி

20. புரையோடிய புண் (gangrene)

21. மரபணு நோய்கள்

22. க்ளாக்கோமா எனப்படும் கண் நோய்

23. தைராய்டு (கழுத்து) வீக்கம்

24. ஹெர்னியா (குடலிறக்கம்)

25. அதிக மற்றும் குறைவான ரத்த அழுத்தம்

26. விரை வீக்கம்

27. பைத்தியம்

28. ஞாபக மறதி, அது தொடர்பானவை

29. குழந்தையின் உயரம் கூட்டுதல்

30.  கிட்டப்பார்வை, தூரப்பார்வை முதலியவை

31. ஆணுறுப்பு வளர்ச்சி, வீரியம்

32. பற்களை உறுதிப்படுத்துதல்

33. மஞ்சள் காமாலை

34. ரத்தப் புற்றுநோய்

35. வெண்குஷ்டம்

36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்துதல்

37. மூளை வளர்ச்சிக் குறைவு

38. மாரடைப்பு

39. குண்டான உடம்பு மெலிய

40. பக்கவாதம்

41. நடுக்குவாதம் எனப்படும் பார்க்கின்ஸன்ஸ் (Parkinson’s disease)

42. மூல நோய், பவுத்திரம்

43. வாலிப சக்தியை மீட்க

44. இளவயதில் முதுமைத் தோற்றம்

45. இளநரை

46. ருமாட்டிக் இருய நோய்

47. விரைவில் ஸ்கலிதம்

48. முதுகுத்தண்டில் ஏற்படும் வலிகள்

49. திக்குவாய்

50. சிறுநீரக மற்றும் பித்தப்பை கற்கள்

51. காலில் ரத்த நாளங்கள் வீக்கம், புடைத்தல்

அப்பாடா, லிஸ்ட் முடிந்துவிட்டது. நாம் எந்தெந்த நோய்களுக்காக அலோபதி டாக்டர்களையும் மருத்துவமனைகளையும் அனுதினமும் அணுகிக் கொண்டிருக்கிறோமோ அந்த நோய்களைத்தான் ஷெட்யூல் ஜெ வரிசைப்படுத்திக் கூறுகிறது! நாம் எவ்வளவு முட்டாளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது புரிகிறதா?!

ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஸ்கேன் மையங்களிலும் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று தெரிந்துகொள்வது சட்டப்படி குற்றம் என்று போர்டு வைக்கிறார்கள் அல்லவா? ஆனால், ஷெட்யூல் ஜெ-யை ஏன் வைப்பதில்லை?

‘‘ஆங்கில மருத்துவம் ஒரு பிணம் தின்னும் மருத்துவம்” என்றும் ‘‘ஆடு, மாடு, கழுதைகள், குரங்குகள் போன்ற மிருகங்களும் மனிதர்களும் ஒன்றுதான் என்ற அளவில் வைத்தியம் பார்க்கும் ஒரே மருத்தும் ஆங்கில மருத்துவம்தான்” என்றும் டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான் சொல்வது உண்மையில் குரலாக ஒலிக்கிறதா? சிந்தியுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.