கருத்துக் களம்

அன்னை வளர்ப்பினிலே...

கடந்த ஒரு மாதத்துக்கு முன் சென்னையின் ஒரு மெட்ரிக் பள்ளியில் ஒரு மாணவனைப் படிக்கச் செய்யக் கண்டித்த பாவத்துக்காக ஒரு ஆசிரியை வகுப்பறையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது ஒரு சமூக அவலம் - பரிதாபத

இளங்கோவன்

கடந்த ஒரு மாதத்துக்கு முன் சென்னையின் ஒரு மெட்ரிக் பள்ளியில் ஒரு மாணவனைப் படிக்கச் செய்யக் கண்டித்த பாவத்துக்காக ஒரு ஆசிரியை வகுப்பறையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது ஒரு சமூக அவலம் - பரிதாபத்துக்குரிய கேவலமான நிலை என்பதுதான் உண்மை.

இவ்விஷயத்தை மிக முக்கியமான சமூகப் பொறுப்புணர்ச்சியோடு ஒவ்வொரு பெற்றோரும் சிந்திக்க வேண்டும்.

எந்தச் சூழலிலும் ஒன்றை முனைந்து கற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது மனதுக்குள் எதிர்ப்பு தோன்றுவது இயல்பு. மாணவர்களைக் தேடி அவர்கள் மாடு மேய்க்கும் இடங்களுக்கு ஆசிரியர்கள் சென்ற காலத்திலும், இரவு முழுவதும் பள்ளி கதவை திறப்பதை எதிர்பார்த்து விண்ணப்பம் வாங்கிவிட மெட்ரிகுலேசன் பள்ளி வரிசையில் தவமிருக்கும் தற்காலம் வரை, பிள்ளைகளுக்கு பள்ளிக்குச் செல்வது பிடிக்காத ஒன்றாகத்தான் இருந்து வருகிறது.

ஒட்டு மொத்த சமூகமும் தனக்கான சவால் என்று ஏற்று தவறை எதிர்கொண்டு தீர்வுகாண வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை ஏற்க வேண்டும்.

ஒவ்வொருவரும் தங்களின் பக்கத்திற்காக அதனை நியாயப்படுத்த ஏகப்பட்ட வழிமுறைகள் இருந்தபோதிலும் பெற்றோருக்கான பொறுப்பு அலாதியானது. ஒரு குழந்தையின் உருவாக்கத்தின்போதே அந்தக் குடும்பத்தின் மரபணுச் சேர்க்கை வழியாக குழந்தையின் அடித்தளம் அமைக்கப்படுகிறது. வயிற்றில் வளரும் குழந்தைக்குத் தாயின் நடவடிக்கைகள், உணர்வுகள் ஆகியவற்றை உள்வாங்கும் சக்தி இருக்கிறது என்பது நிரூபணமாகியுள்ளது. அனைவரும் அறிந்த சத்ரபதி சிவாஜியின் வீரம், அவர் தன் தாயின் வயிற்றுக்குள் இருந்தபோதே ஊட்டப்பட்டது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவார்?

தாய் கருவுற்ற போதே அக்குணநலன்கள் உருவாக்கப்படுகின்றன என்ற செய்தியை நாம் அறிந்திருக்கிறோம். அது இன்று பல்வேறு அறிவியல் சோதனைகளுக்குப்பின் நிரூபணமாகியுள்ளது.

அதன் பிறகு குழந்தை பிறந்து, தாய்ப்பால் குடித்து வளர்ந்து மூன்று வயதில் பள்ளிக்கு அனுப்பப்படுகிறது. அந்தக் குழந்தைக்கு ஏற்படக்கூடிய இயல்பான துன்பம் பற்றியோ, அவர்களின் தேவை பற்றியோ எந்தவிதத் திட்டமிடலும் இல்லாத பள்ளிச் சூழலில் அவர்கள் திணிக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் இதுபோன்ற சமயத்தில் குழந்தைகளைக் கையாளும் ஆசிரியர்கள் இதற்காகப் பயிற்சியெடுத்து அனுபவம் வாய்ந்தவர்களாக இருப்பதில்லை.

தன் பிள்ளைகளின் விருப்பமென்ன ஆர்வமென்ன அவர்களுடைய சக்தியென்ன என்பதை எந்தப் பெற்றோரும் அறிந்து அதற்கேற்ப அந்தக் குழந்தையை உருவாக்க வேண்டும் என்று திட்டமிடுவதில்லை. அனைவருடைய நோக்கமும் முதல் மதிப்பெண் அல்லது அந்தக் குழந்தையோடு ஒப்பிட்டு இந்தக் குழந்தை எதற்குமே ஆகாதென்பது மாதிரிதான் வளர்க்கப்படுகிறார்கள். மதிப்பெண் என்கிற ஒரே மந்திரத்தைத் தவிர அவர்கள் ஆசிரியர்களிடமிருந்து எந்தவிதமான உயர்வான பயிற்சிகளையும், குழந்தையின் உருவாக்கத்தையும் பெற்றோர் எதிர்பார்க்கவில்லை.

வீட்டுச் சூழலையும், பள்ளிச் சூழலையும் அந்தக் குழந்தை எவ்வாறு எதிர்கொள்கிறது எவ்வாறு உணர்கிறது என்கிற பிரக்ஞையே இல்லாமல் குழந்தைகள் அடங்கும் நிலைக்கு உள்ளாகிறார்கள் என்பதுதான் பொதுவான உண்மையாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் ஐம்பதுக்கும் குறையாத குழந்தைகளை முழுமையான மனிதனாக்கும் பொறுப்பு ஆசிரியரிடம் தான் உள்ளது என்று பெற்றோர் நம்புவதும், தம் பொறுப்பை வசதியாக மறந்து விடுவதும் நம்மால் ஏற்கக் கூடியதாக இல்லை.

விதை நெல் தன்னை அழித்துக்கொண்டு தன்னுடைய சந்ததியை விருத்தி செய்கிறது. அதுதான் இயற்கை. தன் பிள்ளையை உருவாக்க வேண்டியது தாயின் பொறுப்பு, தந்தையின் பொறுப்பு. அந்தப் பொறுப்பை ஆசிரியர் தலையிலோ, அல்லது பள்ளியின் பொறுப்பிலோ உறவினர் பொறுப்பிலோ, விடுதியின் பொறுப்பிலோ ஒப்படைத்து விட்டு விசனப்படுவது விவேகமுள்ள செயல் ஆகுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT