பேலியோ டயட்

பகுதி 13: மகளிர் மட்டும்!

இரும்புச்சத்து குறைபாட்டால் வரும் வியாதிகளில் முக்கியமானது, ரத்த சோகை (அனீமியா).

நியாண்டர் செல்வன்


ரும்புச்சத்து குறைபாட்டால் வரும் வியாதிகளில் முக்கியமானது, ரத்த சோகை (அனீமியா).

நம்முடைய திசுக்களுக்கு, போதுமான அளவு ஆக்ஸிஜனைக் கொண்டுசெல்ல முடியாதபடி, நம் ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதையே ரத்த சோகை என்கிறோம். ரத்தத்தில் உள்ள ஹீமோக்ளோபின் குறைவதால் ஏற்படும் நோய் இது.

நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை நம் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்வது, ஹீமோக்ளோபின். நம் சிவப்பு அணுக்களுக்குள் உள்ள ஹீமோக்ளோபின், இரும்பு மற்றும் புரதச் சத்தால் ஆனது. எனவே நம் உடலில் இரும்புச் சத்து போதுமான அளவு இல்லையென்றால், ஹீமோக்ளோபினின் அளவும் குறையும். இதனால் ரத்த சோகை உண்டாகும். (போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் போவதால் நாம் விரைவில் களைப்படைந்து பலவீனமாகிவிடுவோம்.) பெரும்பாலும், பெண்களிடமே ரத்த சோகை அதிக அளவில் காணப்படுகிறது.

நம் உடல் மூன்றுவிதமான ரத்த செல்களை உற்பத்தி செய்கிறது. வெள்ளை ரத்த அணுக்கள், சிவப்பு ரத்த அணுக்கள், ரத்தத்தட்டுஅணுக்கள் (Platelets). ரத்த செல்கள் எல்லாமே நம் உடலின் எலும்புகளில் உள்ள எலும்பு மஜ்ஜையில் உற்பத்தி ஆகின்றன.

வெள்ளை ரத்த அணுக்கள்: இவை நோய்தொற்றை எதிர்க்கும் தன்மை கொண்டவை.

சிவப்பு ரத்த அணுக்கள்: இவற்றில் ஹீமோக்ளோபின் எனப்படும் இரும்புச்சத்தை ஏராளமாகக் கொண்டுள்ள ஒருவகைப் புரதம் காணப்படுகிறது. ஹீமோக்ளோபின்தான் சிவப்பு ரத்த செல்களுக்கு நம் நுரையீரலிலிருந்து உடலின் பிற பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்ல உதவுகிறது. அதே போல சிவப்பு அணுக்கள் கரியமலவாயுவையும்((கார்பன் டை ஆக்சைட்) உடலின் பிற பகுதிகளிலிருந்து நுரையீரலுக்குக் கொண்டு செல்லவும் ஹீமோக்ளோபின் உதவுகிறது.

ரத்தத்தட்டுஅணுக்கள்: ரத்தம் உறையாமல் காக்கும்.

ஹீமோக்ளோபினையும், சிவப்பு அணுக்களையும் உற்பத்தி செய்ய நம் உடலுக்கு ஏராளமான ஃபோலிக் அமிலம் (பி 9 வைட்டமின்), இரும்புச்சத்து மற்றும் பி12 ஆகிய வைட்டமின்கள் அவசியம்.

ரத்த சோகை உண்டாக பல காரணங்கள் உண்டு.

இரும்புச்சத்துக் குறைபாடு (Iron deficiency Anemia)

மாதவிலக்குச் சமயத்தில் பெருமளவு உதிரப்போக்கு, அல்சர், புற்றுநோய், சிலவகை மருந்துகளை உட்கொள்வது போன்ற காரணங்களால் இவ்வகை ரத்த சோகை ஏற்படலாம்.

வைட்டமின் குறைபாடு (Vitamin Deficiency Anemia)

வைட்டமின் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை, பெர்னிசியஸ் அனிமியா (Pernicious Anemia) என்றும் அழைக்கப்படும். பி 12, ஃபோலிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும்.

வியாதிகளால் உண்டாகும் ரத்த சோகை (Anemia of Chronic Diseases)

புற்றுநோய், முடக்குவாதம் போன்ற சில வியாதிகள் சிவப்பு அணுக்கள் உருவாவதைத் தடுப்பதால் ரத்த சோகை ஏற்படலாம்.

இது தவிர மரபணுக் குறைபாடு, குடல்புழுக்கள் மூலம் வரும் ரத்த சோகை என இந்த வியாதி உண்டாக நிறைய காரணங்கள் இருந்தாலும் பெரும்பாலான பெண்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாட்டாலும், வைட்டமின் குறைபாட்டாலுமே ரத்த சோகை ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

*

ரத்த சோகை, உலகெங்கும் பெண்களைத் துன்புறுத்தி வரும் ராட்சசன் என்று கூறினால் மிகையே அல்ல. உலகெங்கும் உள்ள பெண்களில் சுமார் 56% பெண்கள் இந்த வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிலும் குறிப்பாக தெற்காசியாவில், இந்தியாவில் இதன் தாக்கம் மிகவும் அதிகம். இந்திய அரசின் ஆய்வு ஒன்று, மூன்றில் ஒரு பங்கு இந்தியப் பெண்களின் எடை, இயல்பு அளவை விடவும் குறைவாக இருப்பதாக கூறுகிறது. குறைந்த எடை, ஊட்டச்சத்து குறைபாட்டின் ஓர் அறிகுறி.

இந்தியப் பெண்களில் சரிபாதி பேர் (52%) ரத்த சோகையால் அவதிப்படுகிறார்கள். இதற்கான காரணங்கள்:

1) இரும்புச்சத்து அதிகமாக உள்ள இறைச்சி, மீன் போன்ற உணவுகளை உண்ணாமல் தவிர்ப்பது மற்றும் குறைவாக உண்பது. நம் நாட்டில், வீட்டில் உள்ள எல்லோரும் சாப்பிட்டது போக மீதமிருக்கும் உணவையே பெண்கள் உண்கிறார்கள். இதனால் அவர்களுக்குப் போதுமான ஊட்டச்சத்து உள்ள உணவுகள் கிடைப்பதில்லை.

2) பைட்டிக் அமிலம் (Phytic acid) உள்ள உணவுகளை உண்பது. இது உணவிலுள்ள இரும்புச்சத்தை உடலில் சேராமல் தடுத்துவிடுகிறது.

பைட்டிக் அமிலம் என்பது பொதுவாக விதைகளில் காணப்படும் ஒருவகை அமிலம் ஆகும். அரிசி, கோதுமை, பருப்புகள், பீன்ஸ், சோயா, நிலக்கடலை, பாதாம் போன்றவற்றில் இது உள்ளது. பீன்ஸில் இரும்புச்சத்து இருந்தாலும் அதில் பைட்டிக் அமிலமும் இருப்பதால் பீன்ஸை உண்ணும்போது அதில் உள்ள பைட்டிக் அமிலம் பீன்ஸில் உள்ள இரும்புச்சத்தை நம் உடலில் சேரவிடாமல் தடுத்துவிடுகிறது. இரும்பு தவிர கால்ஷியம், மக்னீசியம் போன்ற சத்துக்களையும் உடலில் சேரவிடாமல் பைட்டிக் அமிலம் தடுத்துவிடுகிறது.

பயிறு, கடலை போன்ற உணவுகளை முளைகட்டி, வேகவைப்பதன் மூலமும், நீரில் 10 - 12 மணிநேரம் ஊறவைப்பதன் மூலமும், பாதாம், நிலக்கடலை போன்றவற்றை வறுப்பதன் மூலமும் பைட்டிக் அமிலத்தின் அளவுகளைக் குறைக்க முடியும். ஆனால், முற்றிலும் அகற்றமுடியாது. எனவே, பருப்பு, பீன்ஸ் ஆகியவற்றில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில் எத்தனை சதவிகிதம் சேரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

தவிரவும் இரும்புச்சத்தில் இரு வகைகள் உண்டு. ஹீமே இரும்பு (Heme Iron), ஹீமே அல்லாத இரும்பு (non-heme iron). இதில் ஹீமே வகை இரும்பு மீன், சிக்கன், முட்டை போன்றவற்றில் மட்டுமே கிடைக்கிறது. உடலால் மிக எளிதில் கிரகிக்கப்பட்டு விடும். (ஓர் உணவு ஜீரணம் ஆனாலும் அதிலுள்ள சத்துக்களை உடல் கிரகிப்பது இல்லை. உதாரணமாக கீரை எளிதில் ஜீரணமானாலும் அதிலுள்ள இரும்புச்சத்து உடலால் கிரகிக்கப்படுவதில்லை.) தாவர உணவுகளில் ஹீமே அல்லாத வகை இரும்பு மாத்திரமே உள்ளது. இது உடலால் எளிதில் கிரகிக்கப்படுவதில்லை. அதனால் சைவர்களுக்குப் போதுமான இரும்புச்சத்து கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

