கருத்துக் களம்

முடிவுக்கு வருமா மோதல் போக்கு?

வழக்குரைஞர்களும் காவல்துறையினரும் மோதிக்கொள்வது தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக தொடரும் அவலமாகிவிட்டது. இந்த இரு தரப்பினரின் உறவுநிலை இங்குள்ளதைப் போல் இவ்வளவு மோசமாக வேறு எந்த மாநிலத்திலும் இருக்காத

இளங்கோவன்

வழக்குரைஞர்களும் காவல்துறையினரும் மோதிக்கொள்வது தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக தொடரும் அவலமாகிவிட்டது. இந்த இரு தரப்பினரின் உறவுநிலை இங்குள்ளதைப் போல் இவ்வளவு மோசமாக வேறு எந்த மாநிலத்திலும் இருக்காது.

வழக்குரைஞர்கள்-காவலர் மோதலுக்கும் முரண்பாடுகளுக்கும் "இருவரில் யார் உயர்ந்தோர்' என்ற மனநிலையில் உண்டாகும் கெüரவப் பிரச்னை ஒரு முக்கிய காரணமாக வெளிப்படுகிறது.

முன்பெல்லாம், தாங்கள் கையாளும் வழக்கு குறித்து வழக்குரைஞர்கள் காவல்நிலையத்திற்கு நேரடியாகச் செல்லும் நிலை இருந்ததில்லை. அவசியம் ஏற்படின், காவல்துறைக்குத் தகவல்கள் தெரிவிக்கும் நோக்கில், அறிவிப்பு அனுப்புதல் என்ற அளவில் நிறுத்திக் கொள்வார்கள். மற்றபடி எதுவாக இருப்பினும் சட்டப்படி நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வது என்ற கொள்கையை கடைப்பிடித்து வந்தார்கள்.

குறிப்பாக, குற்றவியல் வழக்குகளில் இந்த நிலை இருந்தது. காலப்போக்கில், உரிமையியல் (சிவில்) தன்மை வாய்ந்த வழக்குகளுக்கெல்லாம் மக்கள் காவல்நிலையத்திற்குச் செல்லும் நிலை ஏற்பட்டுவிட்டது. அங்கு வைத்து எதிர்த்தரப்பினரை "எப்படியாவது' பணிய வைத்துவிடலாம் என கணக்குப் போடுகின்றனர்.

நீதிமன்றங்களில் ஏற்படும் காலதாமதம், மனஉளைச்சல் போன்ற காரணங்களால் வழக்காடுவோர் "கட்டப்பஞ்சாயத்து' அடிதடி என்று குறுக்கு வழிகளில் செல்கின்றனர் என்பதும் உண்மை.கட்சிக்காரர்கள் அழைப்பதால் (வழக்கு கைவிட்டுப் போய்விடக்கூடாது என்பதாலும்) வழக்குரைஞர்களும் அவர்களோடு காவல்நிலையத்திற்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது. குற்றவியல் வழக்குகளில் காவலர்களால் பிடித்துச் செல்லப்பட்ட கட்சிக்காரர்களைப் பார்க்கவும் சட்டவிரோதக் கைதை தட்டிக் கேட்கவும் வழக்குரைஞர்கள் காவல்நிலையத்திற்குப் போகின்றனர். பொதுவாக, இவர்கள் இளம் வழக்குரைஞர்களாவர். பாதிப்புக்குள்ளாவோரும் அவர்கள்தான். காவல்நிலையத்தில் பிரச்னை தீர்த்தால் எல்லாம் சரி. ஆனால், அதற்கு மாறாக அங்கு வழக்குரைஞருக்கும் காவல் அதிகாரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, வார்த்தைகள் முற்றி, இருதரப்பினரும் உணர்ச்சி வசப்பட்டு, ஒரு கட்டத்தில் வழக்குரைஞர் தாக்கப்படுகிறார். கட்சிக்காரரின் திருப்திக்காக காவல்நிலையம் சென்ற வழக்குரைஞர், அங்கு மானம், மரியாதை இழந்து அடியும் வாங்கிக்கொண்டு திரும்பும் பரிதாப நிலை ஏற்படுகிறது.

இப் பிரச்னைக்கு தீர்வு என்ன?

முதலில் இருதரப்பினரும் ஒன்றை மறந்திடலாகாது. வழக்குரைஞர்களும் சரி, காவல்துறையினரும் சரி- யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்; எவரும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக முன்வைக்கப்படும் சில ஆலோசனைகள்:

வழக்குரைஞர்களின் பணிகள் முதன்மையாக நீதிமன்றத்திற்குள் மட்டுமே இருக்க வேண்டும். எதையும் சட்டத்திற்கு உள்பட்டே அணுக வேண்டும்.காவல்நிலையத்திற்கு வழக்குரைஞர்கள் நேரடியாகச் செல்வது தவிர்க்கப்பட வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில், அப்படிச் செல்வதானால், இரண்டு அல்லது மூன்று சக வழக்குரைஞர்களோடு செல்ல வேண்டும் (அவர்களில் ஒருவர் மூத்த வழக்குரைஞராக இருத்தல் நல்லது). வழக்குரைஞர் சங்கத்திற்குத் தகவல் சொல்லிவிட்டுச் செல்ல வேண்டும்.

பிரச்னை எவ்வளவுதான் கடுமையானதாக இருப்பினும் இருதரப்பினரும் உணர்ச்சி வசப்படாமல் இயல்பாகப் பேச வேண்டும். ஏதோ தங்களது தனிப்பட்ட பிரச்னை போல் எடுத்துக்கொள்ளாமல், நிதானித்துப் பேச வேண்டும். எந்தச் சூழலிலும் பரஸ்பர மரியாதையை கைவிடக் கூடாது. இருதரப்பினரும் தங்களது கடமையையும் பொறுப்பையும் அவரவர் வரம்புகளையும் உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். கைது செய்தல் குறித்து உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள கொள்கைகளைக் காவல்துறையினர் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். இதனால், சட்டவிரோதக் கைது மற்றும் மனித உரிமைகள் மீறல் என்ற குற்றச்சாட்டுகள் அவர்களுக்கு எதிராக எழாது தடுக்கப்படலாம். சிவில் தன்மை வாய்ந்த புகார்களைக் காவல்துறையினர் கண்டிப்பாக ஏற்கக் கூடாது. சந்தேகம் ஏற்படின் உயரதிகாரிகளிடமோ அரசு வழக்குரைஞர்களிடமோ ஆலோசனைப் பெற்று செயல்பட வேண்டும்.

வழக்குரைஞர்-காவலர் உறவில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க, மாவட்ட நீதிபதி, காவல் கண்காணிப்பாளர் மற்றும் வழக்குரைஞர் சங்கத்தின் நிர்வாகிகள் அடங்கிய ஒரு நிரந்தரக்குழு ஒவ்வொரு மாவட்ட அளவில் அமைக்கப்பட்டு செயல்பட வேண்டும். கட்சிக்காரர்கள் தங்களது வழக்குகளைக் குறுக்குவழிகளில் சென்று தீர்த்துக் கொள்ள முயன்றால், அதற்கு வழக்குரைஞர்கள் துணை போகக்கூடாது. வழக்குகளைத் திறம்பட நீதிமன்றத்தில் நடத்தி, கட்சிக்காரர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும். இதனால் அவர்களுக்கும் குறுக்குவழிகளில் செல்லும் எண்ணம் ஏற்படாது. நீதித்துறை மற்றும் காவல்துறை இவற்றின் நோக்கங்கள் வெவ்வேறானவை அல்ல. எனவே, இவற்றோடு தொடர்புடைய எந்தப் பிரிவினரும் தங்களுக்குள் முரண்பட்டு மோதிக்கொள்வது சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இதற்கு விரைந்து ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இருதரப்பினரும் ஒருவரையொருவர் ஏதோ விரோதிகள் போல் பார்ப்பதைத் தவிர்த்து, தாங்கள் வகிக்கும் பாத்திரத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். புகழ்வாய்ந்த பல திறமையான வழக்குரைஞர்களை இந்த நாடு கண்டிருக்கிறது. இன்றும் பலர் அவ்வாறு உள்ளனர். அவர்களை இளம் வழக்குரைஞர்கள் முன்மாதிரியாகக் கொண்டு நடக்க வேண்டும். இழந்துகொண்டிருக்கும் இந்தத் தொழிலுக்கான மரியாதையை அவர்கள்தான் மீட்டெடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT