தேங்காய் இதயநலனுக்குக் கெடுதலானதா? இந்தக் கேள்வி எல்லோரிடமும் உள்ளது.
கேரள மக்கள் தங்களுடைய எல்லா வகை உணவுகளிலும் தேங்காய் எண்ணெயைத்தான் பயன்படுத்துகிறார்கள். இதயநோய் வருவதாக இருந்தால், உலகிலேயே முதலில் அவர்களுக்குத்தான் வந்திருக்க வேண்டும், இல்லையா? ஆனால், இதயநோயால் பாதிக்கப்படுபவர்கள் மற்ற மாநிலத்தைவிட, கேரளத்தில் அதிகமாக இல்லை என்றுதானே ஆய்வுகள் சொல்கின்றன?
தேங்காய் எண்ணெயைப் போன்று இதயத்துக்கு நலம் அளிக்கும் எண்ணெய் வேறு எதுவும் இல்லை என்பதே உண்மை!
நியூசிலாந்து, டோக்லு தீவுகள் (Tokelau Islands) மற்றும் பப்புவா நியூகினியா தீவுகளில் (Papua New Guinea) வாழும் மக்களை ஆராய்ந்தபோது அவர்கள் அனைவரும் தேங்காயையும், தேங்காய் எண்ணெயையும் அதிக அளவில் உட்கொள்வது கண்டறியப்பட்டது. ஆனால் அவர்களில் யாரும் குண்டோதரர்களாக இருக்கவில்லை. தேங்காய் மற்றும் அதன் எண்ணெயைச் சாப்பிட்டதால் ஒல்லியான தேகத்துடன் இருந்தார்கள். அவர்களின் இதயம் மிக வலுவுடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பது ஆய்வில் தெரியவந்தது.
அறிவியல் உலகம் செய்த மிகப்பெரிய தவறு - உலகின் மிக ஆரோக்கியமான உணவுகள் சிலவற்றை உடல்நலனுக்குக் கேடானது என ஒதுக்கியது.
இப்படி ஒதுக்கப்பட்ட உணவுகளில் ஒன்று, தேங்காய். தென்னை மரத்தில் விளையும் அமுதான தேங்காய், உடல்நலனுக்குத் தீங்கானது என விஞ்ஞானிகள் கூறவும், மக்கள் பயந்துகொண்டு தேங்காயைப் புறக்கணிக்க ஆரம்பித்தார்கள். இதயநோயாளிகள் தேங்காய் எண்ணெய் என்ற பெயரைக் கேட்டாலே அதிர்ச்சி அடைவார்கள். அப்பேர்ப்பட்ட வில்லனின் நிலையில் தேங்காய் எண்ணெய் இருக்க காரணம், அதில் உள்ள நிறைவுற்ற கொழுப்பே (Saturated fatty acids).
தேங்காய் எண்ணெயில் நிறைவுற்ற கொழுப்பு இருப்பது உண்மை. ஆனால் நிறைவுற்ற கொழுப்பு, தேங்காய்-முட்டை போன்ற இயற்கை உணவுகளில் இருக்கும்போது இதயநலனுக்குக் கேடு விளைவிப்பதில்லை. தேங்காய் எண்ணெயில், தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்புத்தன்மைகொண்ட லாரிக் அமிலம் (Lauric Acid) என்கிற நிறைவுற்ற கொழுப்பு வகை உள்ளது. மனிதனுக்குக் கிடைக்கக் கூடிய உணவுப் பொருள்களில் தேங்காய் எண்ணெயிலும் தாய்ப்பாலிலும் மட்டுமே லாரிக் அமிலம் உள்ளது. பாலூட்டும் தாய்மார்கள் தேங்காய் எண்ணையை உட்கொண்டால் அவர்களின் தாய்ப்பாலில் லாரிக் அமிலம் மூன்று மடங்கு அதிகமாகச் சுரப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. லாரிக் அமிலம் பாக்டீரியா, வைரஸ் போன்ற பல நோய்த்தொற்றுகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
தேங்காய் எண்ணெயில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு, இதயத்துக்கு நல்லது என பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு, மீடியம் செயின் ட்ரைக்ளிசரைட் (Medium chain Triglycerides) என்ற வகையைச் சார்ந்தது. இது இதயத்துக்கு மிக நல்லது.
(கொழுப்புகளில் ஏராளமான வகைகள் உண்டு. நிறைவுற்ற கொழுப்புகளை லாங் செயின், மீடியம் செயின், ஷார்ட் செயின் என மூன்றுவகையாகப் பிரிப்பார்கள். அதிலும் சில பிரிவுகள் உண்டு. பால்மிடிக் அமிலம், லாரிக் அமிலம், மிஸ்டிக் அமிலம் என்று. தேங்காய் எண்ணெய் - மீடியம் செயின் மற்றும் லாரிக் அமிலம் நிரம்பிய நிறைவுற்ற கொழுப்பு வகையைச் சார்ந்தது.)
தைராய்டு சுரப்பிகளை வலுவாக்கும் சக்தி தேங்காய் எண்ணெய்க்கு உண்டு. உடலின் ஒட்டுமொத்த கலோரி எரிப்புத்திறனை (Metabolism) இது அதிகரிக்கிறது. தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு, உடலில் கொழுப்பாகச் சேர்வது இல்லை. அதை உடல் உடனே எரித்து விடுகிறது.
குளிர்ப்பகுதிகளில் இருப்பவர்கள் உலர்ந்த சருமம் (Dry skin) என்கிற சிக்கலில் அவதிப்படுவார்கள். இதற்குக் கண்ட தைலங்களைப் பூசுவதை விடவும் தேங்காய் எண்ணெயைத் தடவி வந்தாலே போதும்.
ஹைட்ரஜனேற்றம்
1940-ல் தேங்காய் எண்ணெயை உணவில் சேர்த்துக்கொண்டால் குண்டாகிவிடுவோம் என்கிற பிரச்சாரம் தொடங்கியது. இதை அமெரிக்க விவசாயிகள் பலமாக நம்பினார்கள். இறைச்சிக்காக வளர்த்துவந்த மாடுகளுக்கு அவை குண்டாவதற்காக தேங்காய் எண்ணெயை அளித்தார்கள். ஆனால் விளைவுகள் நேர்மாறாக இருந்தன. மாடுகள் குண்டாவதற்குப் பதிலாக இளைத்தன. மட்டுமின்றி அவற்றுக்குப் பசியும் எடுத்து, நல்ல சுறுசுறுப்பாகவும் இருந்தன!
தேங்காய் எண்ணெய் நல்லதுதான். ஆனால் கடைகளில் விற்கப்படும் தேங்காய் எண்ணெய் நல்லதல்ல. அது ஹைட்ரஜனேற்றம் (Hydrogenation) செய்யப்பட்டது. எண்ணெய் நீண்டநாள் கெடாமல் இருக்கவேண்டும் என்பதற்காக அதை ஹைட்ரஜனேற்றம் செய்கிறார்கள். இதனால் எண்ணெயில் மாறுதல் அடையும் கொழுப்பு (Trans fat) எனப்படும் செயற்கைக் கொழுப்புகள் சேர்கின்றன. இது உடலுக்குக் கெடுதலை ஏற்படுத்தும். இதனை வைத்து நடந்த ஆய்வுகளால்தான் தேங்காய் எண்ணெயின் பெயர் கெட்டுப்போய்விட்டது.
(ஹைட்ரஜனேற்றம் என்றால் என்ன?
கொழுப்பில் மூன்றுவகை உண்டு. பாலி கொழுப்பு (Polyunsaturated fats), மோனோ கொழுப்பு (Monosaturated fats) மற்றும் நிறைவுற்றகொழுப்பு (saturated fats).
வெண்ணெய், நெய், ஆலிவ் ஆயில் , கனோலா ஆயில், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றில் இந்த மூன்றுவகை கொழுப்புகளும் உண்டு.
வெண்ணெயில் இந்த மூன்று வகை கொழுப்புகளும் இருந்தாலும் அதில் நிறைவுற்ற கொழுப்பே அதிகமான அளவில் உள்ளது. எனவே சமையலின்போது அது உயர்வெப்பத்தை எளிதில் தாங்குகிறது. ஒரு எண்ணெயில் எந்தளவுக்கு நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக உள்ளதோ, அந்தளவுக்கு அது சூட்டைத் தாங்கும் வலிமை கொண்டதாக இருக்கும்.
பாலி வகை கொழுப்பு, உயர்வெப்பத்தைத் தாங்காது. அதனால் வேதிவினை மூலம் பாலி கொழுப்புகளில் ஒரு ஹைட்ரஜன் அணுவைப் புகுத்தி அதன் தன்மையை மாற்றி, மாறுதல் அடையும் கொழுப்பு (Trans fat) எனும் வகை கொழுப்பாக மாற்றிவிடுகிறார்கள். இதனால்தான் சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவை சமையலின்போது உயர்வெப்பத்தைத் தாங்கும் தன்மை கொண்டவையாக மாறுகின்றன. ஆனால் இந்த டிரான்ஸ் ஃபேட் இதயநலனுக்கு மிகவும் தீங்கானது, மாரடைப்பை வரவழைப்பது.)
எனில் நல்ல தேங்காய் எண்ணெய் எது?
பாரம்பரியமான முறையில் செக்கில் ஆட்டி இயற்கையாகக் கிடைக்கும் தேங்காய் எண்ணெய்தான் உடல்நலனுக்கு உகந்தது. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் கிடைக்காவிட்டால் பிரச்னை இல்லை. வீட்டிலேயே சுத்தமான தேங்காய் எண்ணெயைத் தயாரிக்கமுடியும். அதன் எளிமையான செய்முறை:
நன்றாக முற்றிய தேங்காய்களை வாங்கவும். பிறகு அவற்றைத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தேங்காய்த் துண்டுகளைச் சிறு, சிறு துண்டுகளாக நறுக்கவும். அல்லது நன்றாக துருவவும். நறுக்கிய தேங்காய்த் துண்டுகளை ஒரு மிக்ஸியால் நன்கு அரைத்துக்கொள்ளவும். சிறிதளவு நீர் வீட்டும் அரைக்கலாம்.
பிறகு மிக்ஸியில் அரைத்ததை நன்கு வடிகட்டினால் தேங்காய்ப் பால் கிடைக்கும். அதை ஒரு கண்ணாடி ஜாடியில் ஊற்றிக்கொள்ளவும். அல்லது ஒரு கண்ணாடி ஜாடியை ஒரு வெள்ளைத் துணியால் போட்டு மூடவும். இப்போது அரைத்த தேங்காயை ஜாடியின் மேலே ஊற்றவும். வெள்ளைத் துணியால் வடிகட்டப்பட்டு உள்ளே இறங்கும்.
முழுவதுமாக வடிகட்டிய பிறகு ஜாடியை மூடி போட்டு வைத்துக்கொள்ளவும். (தேவைப்பட்டால் ஃபிரிட்ஜிலும் வைத்துக்கொள்ளலாம்.) 24 மணி நேரம் கழித்து ஜாடியைப் பாருங்கள்.
ஜாடியின் கீழே தேங்காய் எண்ணெயும், மேலே தேங்காய் க்ரீமும் மிதக்கும்! க்ரீமை எடுத்துவிட்டு சுத்தமான தேங்காய் எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்ளவும். (க்ரீமும் சமையலுக்கு ஏற்றதுதான்.)
அல்லது எண்ணெய் செக்கு இருக்குமிடம் தெரிந்தால் அங்கே தேங்காய்களை வாங்கிக்கொண்டுபோய் கொடுக்கலாம். அவர்களே பிழிந்து, எண்ணெய் எடுத்துக் கொடுப்பார்கள். மற்றபடி, ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்களை வாங்கி உடல்நலனைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம்.
தேங்காய்க்கு அடுத்ததாக மக்களை அச்சமூட்டும் இன்னொரு உணவுப்பொருள் – நெய்.
முன்பெல்லாம் சமையல் எண்ணெயாக நெய்யே பயன்படுத்தப்பட்டது. ‘பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார’ என்கிறது பிரபந்தம். அதாவது பால்சோறே தெரியாதபடி நெய்யை மேலே ஊற்றி அதை உண்கையில் அந்த நெய்யானது முழங்கை வரை வழியுமாம். இப்படி நெய்யும், பாலுமாக உண்டு வந்த மக்களிடம் நெய்யும், வெண்ணெயும் மோசம், அதில் கொலஸ்டிரால் இருக்கிறது என்று கூறினால் குழப்பம்தானே அடைவார்கள்? இந்தப் பீதியினால் நெய், வெண்ணெய்க்குப் பதிலாக கனோலா, சூரியகாந்தி எண்ணெய், நிலக்கடலை எண்ணெய் போன்றவற்றை மக்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
நெய்க்கு எதிரான பன்னாட்டு நிறுவனங்களின் இந்த யுத்தம் எப்போது தொடங்கியது? அமெரிக்காவில், விளக்கு எரிக்க மட்டுமே பயன்பட்டு வந்த பருத்திவிதை எண்ணெய் (Cottonseed oil), பிறகு மின்சார விளக்குகள் பயன்பாட்டுக்கு வந்ததால் உபயோகமில்லாமல் போனது.
மீதமுள்ள எண்ணெயை என்ன செய்வது எனப் புரியாமல் நிறுவனங்கள் திகைத்தன. அந்தச் சூழலில் பிராக்டர் அண்ட் காம்பிள் (Procter and Gamble) நிறுவனத்தில் ஒரு விஞ்ஞானி பருத்திவிதை எண்ணெயைச் சமையலுக்கு பயன்படுத்தலாம் என்று புதிய ஆலோசனையைச் சொன்னார். ஆனால் உயர்வெப்பத்தைத் தாங்கும் சக்தி பருத்திவிதை எண்ணெய்க்கு இல்லை. வாணலியில் எண்ணெய் ஊற்றி அதை உயர்வெப்பத்தில் கொதிக்க வைக்கும்போது அது எரிந்து புகைமண்டலத்தைப் பரப்பியது. ஆனால், இதைச் சரிகட்டத்தான் ஹைட்ரஜனேற்றம் என்கிற வழிமுறை இருக்கிறதே! பருத்திவிதை எண்ணெய் வேதிவினைக்கு உட்படுத்தப்பட்டது. எண்ணெயின் கொழுப்பில் ஒரு ஹைட்ரஜன் அணுவைச் செயற்கையாக உள்ளே நுழைத்தார்கள். இதனால் அந்த எண்ணெய்களின் கொழுப்புகள் திரிந்து டிரான்ஸ் ஃபேட் எனும் வகை கொழுப்பாக மாறின. அதன்பின் இந்த எண்ணெய் தாராளமாக சூடு தாங்கியது. சமையலுக்கும் ஏற்றதாக மாறியது.
இதன்பின் அமெரிக்காவில் பாரம்பரிய சமையல் எண்ணெயாகப் பயன்பட்டு வந்த பன்றிக்கொழுப்பு, மாட்டுக்கொழுப்பு, வெண்ணெய், நெய்க்குப் பதிலாக பருத்திவிதை எண்ணெய் சந்தைப்படுத்தப்பட்டது. நெய்யை விட விலை மிகக் குறைவாக இருந்ததாலும், கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்யப்பட்டதாலும் மக்கள் அதை அதிக அளவில் வாங்கத் தொடங்கினார்கள். இதன்பின் கனோலா, சூரியகாந்தி எண்ணெய் போன்றவையும் இதேபோல சந்தைப்படுத்தப்பட்டன.
இந்தச் சூழலில் 1960-களில் கொலஸ்டிரால் பீதி எழுந்ததும் நெய்யின் விற்பனை முழுக்கச் சரிந்தது. பன்னாட்டு நிறுவனங்கள் நெய்க்குப் பதிலாக டால்டா, வனஸ்பதி, பாமாயில் போன்ற எண்ணெய்களை அறிமுகப்படுத்தின.
ஆசிய நாடுகள் எங்கும் மலேசிய பாமாயில் அறிமுகமானது. பாமாயில் உடல்நலனுக்கு நல்லது என்றாலும் அதையும் ஹைட்ரஜனேற்றம் செய்து விற்றதால் அதுவும் உடல்நலனுக்குக் கெடுதலானதாக மாறியது. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் விளைந்த சோயாபீன்ஸில் புரதம் இருந்ததால் மாடுகளுக்கு அதை உணவாக கொடுக்கலாம் என்கிற எண்ணத்தில் அமெரிக்காவிலும் சோயாபீனை அதிக அளவில் பயிரிடத் தொடங்கினார்கள். சோயாபீனில் இருந்து எடுக்கப்பட்ட சோயா எண்ணெயும் சந்தையில் விற்பனைக்கு வந்தது.
இந்தியாவில் 70, 80களில் சோயாபீன்ஸ் பிரபலமானது. சோயாபீனிலிருந்து எண்ணெயைப் பிழிந்து எடுத்தால் புரதம் நிரம்பிய எண்ணெய் புண்ணாக்கு கிடைக்கும். இதில் புரதம் ஏராளமாக இருந்ததால் மாடுகளுக்கு உணவாக இதைப் பயன்படுத்தினார்கள். இந்தச் சூழலில் ‘இதை மனிதர்களுக்கு விற்றால் என்ன?’ என யோசித்து மீல்மேக்கர் எனும் பெயரில் சோயா சந்தைக்கு வந்தது. அதன்பின் சோயா பால் (Soy milk), டோஃபு (Tofu), டெம்ஃபே (Tempeh), சோயா பனீர் போன்ற பல சோயா அடிப்படையிலான பொருள்கள் சந்தைப்படுத்தப்பட்டன.
முழுக்க முழுக்க விலை மலிவான, மாடுகளுக்கு உணவாகப் பயன்படும் தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்களும், புண்ணாக்கும் ஆரோக்கிய உணவு என மக்களின் தலையில் கட்டப்பட்டன. இதன் விளைவாக, பாரம்பரிய எண்ணெய்கள், நெய், வெண்ணெய் போன்றவற்றின் விற்பனை குறைந்தது. உண்மையில் நெய், வெண்ணெய்க்கு அருகில் கூட இன்று நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய்கள் வரமுடியாது என்பதே உண்மை.
சுவை என எடுத்துக்கொண்டாலும் நெய்க்கு நிகரான ஒரு சுவையை வேறு எந்த சமையல் எண்ணெயினால் அளிக்கமுடியுமா? எந்த வேதிவினையும், ஹைட்ரஜனேற்றம் போன்றவையும் இல்லாமலேயே நெய் உயர்வெப்பத்தைத் தாங்கும் சக்தியும் கொண்டது. இப்படி ஆரோக்கியம், சுவை என எதை எடுத்துக்கொண்டாலும் நெய்யே முன்னிலை வகிக்கும். பேலியோ டயட்டைப் பின்பற்றும் பலரும் சமையல் எண்ணெயாக நெய்யைப் பயன்படுத்தி அதன் முழுபலனை அனுபவித்து வருகிறார்கள்.
100 கிராம் நெய்யில் (அல்லது வெண்ணெயில்) உள்ள சத்துக்கள்: 50% வைட்டமின் ஏ, 14% வைட்டமின் டி, 12% வைட்டமின் ஈ, 9% வைட்டமின் கே2 மற்றும் சிறிதளவு போலிக் அமிலக், வைட்டமின் பி12 போன்றவை உள்ளன.
வெண்ணெயில் உள்ள வைட்டமின் ஏ மனித உடலால் எளிதில் ஜீரணிக்கப்படும் ரெடினால் எனப்படும் வகை வைட்டமின் ஏ ஆகும். அதில் உள்ள கே2 எனும் வைட்டமின் பற்கள், எலும்பு நலனுக்கு மிக உகந்தது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள். கே2 வைட்டமினும், ரெடினால் வடிவிலுள்ள வைட்டமின் ஏ-வும் சைவர்களுக்குக் கிடைப்பது மிக கடினம் (அசைவ உணவுகளில் மட்டுமே அது உள்ளது). எனில் வெண்ணெய் எத்தனை ஆரோக்கியமான உணவு!
இதில் உள்ள பலன்களை அடுக்கலாம்.
உடல், கொலஸ்டிராலைக் கொண்டு மேற்கொள்ளும் பணிகளுக்குத் (ஹார்மோன்களைத் தயாரிப்பது, உடலில் செல்களைப் பாதுகாப்பது) தேவையான லெசிதின் எனும் மூலப்பொருள் வெண்ணெயில் உள்ளது. வெண்ணெயில் உள்ள ஆண்டிஆக்சிடண்டுகள் மாரடைப்பைத் தடுக்கும் சக்தி கொண்டவை. இதில் உள்ள உறைகொழுப்பானது புற்றுநோய்க்கு எதிராகப் போரிடும் தன்மை கொண்டது. மற்றும் வெண்ணெயில் உள்ள லினோலிக் அமிலம் (Linoleic acid) நம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
கால்சியத்தை விடவும் கே2, வைட்டமின் டி, மக்னிசியம் எனும் மும்மூர்த்திகளும் பற்கள் மற்றும் எலும்புகளின் நலனுக்கு முக்கியம் என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. முடக்குவாதம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கவும் கே 2, மக்னிசியம், வைட்டமின் டி ஆகியவை உதவும். ஆக, இத்தனை முக்கியமான கே2 வைட்டமின் சைவர்களுக்கு கிடைக்க பாலும், வெண்ணெயுமே உதவுகின்றன
ஆனால் வெண்ணெய் உடல்நலனுக்குக் கெடுதல் என விஞ்ஞானிகள் ஏன் கூறுகிறார்கள்?
வெண்ணெய் உண்பதால் உடலில் உள்ள எல்டிஎல் (LDL) எனும் கெட்ட கொலஸ்டிராலின் அளவுகள் அதிகரிக்கும். மொத்த கொலஸ்டிரால் (Total Cholesterol) அளவும் அதிகரிக்கும். எனவே வெண்ணெய், நெய் ஆகியவை உடலுக்கு ஆபத்தானது என விஞ்ஞானிகள் கருதினார்கள்.
ஆனால் வெண்ணெய், எல்டிஎல் கொலஸ்டிராலின் அளவை (LDL particle size) அதிகரிப்பதால்தான் எல்டிஎல் அதிகமாகிறது என்பதை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளார்கள். எல்டிஎல்-லில் இருவகை உண்டு - Small particle LDL மற்றும் Large particle LDL. இதில் சிறியவகை எல்டிஎல் (Small particle LDL) தான் ஆபத்தானது. அதுதான் நம் இதயநாளங்களில் ஒட்டிக்கொண்டு மாரடைப்பை வரவழைக்கும் தன்மை கொண்டது. பெரியவகை எல்டிஎல் (Large particle LDL) நம் இதயநாளங்களில் ஒட்டுவதில்லை. இதனால் எல்டிஎல் அளவுகள் அதிகரித்தாலும் நமக்குக் கெடுதல் எதுவும் கிடையாது. வெண்ணெய், நெய் போன்றவை நம் சிறியவகை எல்டிஎல்லை பெரியவகை எல்டிஎல்லாக மாற்றுகிறது. இதனால் எல்டிஎல் அதிகரித்தாலும் அதனால் நமக்குப் பிரச்னைகள் ஏற்படாது. அதேசமயம் வெண்ணெய், நெய் போன்றவை நல்ல கொலஸ்டிராலான எச்டிஎல்-யும் சேர்த்தே அதிகரிக்கிறது. பிறகு என்ன?
*
பாதாமும் கொழுப்பு நிரம்பிய இன்னொரு உணவு. இதைக்கண்டு பலரும் பயப்படுவதைக் காணலாம். தினமும் ஏழு பாதாம் மட்டுமே சாப்பிடவேண்டும் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால் உண்மை என்ன?
பாதாம் உடல்நலனுக்கு மிக உகந்த சைவ உணவு.
சைவ பேலியோவில் தினமும் 100 பாதாம்கள் உண்ண பரிந்துரைக்கப்படுகிறது. பாதாமில் உள்ள வைட்டமின் ஈ ஒரு ஆண்டிஆக்சிடண்டாகச் செயல்படும் தன்மை கொண்டது. தலைமயிர் உதிர்வதைத் தடுக்கும் தன்மையும் கொண்டது. பாதாமில் ஏராளமான மக்னிசியம் காணபடுகிறது. இது நம் பற்கள், எலும்புகளின் நலனுக்கு உகந்தது.
பாதாம் பற்றி அறிவியல் ஆய்வுகள் என்ன கூறுகின்றன?
பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியுட்ரிஷனில் மருத்துவர் கெல்லி தலைமையில் நடந்த ஆய்வு ஒன்று 2006ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில், வாரம் நான்குமுறை பாதாம், வால்நட் போன்ற கொட்டைகளை உண்பவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 37% குறைவதாக அந்த ஆய்வு சொல்கிறது. (இணைப்பு: http://www.ncbi.nlm.nih.gov/pubmed/17125535)
சைவ பேலியோ டயட் என்பது உடல்நலனுக்கு உகந்த தேங்காய், வெண்ணெய், நெய், பாதாம், பனீர் போன்ற ஆரோக்கியமான உணவுகளின் அடிப்படையில் அமைந்தது. எனவே எவ்வித அச்சமும், தயக்கமும் இன்றி பேலியோ டயட்டைப் பின்பற்றலாம்.
புரட்டாசி டயட்! இது புரட்டாசி மாதம். அசைவர்கள் கூட இந்த மாதம் சைவ உணவைத்தான் உண்பார்கள். அவர்களுக்கான புரட்டாசி மாத சிறப்பு டயட் சார்ட்: காலை உணவு: பட்டர் டீ & பட்டர் காளிபிளவர் பட்டர் காளிபிளவர் செய்முறை காளிபிளவரைச் சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பிறகு வாணலியில், துண்டுகளில் உப்பு போட்டு மூடி, நன்கு கொதிக்கவிடவும். மசாலா தேவை என்றால் சேர்க்கலாம். ஆனால் அவசியமில்லை. அதன்பின் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து உண்ணலாம். இதுதான் பட்டர் காளிபிளவர்! பட்டர் டீயுடன் சேர்த்து பட்டர் காளிபிளவரும் சேர்த்துச் சாப்பிட்டால் பல மணிநேரம் பசிக்காது. மதிய உணவு: 100 வறுத்த பாதாம்கள் இரவு உணவு: பனீர் மஞ்சூரியன் அல்லது பனீர் டிக்கா. |
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.