முகப்பு
யோகம் தரும் யோகம்

ஆசனம் 24 - மயூராசனம்

நல்ல பொண்ணு பொண்டாட்டியா வரனும், நல்ல பையன் புருஷனா வரனும்னு ஆணும் பொண்ணும் கனவு காணனும். நல்ல வாழ்க்கை, சந்தோஷமான நிம்மதியான வாழ்க்கை வாழனுன்னு கனவு காணனும்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:10 PM
பகிர்:

அஷ்டாங்க யோகம்

சமாதி

நிறையும் குறையும்

தினேஷுக்கு அவனது பெற்றோர் தீவிரமாகப் பெண் தேடிக்கொண்டிருந்தார்கள்.

ஒருநாள். பால்கனியில் ரூபேஸின் தாத்தாவும் பாட்டியும் அமர்ந்திருக்க, நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தான் தினேஷ்.

டேய் மச்சான். நான் பார்த்ததுல எந்தப் பொண்ணுமே அழகா இல்லடா. கலர் இருந்தா பர்சனாலிட்டி இல்லை. பர்சனாலிட்டி இருந்தா கலர் இல்லை. கலராவும் பர்சனாலிட்டியாவும் இருந்தா, உயரம் இல்லடா. அப்படி உயரா இருந்தா, என்னைவிடவும் உயரா இருக்காங்கடா. எந்தப் பொண்ணுமே எனக்கு மேட்ச் ஆகலடா என்றான் தினேஷ்.

அப்படியெல்லாம் பார்த்தா கல்யாணமே பண்ணிக்க முடியாதுடா. பார்க்கற மாதிரி இருந்தா போதும்டா. ரொம்பவும் எக்ஸ்பெக்ட் பண்ணா ஏமாத்தம்தான் என்றான் ஒருவன்.

ஒரு தடவைதான் பொறக்கறோம். ஒரு தடவைதான் கல்யாணம் பண்றோம். கண்ணுக்கு அழகான பொண்ணா இல்லேன்னா, அந்தக் கல்யாணமே வேஸ்டுடா என்றான் தினேஷ்.

ஏன்டா தினேஷ். உங்க தாத்தா பாட்டிய பார்த்தியா. ரெண்டு பேருக்குமே மேட்ச் ஆகல. ஆனா, அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு எட்டு பிள்ளைகளைப் பெத்து சந்தோஷமா இல்லியா? என்றான் இன்னொருவன்.

நீ சொல்றது சரிதான்டா. எத்துப் பல்லுப் பாட்டிய தாத்தா எப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டார்னு தெரியல. அதே மாதிரி, கறுப்பா இருக்கற தாத்தாவ பாட்டி எப்படி கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சாங்கன்னுகூட தெரியலடா என்றான் தினேஷ்.

கீழே பேரனும் அவன் நண்பர்களும் பேசிக்கொண்டிருந்ததை தாத்தாவும் பாட்டியும் கேட்டுப் புன்னகைத்தனர்.

தினேஷ், பார்க்கும் பெண்களை எல்லாம் தயவு தாட்சண்யம் இன்றிப் புறக்கணித்தான். அவனது பெற்றோர், அலுத்துச் சலித்து இனிமேல் இவனுக்காகப் பெண் தேடிப் போகமாட்டோம் என்று கையைத் தூக்கிக் கும்பிடு போட்டுவிட்டார்கள்.

தினேஷிடம் வந்த தாத்தா, ஏன்டா தினேஷ். எத்தனையோ பேர் காதல் கீதல்னு அலையறாங்களே. அப்படியாவது எவளையாவது பிடிக்க வேண்டியதுதான என்றார்.

ஐயோ தாத்தா. இந்தக் காலத்துப் பொண்ணுங்கள நம்பவே முடியாது. இன்னிக்கு ஒருத்தனோட சுத்துற பொண்ணு, நாளைக்கு இன்னொருத்தன்கூட ஊரச் சுத்துவா. எனக்கு அதெல்லாம் பிடிக்காது. எனக்கு அழகான பொண்ணா இருக்கணும். ஒழுக்கமானவளா இருக்கணும். அவ்வளவுதான் என்றான் தினேஷ்.

சத்தியமா சொல்றேன். இந்த ஜென்மத்துல இவனுக்கு கல்யாணமே நடக்காது என்றார் தினேஷின் அப்பா பரமசிவம்.

பரமசிவத்தைப் பார்த்து தாத்தா கர்ஜித்தார்.

டேய் பரமசிவம். இதுவரைக்கும் நீ இவனுக்குப் பொண்ணு பாக்கப் போனது போதும். முதல் தடவையா நானும் என் பொண்டாட்டியும் பொண்ணு பாக்கப்போறோம். ஆனா, நாங்க பொண்ணு பாக்கப்போறது அதுதான் முதலும் கடைசியுமா இருக்கும். இது இல்லன்னா இன்னொன்னுன்னு போகமாட்டோம். என்ன சொல்ற. சவாலா? என்றார்.

பரமசிவம் தன் தந்தையை ஏளனமாகப் பார்த்துச் சிரித்தார். வயசாயிட்டா, மூளைகூட வேலை செய்யாது போலிருக்கு. எதுக்கு சவால் அது இதுன்னு சொல்லிக்கிட்டு. சரி உங்க ஆசைய கெடுக்க நான் விரும்பல. போயிட்டு வாங்க. ஆனா, அவமானப்பட்டுத்தான் வருவீங்க. அது என்னமோ நிஜம் என்றார்.

ஒருநாள், தினேஷ், தாத்தா, பாட்டி மூவரும் பெண் பார்க்கப் போனார்கள்.

பெண் குனிந்துகொண்டே வந்து நின்றாள்.

தினேஷ் பார்த்தான்.

ம்ஹும்… பிடிக்கவில்லை என்று முகத்தைச் சுளித்தான்.

இவளுக்கு என்னடா குறை என்று காதோடு கேட்ட தாத்தா, தினேஷ் சொன்னதை அப்படியே மனைவியின் காதில் ஓதினார்.

பொண்ணுக்கு ஜப்பான் மூக்காம்

அதுதான், அந்தப் பெண்ணிடம் தினேஷ் கண்ட குறை.

மாப்பிள்ளை என்ன சொல்றாரு என்றார் பெண்ணின் அப்பா.

அவன் எதையாவது சொல்லிட்டுப் போகட்டும். இதோ பாருங்க சார். அந்தக் காலத்துல நான் இவள கல்யாணம் பண்ணப்ப ஊரே கேலி பண்ணிச்சி. வாய்க்கு வெளியே பல்லு நீண்டுக்கிட்டிருக்கே, வேற பொண்ணே கெடைக்கலியான்னு சொன்னாங்க. ஆனா பாருங்க, அந்தக் காலத்துல அழகு நெறத்தை பார்க்கலை. குடும்பத்துக்கு ஏத்தவளான்னுதான் பாத்தாங்க. ஒரு நிறை இருந்தா ஒரு குறை இருக்கத்தான் செய்யும். நல்ல பொண்ணா இருக்கணும். எளிமையா இருக்கணும். பொறுமையாவும் இருக்கணும். திறமையோடு குடும்பத்த நடத்தணும்னு அன்னிக்கு எதிர்பார்த்தோம். அப்படித்தான் இவள கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இவ பல்லை மட்டும் பார்த்திருந்தா கல்யாணமே பண்ணியிருக்கமாட்டேன். இவள கல்யாணம் பண்ணிக்காம இருந்திருந்தா, எனக்கு இப்படி ஒரு நிம்மதியான வாழ்க்கை கெடைச்சிருக்கும்மான்னு தெரியல. அவளாலதான் எனக்கு வாழ்க்கை. என்னாலதான் அவளுக்கு வாழ்க்கை. நல்ல வாழ்க்கை வேணுன்னு எதிர்பார்த்தா, நடுவுல அழகாவது கலராவது. எல்லாம் ஒரு மயக்கம், அவ்ளோதான்.

எனக்காக எங்க அப்பா அம்மாதான் பொண்ணு தேடினாங்க. அவங்க மட்டும் பார்த்தா போதும்னுதான் நானும் இருந்தேன். அவங்க, பொண்ணோட நிறத்த பாக்கல. நீள அகலம் பாக்கல. எடைய பாக்கல. நடைய பாக்கல. வாழ்க்கைக்கு, ஆணுக்கு பொண்ணு தேவை, பொண்ணுக்கு ஆண் தேவை. ரெண்டு பேரும் நல்லவங்களா இருந்தா போதும், அவ்வளவுதான். சத்தியமா சொல்றேன் தம்பி. கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் நான் இவ முகத்தை பாக்கல. பெத்தவங்க பாத்த பொண்ணு நல்லவளாத்தான் இருப்பான்ற நம்பிக்கையிலதான் இவளுக்கு தாலிய கட்டினேன். அப்பறம்தான் இவ முகத்த பார்த்தேன். பல் நீட்டமா இருந்துச்சு. என்னை பொறுத்தவரைக்கும் இந்த எத்துப் பல்லுக்காரிதான் முத்துப்பல் அழகி! இவளுக்கு பல்லு நல்லா இல்லன்னு ஊர் சொல்லுது. ஆனா, இவளுக்கு உள்ளமும் சொல்லும் நல்லா இருக்குதுன்ற உண்மை எனக்குதான தெரியும்? இல்லன்னா, எட்டு புள்ளைங்கள பெத்திருக்க முடியுமா? என்று பெற்றோரை நினைத்துக் கைகூப்பினார்.

தாத்தா பேச முடியாமல தழுதழுத்தபோது பாட்டி குறுக்கிட்டாள்.

ஆமாங்க. நானும் இவர தாலி கட்டிக்கிற வரைக்கும் நிமிர்ந்துகூட பாக்கல. அப்பா அம்மா மேல இருந்த நம்பிக்கையில இவருக்கு கழுத்த நீட்டினேன். அப்பறம்தான் இவரோட நிறத்தை பார்த்தேன். ஊரே இவர கருவாயன்னு கூப்பிடும். கூப்பிடட்டுமே, அதுல என்ன குறைஞ்சி போச்சி. எனக்கு அவர்கிட்ட ஒரு குறையும் தெரியல. பெத்தவங்களுக்குத் தெரியும், புள்ளைங்களுக்கு எது வேணும், எது வேணாம்னு. ஒண்ணு மட்டும் சொல்றேன். மனுஷங்கள தோற்றத்தை வெச்சி எடை போடக்கூடாது. ஆனா இந்த விஷயம் இந்தக் காலத்துப் பசங்களுக்குத் தெரியல. உடம்பைத்தான் பாக்கறாங்களே தவிர, உள்ளத்தை யாரும் பாக்கறே இல்ல. அதனால, பின்னாடி கஷ்டப்படறாங்க. எல்லாம் காலக் கொடுமை என்று கலங்கிய பாட்டியை தாத்தா தேற்றினார்.

டிவி, சினிமா அது இதுன்னு பார்த்து பசங்க மனசை அலைபாய விடறாங்க. கனவு வேற, நனவு வேறங்கறது அவங்களுப் புரியறதில்ல. கனவு காணுங்கன்னு பெரியவங்க சொல்லிட்டுப் போனாங்க. ஆமா, நல்ல பொண்ணு பொண்டாட்டியா வரனும், நல்ல பையன் புருஷனா வரனும்னு ஆணும் பொண்ணும் கனவு காணனும். நல்ல வாழ்க்கை, சந்தோஷமான நிம்மதியான வாழ்க்கை வாழனுன்னு கனவு காணனும். சரிங்க நாங்க கெளம்பறோம் என்று சொல்லி தாத்தா எழ, பின்னாலேயே பாட்டியும் எழுந்தார்.

எழாமல் உட்கார்ந்திருந்த தினேஷ், ஒரு உறுதியுடன், எனக்கு உங்க பொண்ணு புடிச்சிருக்குங்க. அப்பா அம்மாகிட்ட பேசிட்டு நல்ல பதிலா சொல்றோம் என்று சொல்ல, தாத்தா பாட்டி முகத்தில் மகிழ்ச்சிப் பெருமிதம்.

ஆசனம்

மயூராசனம்

பெயர்க் காரணம்

மயில் போன்ற ஆசனம் என்பதால் இதற்கு மயூராசனம் என்று பெயர்.

செய்முறை

• மண்டியிட்டு நிற்கவும்.

• பிறகு இரண்டு உள்ளங்கைகளையும் இரண்டு முழங்கால்களுக்கு இடையில் முழங்கால்களை ஒட்டியபடி (விரல்கள் உள்பக்கமாக இருக்குமாறு) வைக்கவும்.

• பின்னர், தாடையை அல்லது தலையை விரிப்பின் மீது வைத்து, இரண்டு கால்களையும் நீட்டி, பின்னர் தலையைத் தூக்கி நிற்கவும். அப்போது, உடலானது மயிலின் தோற்றத்தில் இருக்கும்.

• அதே நிலையில் சில சுவாசங்கள் இழுத்து விடவும்.

• பின்னர், தாடையை அல்லது தலையை விரிப்பின் மீது மெதுவாக வைத்து, கால்களையும் ஊன்றி மெதுவாக நிமிர்ந்து, மண்டியிட்டு நின்று, பின்னர் வஜ்ராசனத்தில் வந்து ஓய்வு எடுக்கவும்.

• மீண்டும் சில முறை இதேபோல் செய்யலாம்.

பலன்கள்

உடலை உறுதிப்படுத்தும் ஆசனம்.

எலும்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

கைகளுக்கு உறுதி கிடைக்கும்.

ஜீரண உறுப்புகள் நன்றாகத் தூண்டப்படும்.

தலைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும்.

வீடியோ மாடல்: ஆனந்த் (ஆசனா ஆண்டியப்பன் யோகா மையப் பயிற்சியாளர்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.