முகப்பு
கருத்துக் களம்

ஆசிரியர்களிடம் மாற்றம் தேவை

ஓரு வகுப்பறையின் நான்கு சுவருக்குள்ளே தான் நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. இதைத் தான் ஒரு பள்ளி திறந்தால் நூறு காவல் நிலையங்கள் மூடப்படுகின்றன என்கின்றனர். ஆசிரியர்களின் திறமையை வெளிக்கொணரு

Updated On : 28 ஜூலை, 2025 at 4:25 AM
பகிர்:

ஓரு வகுப்பறையின் நான்கு சுவருக்குள்ளே தான் நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. இதைத் தான் ஒரு பள்ளி திறந்தால் நூறு காவல் நிலையங்கள் மூடப்படுகின்றன என்கின்றனர். ஆசிரியர்களின் திறமையை வெளிக்கொணரும் இடமாக வகுப்பறை விளங்கி வருகிறது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று நம் முன்னோர்கள் வரிசைப்படுத்தி இருப்பதன் மூலம் குருவானவர் எந்த அளவுக்கு உயர்ந்து நிற்கிறார் என்பது தெளிவாகும்.

வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப உலகில், மக்களின் முன்னேற்றம், பாதுகாப்பு, நல்வாழ்வு ஆகியவற்றை நிர்ணயிப்பது நல்லதொரு கல்வியாகும். இத்தகைய கல்வி தரமுள்ளதாகவும். நாட்டு வளர்ச்சிக்குத் துணையாகவும் அமைவதற்கு ஆசிரியரே முழுக் காரணமாகும். வருங்கால நல்ல குடிமக்களை உருவாக்கும் தலையாய பொறுப்பு ஒரு சிறந்த ஆசிரியரிடம் உள்ளது.

ஒரு மாணவர், ஆளுமைப் பண்புடையவராகவும், செய்யும் பணிக்குத் தன்னை அர்ப்பணிப்பவராகவும், தலைமைப் பண்புடையவராகவும் இருத்தல் வேண்டும். காலந்தவறாமை, சீரிய நடை,உடை,பாவனை, சொல்லில் தெளிவு, செயலில் பதற்றமின்மை, பேச்சில் கம்பீரம், உயரிய சிந்தனை போன்ற பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும்.

ஆசிரியர்கள், குழந்தைகளின் மூன்றாவது பெற்றோர் ஆவர். அப்பா, அம்மாவுக்கு அடுத்தபடியாக குழந்தைகள் ஆசிரியரிடம் தான் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். ஒரு குழந்தையின் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர் ஆசிரியர் ஆவார். இவ்வாறெல்லாம் சிறப்புகள் பெற்ற ஆசிரியர்களின் இன்றைய நிலை என்ன? நாள்தோறும் செய்தித்தாள்களில், மோசமான செயல்பாடுகள் உடைய சில ஆசிரியர்கள் பற்றி அறிந்து வருகிறோம். இத்தகையோர் ஆசிரியர் சமூகத்துக்கே அவப்பெயரை தேடித்தருகின்றனர்.

 ஆசிரியர்கள் சிலர், சக ஆசிரியைகளுடன் தவறான உறவு வைத்திருப்பதும், அதற்கு மறுப்பவர்களிடம் பணியில் குற்றங்குறைகளைக் கண்டுபிடித்து இணங்கவைப்பதும், பொதுமக்கள் அறியாத செய்திகள் அல்ல.

இதுபோன்ற செயல்கள் உண்மையில் நடக்கின்றனவா? என்பதைத் தீர ஆராய்ந்து பார்க்க வேண்டும். பெரும்பாலான குற்றங்கள் அனைத்தும் நடந்தவையா? அல்லது சித்திரிக்கப்பட்டவையா? என்று உண்மைகள் வெளிவருவதற்குள் சம்பந்தப்பட்ட ஆசிரியரை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அனைத்து நாளிதழ்களும் படத்துடன் வெளியிட்டு அசிங்கப்படுத்தும் நிகழ்ச்சிகள்தான் இன்றளவும் நடந்து கொண்டிருக்கின்றன.

