பருவம் கடந்தும் "காய்க்கும்' மரங்கள்!
"பருவத்தே பயிர் செய்' என்பது பழமொழி; இது பயிர்களுக்கு மட்டுமல்ல
"பருவத்தே பயிர் செய்' என்பது பழமொழி; இது பயிர்களுக்கு மட்டுமல்ல நம் வாழ்க்கைக்கும் பொருந்தும். கற்பதற்குரிய பருவம், உழைப்பதற்குரிய பருவம், ஓய்வுக்குரிய பருவம் என்று பல பருவங்களை இயற்கை நமக்கு வகுத்துக் கொடுத்திருக்கிறது.
ஒரு குழந்தை கற்கத் தொடங்குவதற்குரிய பருவம் ஐந்து வயது. அப்பொழுதுதான் கற்பதற்குரிய மனப் பக்குவத்தையும் உடல் தகுதியையும் பெறுகிறது. ஆனால் இரண்டு வயதிலேயே குழந்தைகளை "பிளே ஸ்கூல்' போன்றவற்றில் சேர்த்து கற்பிக்கத் தொடங்கிவிடுகிறோம். அதனால் அந்தக் குழந்தை தன்னுடைய வாழ்க்கையை மன அழுத்தத்துடனேயே தொடங்குகிறது. மன அழுத்தத்துடன் உடல் நலமும் கெடுகிறது.
அம்மா, அப்பா, தாத்தா, பாட்டிகளின் கொஞ்சலிலும் அரவணைப்பிலும் வீட்டில் உண்டு மகிழ்ந்து உறங்கி உறவாட வேண்டிய குழந்தை குறிப்பிட்ட நேரத்துக்குத் துயிலெழுந்து, பிடிக்காவிட்டாலும் சாப்பிட்டு, பொருந்தாவிட்டாலும் சீருடைகளை அணிந்து வேன் டிரைவர், ஆயா, டீச்சர் ஆகியோரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து தன்னுடைய குழந்தைப் பருவத்தையும் அதனுடனான மகிழ்ச்சியையும் ஒருசேரத் தொலைக்கிறது.
குழந்தைகளுக்கு "வாழ்க்கையின் தொடக்கம்' அப்படி என்றால் வயது முதிர்ந்தவர்களுக்கு "வாழ்க்கையின் முடிவு' அதைவிட சுமையாகவும் கசப்பாகவும் மாறி வருகிறது.
நல்ல ஊதியம் பெற்று பணியிலிருந்து ஓய்வும் பெற்று, கணிசமாக ஓய்வூதியமும் பெறும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், அரசுத்துறை நிறுவன ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் போன்றோர் ஓய்வுக்குப் பிறகும் ஏதாவது ஒரு தனியார் துறையில் வேலைக்குச் செல்கின்றனர்.
பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் பணியாற்றிய ஆசிரியர்கள், பேராசிரியர்கள், டாக்டர்கள், பொறியாளர்கள், தணிக்கையாளர்கள் கூட இவ்விதம் பணியாற்றுகின்றனர். இவர்களில் ஒரு சிலர் குடும்பத் தேவைக்காக உண்மையாகவே பணியாற்ற வேண்டிய நிலையில் இருப்பதையும் மறுக்க முடியாது. இன்று பல தனியார் கல்லூரிகளில் முதல்வராகவும் துறைத் தலைவர்களாகவும் விரிவுரையாளர்களாகவும் பணியாற்றுகிறவர்களில் பலர் ஏற்கெனவே பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள்தான். மன நிம்மதிக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் வேலைக்குப் போவதாகக் காரணம் கூறுகின்றனர். காரணம் எதுவாக இருந்தாலும் இப்படி ஓய்வுக்குப் பிறகும் வேலைக்குச் செல்கிறவர்களுக்கு மிஞ்சுவது மன அழுத்தமும் உடல் நலிவும்தான் என்றால் மிகையில்லை.
இப்படி ஓய்வுக்குப் பிறகும் பணியாற்றினாலும் அவர்களுடைய கல்வி, அனுபவம், திறமைக்குப் பொருத்தமாக பல நிறுவனங்கள் ஊதியம் அளிப்பதில்லை. "நீங்கள்தான் கணிசமாக ஓய்வூதியம் பெறுகிறீர்களே, அத்துடன் குடும்பத்தைப் பொருத்தவரை உங்களுடைய பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியடைந்துவிட்டனவே, இனி கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயும் உங்களுக்கு போனஸ்தானே?' என்று கேட்டு குறைத்துவிடுகின்றனர். தங்களுடைய மதிப்பு மரியாதையை இழப்பதுடன் படித்துவிட்டு புதிதாக வேலைதேடும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் இவர்கள் உலை வைத்துவிடுகின்றனர். அந்த இளைஞர்கள் வேலைக்காக மேலும் சில ஆண்டுகள் அலைந்து திரிய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகின்றனர். அத்துடன் இந்த வேலைக்கு "ரிடையர்' ஆனவர்கள் பாதி சம்பளத்துக்கு வரத் தயாராக இருக்கின்றனர் என்று காரணம் கூறி, இளைஞர்களுக்கும் ஊதியத்தைக் குறைத்துவிடுகின்றனர்.
இதன் விளைவாகவே இப்போதெல்லாம், "ஓய்வுக்குப் பிறகும் கை நிறையச் சம்பாதிக்கலாம்' என்ற விளம்பரங்கள் அதிகம் வருகின்றன. கல்விச் சான்றிதழ், பணிச் சான்றிதழ்களோடு வரச்சொல்லி, நட்சத்திர ஹோட்டல்களில் நேர்-காணல்களை நடத்தி, இலவசமாக சாப்பாடும் போட்டு தங்களுக்கு ஏற்றவர்களைத் தூண்டிலில் மாட்டி இழுத்துவிடுகின்றனர்.
அதிக சோம்பல் எப்படி உடம்பைப் பாழாக்குமோ அப்படியே அதிக உழைப்பும். உழைக்க வேண்டிய வயதில் ஓய்ந்திருப்பதும் ஓய்ந்திருக்க வேண்டிய வயதில் உழைப்பதும் உடல் நலத்துக்குக் கேடு. மன நிம்மதி என்பது எப்போதும் பணத்தால் வருவதில்லை. எவ்வளவு சம்பாதித்தாலும் தேவைகள் அதிகமாகிக் கொண்டே போய் அதிருப்தியையே ஏற்படுத்தும். கிடைத்ததைக் கொண்டு திருப்தியோடு வாழப்பழகிவிட்டால் முதுமை "இனிமையாக' இல்லாவிட்டாலும் "அமைதியாக'க் கழியும்.