முகப்பு
கருத்துக் களம்

மனு கொடுத்த 7-வது நாள் ரேஷன் கார்டு!

கோவை பெறும் உரிமைச்சட்டப்படி ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்த மனுதாரருக்கு ரேஷன் கார்டு கொடுக்க 7 நாள்கள் மட்டுமே அவகாசம்; தாமதப்படுத்தினால் சம்பந்தப்பட்ட அரசு அலுவலருக்கு ரூ. 500 முதல் ரூ.5,000 வரை அபராதம், மற்றும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் உண்டு.

Updated On : 28 ஜூலை, 2025 at 4:26 AM
பகிர்:

கோவை பெறும் உரிமைச்சட்டப்படி ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்த மனுதாரருக்கு ரேஷன் கார்டு கொடுக்க 7 நாள்கள் மட்டுமே அவகாசம்; தாமதப்படுத்தினால் சம்பந்தப்பட்ட அரசு அலுவலருக்கு ரூ. 500 முதல் ரூ.5,000 வரை அபராதம், மற்றும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் உண்டு. அதே சமயம் மனுதாரருக்கு நஷ்ட ஈடும் வழங்கப்படுகிறது''.

அடடே அப்படியா, இது எங்கே, எப்படி, ஏன் நடைபெறுகிறது என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? மத்தியப்பிரதேசம், பிகார், பஞ்சாப், கர்நாடகம் உள்பட 12 மாநிலங்களில் இது அமலில் இருக்கிறது. கேரளம், ஒரிசா ஆகிய மாநிலங்களும் மத்திய அரசும் இச் சட்டத்தைக் கொண்டுவரவுள்ளன.

பிறப்பு - இறப்புச் சான்றிதழ், நிலப்பட்டா, முதியோர் ஓய்வூதியம், மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு - இவை போன்ற 150-க்கும் மேற்பட்ட அரசு சேவைகள் குறிப்பிட்ட நாள்களுக்குள் இச் சட்டத்தின் மூலம் மக்களுக்குக் கிடைக்கின்றன.

சேவைபெறும் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள சேவைகளைக் கோரி, சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களில் மனுவை உரிய ஆவணங்களுடன் அளிக்கவேண்டும். மனு கொடுத்ததற்கான அத்தாட்சியை அந்த அலுவலகத்தில் உடனேயே பெற்றுக்கொள்ள வேண்டும் அல்லது பதிவுத் தபாலில் அனுப்பி சான்று வைத்திருக்க வேண்டும்.

சேவை பெறும் சட்டப்படி எத்தனை நாள்களில் சேவை கிடைக்க வேண்டுமோ அதுவரை காத்திருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நாள்கள் முடிந்த பின்னர் சேவை கிடைக்காததைக் குறிப்பிட்டு புகார் மனு தயார் செய்து உரிய அலுவலரிடம் அளிக்க வேண்டும். அவர் உரிய விசாரணை நடத்துவார். மனு மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்த அலுவலருக்கு அபராதம் விதிப்பார். அபராதத் தொகை ஊழியரின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்பட்டு மனுதாரருக்கு வழங்கப்படும். மனுதாரர் கோரிய சேவையும் வழங்கப்படும்.

பிகார் மாநிலத்தில் இச் சட்டத்தின் மூலம் ஒரே ஆண்டில் 2 கோடி மனுதாரர்கள் சேவையைப் பெற்றுள்ளனர். சேவை பெறும் உரிமைச்சட்டம் மக்களின் சுயமரியாதையைக் காக்கும் கவசம் என்பதே உண்மை.

பொது சேவைக்கான உலகளாவிய பரிசை, ஐக்கிய நாடுகள் சபை, இந்தச் சட்டத்தை இந்தியாவில் முதன்முதலாகக் கொண்டுவந்த மத்தியப் பிரதேச மாநில அரசுக்கு வழங்கியுள்ளது.

"டிரான்ஸ்பிரன்ஸி இன்டர்-நேஷனல்' என்ற அமைப்பு, மத்தியப்பிரதேசம் மற்றும் பிகார் மாநில அரசுகளை இதற்காகப் பாராட்டியுள்ளது.

சேவைபெறும் உரிமைச் சட்டம் தமிழகத்துக்கும் தேவை. இதனால் தமிழக மக்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

இதனால் 24 மணி நேரத்தில் கிடைக்கும் சேவைகள்: புயல், வெள்ளம், இடி - மின்னல், தீ விபத்து போன்ற இடர்ப்பாடுகளுக்கு உதவித் தொகை, இயற்கை இடர்ப்பாடுகளால் கால்நடைகள் இறந்தால் உதவித்தொகை ஆகியன.

2 நாள்களில் கிடைக்கக்கூடிய

சேவைகள்: ஆதி திராவிடர் சான்றிதழ், ஓய்வூதியம் பெற - உயிருடன் வாழ்வது பற்றிய சான்றிதழ்.

7 நாள்களில் கிடைக்கும் சேவைகள்: பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர், பழங்குடியினர் ஆகியோருக்கான சாதிச் சான்றிதழ்கள், பிறப்பிடச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஆதரவற்றோர் என்பதற்கான சான்றிதழ்கள்.

15 நாள்களில் கிடைக்கும் சேவைகள்: வருமானம், வாரிசு, பிறப்பு, இறப்பு, விதவை, கலப்புத் திருமணம், ஆதரவற்ற பெண்கள், தொலைந்துபோன பள்ளிக்கூடச் சான்றிதழ், இறந்த அரசு ஊழியர் வாரிசுகளுக்குக் கருணை அடிப்படையில் வேலை,, பட்டா தனி மாறுதல், சால்வன்ஸி சான்றிதழ், குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்ற சான்றிதழ், கடன் பெற சொத்துரிமைச் சான்றிதழ்.

ஒரு மாதத்தில் கிடைக்கும் சேவைகள்: முதியோர் உதவித் தொகை, உடல் ஊனமுற்றோர் ஓய்வூதியம், விதவையர் ஓய்வூதியம், விவசாயத் தொழிலாளர் ஓய்வூதியம், கணவனால் கைவிடப்பட்டவருக்கு ஓய்வூதியம், நலிந்தோர் குடும்ப துயர் துடைப்பு, விபத்து நிவாரணத் தொகை, கட்டடத் தொழிலாளருக்கு விபத்து உதவித்தொகை.

3 மாதங்களில் கிடைக்கும் சேவைகள்: சாலை விபத்து நிவாரணத்தொகை, சாலை விபத்தில் உறுப்புகள் செயலிழப்பு, காயத்துக்கான உதவித் தொகை.

6 மாதங்களில் கிடைக்கும் சேவைகள்: சாலையில் மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு மறையும் வாகனத்தால் ஏற்படும் உயிரிழப்பு, படுகாயம் அடைதல் ஆகியவற்றுக்கு நிதி உதவி.

இவையெல்லாம் வருவாய்த்துறையின் சேவைகளில் சில. இன்னும் உள்ளாட்சித்துறை, மின்சார வாரியம் என்றெல்லாம் இருக்கின்றன.

அரசு நிர்வாகத்தில் தமிழகம் ஏற்கெனவே முன்னோடி மாநிலமாக இருக்கிறது. சேவைபெறும் உரிமைச் சட்டமும் அமலானால் அரசு அலுவலகங்களைச் சுற்றிவரும் இடைத் தரகர் கூட்டம் மறையும். லஞ்ச லாவண்யங்கள் குறையும். மனு கொடுத்துவிட்டு அதன் மீது நடவடிக்கை என்ன என்று அன்றாடம் காத்துக்கிடப்பதால் ஏழை - எளியவர்களுக்கு ஏற்படும் கூலி இழப்பு அறவே ஒழியும்.

அரசு அலுவலர்களும் நேர்மையாக, ஒழுக்கமாக, நெஞ்சு நிமிர்த்தி சேவை செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.