இரண்டு, மூன்று நாள்கள் பரபரப்பாகப் பேசப்பட்டு ஓரிரு வாரங்களுக்குள் அப் பிரச்னை என்ன ஆனதென்று யாருக்கும் தெரியாமல் போய்விடுவது தான் இதுநாள் வரைக்கும் நடந்து வந்துள்ளது. இதுவரை இந்த மாதிரியான குற்றங்கள் நீதிமன்றங்களில் சரியான சாட்சிகள் இல்லாததால் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதும், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் வழக்கிலிருந்து விடுதலை ஆகி மீண்டும் அதே பள்ளியில் பணியாற்றுவதும், வழக்கு நடைபெற்ற காலங்களுக்கான சம்பளத்தை அதற்குரிய வட்டியுடன் வாங்குவதும்தான் நடந்து வருகிறது.

இதனால் வழக்கு தொடர்ந்த மாணவிகளின் வாழ்க்கையானது கேள்விக்குறியாக மாறிவிடுகிறது. மேலும் ஒரு சில பத்திரிகைகள் சம்பந்தப்பட்ட ஆசிரியர் இந்தப் பெண்ணை மட்டுமல்லாமல், இதுபோல் அங்கு படிக்கும் பல பெண்களையும் இதைப்போல செய்திருப்பதாகவும் பல்வேறு வதந்திகளைப் பரப்பிவிடுவதால் அப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் குறித்து தப்பான எண்ணங்கள் உண்டாகிவிடுகின்றன. இதனால் அவர்களைப்பற்றி  மற்றவர்களுக்கு பல்வேறு தவறான ஊகங்கள் ஏற்படுகின்றன.

இந்த மாதிரியான விவகாரங்களைத் தீரஆராய்ந்து விடைதேடுவோம் என்றால், அதன் துவக்கமே ஆசிரியர்களுக்குள் ஏற்படும் சண்டைகளே என்பது தெரியவரும். பழிதீர்க்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற வீண் வதந்திகளைப் பரப்பிவிடுகின்றனர்.

மேலும் படிப்பதற்காக திட்டுவதாலும், திருத்துவதற்காக பல்வேறு யுத்திகளைப் பயன்படுத்துவதாலும் தற்கொலை செய்துகொள்ளும் மாணவ, மாணவிகளின் செய்திகளை தணிக்கை செய்து பிரசுரிக்க வேண்டும்.

பெரும்பாலானோர் ஜாதி அமைப்புகளில் தங்களை இணைத்துக் கொண்டு சமூக சேவை ஆற்றுகிறேன் என்ற போர்வையில் சமூகப் பிணக்குகளை ஏற்படுத்துகின்றனர்.

குறிப்பாக தாங்கள் பதவியில் இருக்கும்போது இருந்த மதிப்பும் மரியாதையும் ஓய்வுபெற்ற பிறகும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தங்களை ஜாதி அமைப்புகளில் இணைத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள். கிராமங்களிலும் சரி, பெருநகரங்களிலும் சரி, ஜாதி தலைவராகி சேவை என்ற பெயரில் எதிர் ஜாதியினரின் சாவுக்குக் காரணமாகி வருகின்றனர்.

பகுத்தறிவுடன் சமூக நல்லிணக்கத்தைப் பேணவேண்டியவர்கள் மனிதர்களை ஜாதி என்ற குறுகிய கோட்டுக்குள் அழைத்துச் சென்று பலரது சாவுக்குக் காரணமாகின்றனர்.

எனவே தமிழக அரசு தங்களது புலனாய்வுத் துறை மூலம் ஜாதி அமைப்புகளில் தொடர்பு உடையவர்களைக் கண்டறிந்து தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

அதை மீறுபவர்களின் ஓய்வூதியத்தை நிறுத்த வேண்டும். தற்போது வேலை செய்பவர்கள் எனில் பணி நீக்கம் செய்ய வேண்டும்.

பொதுவாக படித்தவர்கள் மத்தியில் தான் இது போன்ற எண்ணம் தலைதூக்கி வருகிறது. இதற்கு மேற்கண்டவர்களை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் காரணம். கை நிறைய சம்பளமும், ஓய்வூதியமும் வாங்கும்போது அவர்களுக்கு நீதி, நேர்மை, கருணை தெரியாமல் போய்விடுகிறது. இது வேதனைக்குரியதாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →