திருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்

அதிகாரம் - 3. நீத்தார் பெருமை   

நன்மை - தீமை என்ற இரண்டால் ஆன உலகைப் புரிந்துகொள்ள வேண்டும். புலன்களை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதே சிறந்தது.

சிவயோகி சிவகுமார்

அதிகார விளக்கம்

போதும் என்ற நிறைவைத் தரும் ஒழுக்கத்துடன் வாழ்ந்து நிறைவடைந்தவர்களை பெருமையைப் பேசுவதுதான் சிறந்தது. இறந்தவர்கள் எல்லாம் நிறைவானவர்கள் என்று எண்ணக்கூடாது. நன்மை - தீமை என்ற இரண்டால் ஆன உலகைப் புரிந்துகொள்ள வேண்டும். புலன்களை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதே சிறந்தது. அப்பொழுதுதான் மனித ஆற்றல் முற்றிலும் உணரப்பட்டு, இந்திரனைப்போல் வாழலாம். இத்தகைய பண்பு உள்ளவர்களே அரிய செயல்களைச் செய்வார்கள். புலன்கள் புலப்படுத்தும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்தால் இந்த உலகை அறிகிறோம். நிறைவானவர்களின் பெருமையைப் போற்றுவதே மறைநூல்கள். நற்குணம் அடைந்தவர் கோபத்தை அதிக நேரம் தக்கவைத்துக்கொள்வது இல்லை. அந்தணர் என்பவர், யாவரும் எல்லா உயிரும் இன்புற்று மகிழவே எண்ணுவார்.

21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

ஒழுக்கத்தால் (இயல்பாக) உயர்ந்தவர்களின் பெருமையே சிறந்தது. 

22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

உலக இன்பங்களைத் துறந்தவர்களின் பெருமையைத்தான் போற்ற வேண்டும். ஆனால், உலகமோ இறந்தவர்களை மேலானவர்கள் என்று நினைக்கிறது.

23. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

நன்மை - தீமை இரண்டின் வகை அறிந்தவர்களின் பெருமையைப் பேசுவதே நல்லது.

24. உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.

ஐந்து பொறிகளையும் உள்ளத்தால் கட்டுப்படுத்தும் திறன் பெற்றவனே பற்றற்ற வாழ்க்கையின் ஆதாரத்துக்கு விதை.

25. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

ஐந்து பொறிகளையும் அடக்கி ஆள்பவரே, கடவுளர்களின் தலைவன் இந்திரனுக்கு நிகரானவராகக் கருதப்படுவார்.

26. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

அரிய செயல்களைச் செய்பவர்களே பெரியவர்கள்; அரிய செயல்களைச் செய்ய முடியாதவர்கள் சிறியவர்கள்.

27. சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

சுவை, பார்வை, தொடுதல், கேட்டல், முகர்தல் என ஐந்து பொறிகளின் வழியாக அறியப்படுவதே இந்த உலகம்.

28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

நிறைவான வாழ்க்கை வாழ்பவர்களின் பெருமையை அவர்களின் வாய்மொழி மூலம் உணர்ந்துகொள்ளலாம்.

29. குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

குணத்தால் உயர்ந்த நிலையில் உள்ளவர்களால், கோபத்துடன் சிறிது நேரம்கூட இருக்க முடியாது.

30. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

எல்லா உயிர்களிடமும் அறத்தைப் போற்றுபவர்தான் அந்தணர் என்று கருத்தப்படுவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

SCROLL FOR NEXT