முகப்பு
கருத்துக் களம்

கிரகங்களின் மாநாடு

புளுட்டோவில் அவசர வட்டமேஜை மாநாடு சூரியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சூரியன் தாமதமாக வந்தது. நெப்டியூன் முதலில் எழுந்து தாமதமாக வருவோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோபமாக பேசியது. அதற்கு உ

Updated On : 28 ஜூலை, 2025 at 4:25 AM
பகிர்:

புளுட்டோவில் அவசர வட்டமேஜை மாநாடு சூரியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சூரியன் தாமதமாக வந்தது. நெப்டியூன் முதலில் எழுந்து தாமதமாக வருவோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோபமாக பேசியது. அதற்கு உடனே புதன் எழுந்து, "உனக்கென்ன நீ பக்கத்துல இருக்கே சீக்கிரம் வந்துடலாம். நாங்க தூரத்திலிருந்து வரவேண்டாமா?' என்றது. "சண்டையை விடுங்கள். சமாதானமாகப் பேசி அடுத்து என்ன நடக்கணுமோ அந்த விஷயத்துக்கு வாங்க' என்றது பூமி. எல்லாரும் சிரித்தனர். சனி கிரகம் சொன்னது: "பூமிக்கு எல்லாரையும் சமாதானமா இருக்கச் சொல்றதுக்கு யோக்கியதை இருக்கா?' என்றது.

"உன் பூமியினாலதான் இப்ப எல்லாத்துக்கும் பிரச்னையே. எப்ப பார்த்தாலும் சண்டை, குண்டு வெடிப்பு, காடு அழிப்பு, அணுகுண்டு சோதனை, சுனாமி, பூகம்பம், எரிமலை இப்படி எப்பவும் ஒரே பிரச்னை. நீ என்னடான்னா மத்தவங்கள சமாதானமா இருக்கச் சொல்ற' என்றது சனி. பூமிக்கு வந்ததே கோபம். "இதுக்கு எல்லாம் இந்த சனியன் தான் காரணம். நீ எங்களை பிடிக்காம இருந்தா இப்படி நடக்காது'.

யுரேனஸ் கேவலமாக ஒரு பார்வை பார்த்து சிரித்து, "இன்னும் நீங்க இந்த மூடநம்பிக்கையை விடலயா' என்றது.

Advertisement

இப்போது பேசத் துவங்கியது பூமி. "நான் எல்லாத்துக்கும் எல்லாரையும் நம்ப வேண்டியிருக்கு. இந்த சூரியன் சில நேரம் நல்லபடியா இருக்கு. சில நேரம் ரொம்ப கோபமா ஒரே சூடா இருக்கும்போது எங்க பூமியில எத்தனையோ பிரச்னை'.

"அதுக்கெல்லாம் உங்க மக்கள்தான் காரணம்' என்றது சூரியன். "எப்படி'? எனக் கேட்டது பூமி. உடனே சூரியன், "வேண்டாத காரியம் செய்து எனக்கு பாதுகாப்பா இருக்கற என்னோட ஓசோன் சட்டையை ஓட்டை பண்ணீட்டீங்க. அப்புறம் எனக்கு கோபம் வராதா? காற்று, நீர், நிலம் இப்படி எல்லாத்தையும் மாசுபடுத்தியாச்சு. பிளாஸ்டிக்னு ஏதோ பொருளை கண்டுபிடிச்சு அதை அழிக்க முடியாம போட்டு பூமி முழுதும் ஒரே பிரச்னை'. இப்படி பூமியில் நடக்கும் அநியாயங்களை சூரியன் அடுக்கிக்கிட்டே போனது. "உங்க ரெண்டு பேர் பிரச்னை பெரும் பிரச்னையா இருக்கு, கொஞ்சம் பொறுங்க, பேசித் தீர்த்துக்கொள்ளலாம்' என்றது சந்திரன் (எ) நிலா.

இடைவேளைக்குப் பிறகு அனைவரும் கூடி முக்கிய தீர்மானங்கள் இயற்றப்பட்டன. எல்லாமே பூமியைப் பற்றியே இருந்தது. ஒன்றுகூட வேறு கிரகத்தைப் பற்றி இல்லை. எல்லாருடைய கடும் கண்டனங்களும் பேச்சுகளும் பூமியைப் பற்றியே இருந்தது.