இதுபோக கடும் உடற்பயிற்சி செய்பவர்கள், அடிக்கடி ரத்ததானம் செய்பவர்கள் ஆகியோருக்கு ரத்த சோகை வரும் வாய்ப்பு உண்டு. இதனால் ரத்த தானம் தரவேண்டாம் என்று பொருள் இல்லை. ஆனால் அடிக்கடி கொடுப்பவர்கள் இரும்புச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஆண்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளில் 8 மி.கி. இரும்புச்சத்து இருக்கவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 19 – 50 வயதுள்ள பெண்களுக்கு இது இருமடங்கு தேவைப்படுகிறது. (இந்த வயதுப் பெண்களுக்கு அரசால் பரிந்துரைக்கப்படும் இரும்புசத்தின் அளவுகள் மிக அதிகம். 50 வயதுக்கு மேல் இதன் அளவு குறைந்து விடுகிறது.) அதாவது சுமார் 16 - 18 மி.கி. இரும்புச்சத்து. இது இயற்கை பெண்களுக்கு செய்துள்ள ஓரவஞ்சனை என்றுகூட கூறலாம்.

நீங்கள் சைவ உணவுப் பழக்கம் உள்ள பெண்ணாக இருந்தால் உங்களுக்கு ரத்த சோகை இருக்கும் வாய்ப்பு அதிகம்.

கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால் ரத்த சோகை இருக்க வாய்ப்புண்டு.

  • அடிக்கடி மூச்சு வாங்குதல், களைப்பு ஏற்படுதல். இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்ய பயன்படும். சிவப்பு அணுக்கள் உடலெங்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும். இரும்புச்சத்து குறைபாட்டால் ஆக்சிஜன் பரவல் குறைந்து களைப்பு ஏற்பட்டுவிடும். சோர்ந்து உட்கார்ந்துவிடுவோம்.

  • தலைச்சுற்றல், தலைவலி.

  • உள்ளங்கை, பாதம் போன்றவை சூடாக இல்லாமல் குளிராக இருத்தல்.

  • இதயம் பட பட என அடித்தல்.

  • உணவல்லாதவற்றை உண்ணத் தோணுதல்! (உதா: செங்கல் பொடி, மண் போன்றவற்றை கர்ப்பிணிகளுக்கு உண்ணத் தோன்றும். காரணம் - இரும்புச்சத்து குறைபாடு.)

சைவ உணவுப் பழக்கம் உள்ள பெண்கள், மேலே உள்ள அறிகுறிகள் தங்களிடம் தென்பட்டால் மருத்துவப்பரிசோதனை செய்து இரும்புச்சத்து அளவை அறிந்துகொள்ள வேண்டும். ரத்த சோகை இருப்பது தெரிந்தால் மருத்துவர் மூலமாக இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வது நலம்.

சைவர்கள் உணவின் மூலம் இரும்புச்சத்தை அடைய முயல்வது கடினம். காரணம், சைவ உணவுகள் அனைத்திலும் நான் ஹெமே (Non-heme) வகை இரும்புச்சத்துதான் உள்ளது. இவற்றை உடலால் கிரகிப்பது மிகக் கடினம். உதாரணம் கீரையில் இரும்புச்சத்து அதிகம். ஆனால் கீரையில் உள்ள ஆக்சலேட்டுகள் (Oxalates) இரும்புச்சத்தை உடல் கிரகிப்பதைத் தடுத்துவிடும். கீரையில் உள்ள இரும்புச்சத்து 2% அளவிலாவது உடலில் சேர்ந்தால் அதிசயம்.

உலர்திராட்சை, பேரீட்சை, கோதுமை போன்றவற்றுக்கும் இதே நிலைதான். பேரீட்சையில் இரும்புச்சத்து அதிகம் என கிட்டத்தட்ட அனைவருமே நம்புகிறார்கள். ஆனால் உண்மை என்ன? ஒரு பெண்ணுக்குப் போதுமான அளவு இரும்புச்சத்து கிடைக்க, அவர் நூறு பேரீட்சைகளை உண்ணவேண்டும். இது சாத்தியமா? அதிலும் நம் உடல் கிரகிக்கும் இரும்பின் சதவிகிதம் குறைவே.

அசைவர்களுக்குக் கிடைக்கும் நிறைய பலன்களில் இதுவும் ஒன்று. ஆட்டு ஈரல், ஆட்டு ரத்தம், சிக்கன், முட்டை போன்றவற்றில் போதுமான அளவு இரும்புச்சத்து கிடைக்கும். உதாரணம் 4 முட்டை சாப்பிட்டால் அதில் 2.4 கிராம் அளவுக்கு எளிதில் கிரகிக்கப்படும் இரும்புச்சத்து கிடைக்கும். நூறு கிராம் ஆட்டு ஈரலைச் சாப்பிடுங்கள். ஒருநாளைக்குத் தேவையான இரும்புச்சத்தை விடவும் (130%) அதிகமாகக் கிடைக்கும். அசைவ உணவுகளில் ஹீமோக்ளோபின் உள்ளதால் உடலில் அது எளிதில் கிரகித்துக்கொள்ளும்.

இரும்புச்சத்து உள்ள சைவ உணவுகள்

அதெல்லாம் கிடையாது. நான் சைவம்தான். முட்டையைக் கையால் கூட தொடமாட்டேன் என்கிற சைவர்கள் பின்வரும் வழிமுறைகளைக் கையாளலாம்.

கீரை, முந்திரி, பாதாம், ஃபிளாக்ஸ்சீட் பவுடர் (ஆளிவிதை, Flaxseed Powder), கொக்கோ பவுடர் போன்ற இரும்புச்சத்து உள்ள பேலியோ உணவுகளைச் சாப்பிடுங்கள். அதற்கு 2 மணிநேரம் முன்/பின் தேநீர், நட்ஸ், முழு தானியம் போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள். தேநீர், நட்ஸ், தானியத்தில் உள்ள பைட்டிக் அமிலம் இரும்புச்சத்து கிரகிப்பைக் குறைத்துவிடும்.

தினமும் 2 ஸ்பூன் ஃபிளாக்ஸ்சீட் பவுடர் சாப்பிட்டால் 1.2 மி.கி. இரும்புச்சத்து கிடைக்கும்.

தினமும் ஒரு தேங்காய் சாப்பிடவேண்டும். இதில் சுமார் 10 மி.கி. இரும்புச்சத்து கிடைக்கும். தேங்காயில் உள்ள இரும்புச்சத்து அதிக அளவில் உடலில் சேர்கிறது.

இந்துப்பு எனப்படும் இயற்கை உப்பில் இரும்புச்சத்து உண்டு. இயற்கை உணவு அங்காடிகளில் இது கிடைக்கும். சாதா உப்புக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்.

பீன்ஸ், பருப்புகள், நெல்லிக்காய், கொய்யாப்பழம், எலுமிச்சை, பூசணிவிதையில் இரும்புச் சத்து உண்டு.

கிணற்று நீர், இயற்கையான சுனை நீர் ஆகியவற்றில் மண்ணின் தன்மையைப் பொறுத்து இரும்புச்சத்து கிடைக்கும்.

இரும்புச்சத்து உள்ள உணவுகளை உண்ணும்போது கூடவே கால்ஷியம் அதிகம் உள்ள உணவுகளை உண்பதைத் தவிர்க்கவேண்டும். உதா: பால், தயிர். கால்ஷியம் இரும்பின் அளவைக் குறைத்துவிடும்.

இரும்புச்சட்டியில் சமைத்தால் இரும்புச்சத்து அதிக அளவில் உடலில் சேரும். குறிப்பாக இரும்புத்துண்டு ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். அதை நன்றாகக் கழுவி சாம்பார், ரசம் சமைக்கும்போது கூடவே இரும்புத்துண்டை அதன் உள்ளே போட்டுவிடுங்கள். இது இரும்புச்சத்து உடலில் சேர்வதை அதிகரிக்கும் ஓர் உத்தி. வியட்நாம். கம்போடியா போன்ற சில நாடுகளில் இதைச் செய்துபார்த்தபோது, ரத்த சோகையின் விகிதம் கணிசமான அளவில் குறைந்தது தெரியவந்தது. (தொடர்புடைய இணைப்பு: http://www.bbc.com/news/health-32749629)

*

பி 12 வைட்டமின் குறைபாடும் ரத்த சோகை வர முக்கிய காரணம் என்று பார்த்தோம். பி 12 வைட்டமின் – ஆடு, மீன், கோழி, முட்டை போன்ற அசைவ உணவுகளிலும், பாலிலும் உள்ளது. ஆனால், எந்தவொரு தாவர உணவிலும் பி 12 கிடையாது.

அசைவர்கள் தினமும் 4 முட்டை, மீன், இறைச்சி என உண்ணுவதன் மூலம் போதுமான பி 12 வைட்டமினை அடைய முடியும். ஆனால் சைவர்களுக்கு ஒருநாளுக்குத் தேவையான குறைந்தபட்ச அளவு பி 12 கிடைக்கவேண்டும் என்றால் அவர்கள் தினமும் ஒன்றே கால் லிட்டர் பால் பருகவேண்டும். இது சாத்தியமில்லை. எனவே, சைவர்களுக்கு பி 12 தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம் என்றே கூறலாம்.

அதனால் ஒரு மருத்துவப் பரிசோதனை மூலம் பி12 வைட்டமின் அளவை அறிந்துகொள்ளுங்கள். பி 12 குறைவாக இருந்தால் என்ன செய்யலாம்? நீங்கள் அசைவராக இருந்தால் பிரச்னையில்லை என்று பார்த்தோம். அதேசமயம் நீங்கள் முட்டை கூட உண்ணாத சைவராக இருக்கும் பட்சத்தில் மருத்துவரிடம் கேட்டு ஊசி மூலம் பி12 வைட்டமினை எடுத்துக்கொள்ளுங்கள்.

மொத்தத்தில் சைவப் பெண்களுக்கு ரத்த சோகை அறிகுறிகள் இருந்தால் மருத்துவர் ஆலோசனையின் பேரில் இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வது நல்லது. பொதுவாக, ஆண்களுக்கு ரத்த சோகை பிரச்னை ஏற்படுவதில்லை.

பி.சி.ஓ.எஸ்

அடுத்ததாக பெண்களைத் தாக்கும் பாலிசிஸ்டிக் ஒவரி சிண்ட்ரோம் (PCOS - Polycystic ovary syndrome) எனப்படும் முக்கிய வியாதியைப் பார்க்கலாம்.

18 முதல் 21 வயது வரை உள்ள பெண்களைத் தாக்கக்கூடிய நோய்களில் இதுவும் ஒன்று. இந்த நோய் பாதிப்பில், இந்தியாவிலேயே தமிழகத்துக்குத்தான் முதலிடம் என்பதையும் கவனிக்கவேண்டும்.

பெண்கள் சிலருக்குப் போதுமான அளவில் கருமுட்டைகள் உற்பத்தி ஆகவில்லை என்றால் அது பி.சி.ஓ.எஸ் என்று அழைக்கப்படும்.

ஹார்மோன் சமநிலை தவறுவதால் பி.சி.ஓ.எஸ் பாதிப்பு இருக்கும் பெண்களின் உடல், ஆண்களின் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரானை (Testosterone) அதிக அளவில் உற்பத்தி செய்யும். இதனால் பி.சி.ஓ.எஸ் உள்ள பெண்களுக்கு மீசை முளைப்பது, தாடி முளைப்பது போன்ற பாதிப்புகள் ஏற்படும். காரணம், அவர்கள் உடலில் இன்சுலின் சுரந்து ஹார்மோன்கள் பாதிப்படைந்து ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரான் உடலில் அதிக அளவில் சுரந்து விடும். ஆண்களுக்கு இம்மாதிரி நிகழ்கையில் அவர்களுக்கு ஆண் மார்பகங்கள் முளைக்கின்றன. வெளியே சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு பல ஆண்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இத்தகைய ஆண்/பெண்களுக்கு விந்தணுக் குறைபாடு, கருமுட்டைக் குறைபாடு போன்ற சிக்கல்களும் நேரும்.

இந்த நோய் ஏன் வருகிறது எனப் பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தாலும் தற்போது அதற்குக் காரணம் இன்சுலின்தான் எனக் கண்டறியபட்டுள்ளது.

தானியம் மற்றும் மாவுச்சத்து உள்ள உணவுகளால் உடலில் இன்சுலின் சுரப்பு அதிகரித்து ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கப்பட்டு கருமுட்டைகளும், கருப்பையும் பாதிப்படையும் நிலை உருவாகிறது. இதனால் பி.சி.ஓ.எஸ் வியாதி ஏற்படுகிறது. அதனால் மருத்துவர்கள் இன்சுலினின் ஆட்டத்தைக் குறைப்பதற்காக சர்க்கரை மருந்தான மெட்பார்மினைக்கூட இதற்குப் பரிந்துரைக்கிறார்கள். சர்க்கரை இல்லாமல் மெட்பார்மினை உண்ண வேண்டியதில்லை. ஆனால், நம் மக்களுக்கு வழக்கமான தானிய டயட்டை விட முடியாது. இதனால் இன்சுலின் கட்டுப்பாடும் சாத்தியமாவதில்லை. எனவே மருத்துவர்களுக்கும் வேறு வழி இருப்பதில்லை!

ஹார்மோன் சமநிலை தவறுவதற்கு முக்கிய காரணம் - உணவில் போதுமான அளவு கொலஸ்டிராலும் ஊட்டச்சத்தும் இல்லாததே. இன்னொரு முக்கிய காரணம் - வைட்டமின் டி3 பற்றாக்குறை. கொலஸ்டிரால்தான் ஹார்மோன்கள் அனைத்துக்கும் அரசன். அதை மூலப்பொருளாகக் கொண்டுதான் உடல் போதுமான ஹார்மோன்களைத் தயாரிக்கிறது.

இத்தகைய குறைபாடு உள்ள பலரும் பேலியோ உணவு மூலம் தங்கள் குறைகளைப் போக்கியுள்ளனர். குழந்தைபேறும் அடைந்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அதனால் இதுபோன்ற சிக்கல்கள் உள்ளவர்கள் தானிய உணவைத் தவிர்த்து, இன்சுலின் சுரப்பைக் குறையவைக்கும் பேலியோ உணவுகளை உண்ணுவதன் நிவாரணம் பெறலாம்.

பி.சி.ஓ.எஸ் இருக்கும் சைவப் பெண்கள் குறைந்தபட்சம் முட்டை எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில், ஹார்மோன்கள் அனைத்தையும் உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருள், முட்டையில் உள்ள கொலஸ்டிரால் என்பதால் முட்டை உண்பது நிறைய பலன்களை அளிக்கும்.

இதற்குப் பரிந்துரைக்கப்படும் (முட்டையுடன் கூடிய) சைவ பேலியோ டயட்:

தினமும் 100 கிராம் பாதாம்

கீரை, காய்கறி அடங்கிய குழம்பு. காளிபிளவர் அரிசியுடன்.

சீஸ் 50 கிராம் அல்லது 2 கோப்பை முழுக்கொழுப்பு உள்ள பால்

3 அல்லது 4 ஆர்கானிக்/நாட்டுக்கோழி முட்டை

பசுமஞ்சள் பச்சையாக தினமும் அரை டீஸ்பூன் மற்றும் பச்சைப் பூண்டு

பனீர் டிக்கா, காய்கறி சூப்

அரிசி, கோதுமை, தானியம் போன்றவற்றை அறவே தவிர்க்கவேண்டும். ஹார்மோன்களைச் சீர்குலைய வைக்கும் சோயாபீன்ஸ் கட்டாயம் தவிர்க்கப்படவேண்டும்.

மதிய வேளையில், நேரடி வெயில் தோலில் படும்வண்ணம் 15 - 20 நிமிடம் வெயிலில் நிற்பது நன்று. மதியம் 11 மணி முதல் 1 மணி வரை உள்ள வெயில் இதற்கு உகந்தது. தலைக்கு வெயில் தாக்காமல் இருக்க தொப்பி அணியவும். வெயில் அதிக அளவில் நம் உடலில் படவேண்டும் என்பதால் அதற்கேற்ற உடை அணியவும்.

தானிய உணவு, மாவுச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்த்து பேலியோ டயட்டைப் பின்பற்றுவதன் மூலம் ரத்த சோகை, பி.சி.ஓ.எஸ் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

SCROLL FOR NEXT