இனி பூமி தன்னை சரிப்படுத்திக் கொள்ளவில்லை என்றால் வேறு எந்த கிரகத்தின் உதவியும் கிடைக்காது. குறிப்பாக, சூரியன் தன் வேலையைக் காண்பிக்கும். எனவே இனியாவது பூமி திருத்திக் கொண்டு செயல்பட வேண்டும். சூரியனின் கோபப்பார்வை பிறர் மேலும் படாமலிருக்க பூமிதான் வழிசெய்ய வேண்டும். அனைத்து கிரகங்களும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்தன.

பூமி செய்ய வேண்டிய வேலைகளை மற்ற கிரகங்கள் பட்டியலிட்டன. முதலில் பிளாஸ்டிக் ஒழிக்கப்பட வேண்டும். மனிதர்கள் தங்களுக்குள் பலவித வேறுபாடுகளால் பலவிதங்களில் சண்டையிட்டுக் கொள்கின்றனர். அதை முதலில் நிறுத்த வேண்டும். பூமியின் வெப்பத்தைக் குறைக்க காடுகள் அழிவதைத் தடுக்க வேண்டும். மனிதருள் உள்ள வேறுபாடுகளைப் போக்க மனிதரில் யார் வேண்டுமானாலும் பூமியில் எங்கு வேண்டுமானாலும் போய் வந்து கொள்ளலாம். நினைத்த இடத்தில் தங்கலாம். நாடுகளுக்கு இடையிலான எல்லைகள் இல்லாமல் ஓருலக ஆட்சியாக அமைய வேண்டும்.

அனைத்து நாடுகளும் ஐ.நா. சபையின் ஆளுகையின் கீழ் வரவேண்டும். ஐ.நா. சபை உறுப்பு நாடுகள் அனைத்திற்கும் ஒரேமாதிரியான அதிகாரங்கள் இருக்க வேண்டும். போர் என்பது சட்டவிரோதம் என அறிவித்து, பூமியெங்கும் ஆயுதங்களே இருக்கக்கூடாது. பூமியின் பண்பாடு, பாரம்பரியம் காக்க ஆண், பெண் ஆகிய பாலினங்களைச் சரிசமமாகக் கருத வேண்டும். உணவு, நீர் மற்றும் பிற அடிப்படை தேவைகளான உடை, இருப்பிடம், கல்வி, தொழில், வாழ்க்கைத்துணை ஆகியவை அனைவருக்கும் சரிசமமாகக் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். ஆனால், ஆப்பிரிக்க நாடுகளில் தினமும் 200 குழந்தைகளாவது பட்டினியால் இறப்பதாக யுனிசெப் தெரிவிக்கிறது. குழந்தைகள் வளர்ப்பு என்ற பேரிலே குழந்தைகளை மிக இளம் வயதிலேயே சிறைச்சாலை மாதிரியான பள்ளிக்கூடங்களின் விடுதிகளில் விட்டுவிடக்கூடாது. மிக மிக முக்கியமாக பூமியில் லஞ்சம், ஊழல் இல்லாமல் இருக்க வேண்டும்...

இப்படி பூமியில் நடக்கும் அனைத்து அக்கிரமங்களையும் மற்ற கிரகங்கள் பட்டியலிட்டுக் கொண்டும் செய்ய வேண்டியவற்றை பட்டியலிட்டுக் கொண்டே இருக்க, "போதும், போதும். இதையெல்லாம் செய்ய சில காலம் அவகாசம் கொடுங்கள்' என்ற வேண்டுகோளுடன் பூமி அந்தக் கூட்டத்திலிருந்து வேகமாக வெளியேறியது.

பூமிக்கு தலைகுனிவு ஏற்பட்டு சோகமாக வெளியேறியதால் இனி அதனுடைய கோபத்துக்கு இந்த பூமியில் யார் யாரெல்லாம், எப்படியெல்லாம் இலக்காகப் போகிறார்களோ தெரியாது. எதற்கும் அனைவரும் தயாராக இருங்கள். என்ன வேண்டுமானால் நடக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments