முகப்பு
கருத்துக் களம்

நதிகளுக்குத் தேவை காப்பகம்!

உலகில் தலையாய பிரச்னைகள் இரண்டு. ஒன்று நீரிழிவு. மற்றொன்று நீரழிவு. சிறுநீரில் சர்க்கரை அதிகமாக இருந்தால் அது நீரிழிவு; குடிநீரில் உப்பு அதிகமாக இருந்தால் அது நீரழிவு.

Updated On : 28 ஜூலை, 2025 at 4:26 AM
பகிர்:

உலகில் தலையாய பிரச்னைகள் இரண்டு. ஒன்று நீரிழிவு. மற்றொன்று நீரழிவு. சிறுநீரில் சர்க்கரை அதிகமாக இருந்தால் அது நீரிழிவு; குடிநீரில் உப்பு அதிகமாக இருந்தால் அது நீரழிவு. நன்னீரின் மூலம் நீரூற்று. நீரிழிவான "டயாப்டீஸ்' என்னும் கிரேக்கச் சொல்லிற்கான பொருளும் நீரூற்று. இவ்விரு பிரச்னைகளிலிருந்து மனித குலம் தப்பிக்க வேண்டுமெனில் ஒரு வழிதான் உண்டு. அதிகாலையில் நீண்ட தூரம் நடந்தாக வேண்டும்; கைகளை வீசிக்கொண்டும், குடங்களைச் சுமந்துகொண்டும். இரண்டிற்குமுள்ள ஒற்றுமையைப் பாருங்கள். இன்றைய மனிதர்களாகிய நாம் உணவு, உடை, இருப்பிடத்தைவிட மருந்து, மாத்திரை, தண்ணீரையே அதிகம் நம்பி இருக்கிறோம். மருந்து, மாத்திரைகளை எல்லா நாடுகளும் தயாரித்துக்கொள்ளும். ஆனால் தண்ணீர்?

உலக மக்கள்தொகை "ஜியோமெட்ரிக்' முறையில் அதிகரித்து வருகிறது என்கிறார் மக்கள்தொகைக் கல்வியின் தந்தை மால்தஸ். மக்கள்தொகைப் பெருக்கத்திற்கு "மக்கள்தொகை வெடிப்பு' எனப் பெயர் சூட்டியவர் அவர்தான். அவரைத் தொடர்ந்து வந்த மற்றொரு ஆய்வாளர் ஜான் கிராண்ட், "எதிர்காலத்தில் ஆட்சிகளை நிர்ணயிக்கும் சக்தியாக தண்ணீர் செயல்படும். உலகப்போர்கள் தண்ணீருக்காக நடந்தேறும்' என்றிருக்கிறார். இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு பயன்படுவதற்குக் காரணமாக இருந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், "இன்னொரு உலகப்போர் வந்தால் அது தண்ணீருக்காகத்தான்' இருக்கும் என யூகம் தெரிவித்திருக்கிறார்.

நீரை முன்னிட்டு இருவேறு பிரச்னைகள் உலகில் நிகழ்கின்றன. ஒன்று நீர் சீர்கேட்டால் பரவும் நோய்கள். மற்றொன்று நீர் தட்டுப்பாட்டால் ஏற்படும் நோய்கள். முதல்வகை பிரச்னைக்கு மருந்து உண்டு. இரண்டாம் வகை பிரச்னைக்கு ஒரே தீர்வு நீர்தான்.

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிகம் தண்ணீர் குடிப்பவர்கள் இந்தியர்கள்தான்.

சமீப காலமாக இந்தியா ஒரு பிரச்னையைச் சந்தித்துக்கொண்டு வருகிறது. அது இந்தியா மீதான நீர் படையெடுப்பு. நிலத்தடி நீரை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வந்துகொண்டிருக்கின்றன.

உலக நாடுகள், நீர்த் தேவையை இந்திய நதிகள் மூலம் நிவர்த்தி செய்துகொள்ளலாம் என நம்பிக்கை கொண்டுள்ளன. அதற்கேற்ப இந்தியாவில் இயற்கைவளம் உள்ளது.

பூமி மேற்கிலிருந்து கிழக்காகச் சுழலக்கூடியது. இதனால் நீரோட்டம் "கோரியாலிஸ்' விளைவிற்கு உட்படுகிறது. அதாவது வடதுருவ நீரோட்டம் வலஞ்சுழியாகவும், தென்துருவ நீரோட்டம் இடஞ்சுழியாகவும் இடம்பெயரும். இவ்விரு நீரோட்டங்களும் பூமியின் மத்தியப்பகுதியில் குவியும். அந்த மத்திய பூமியில்தான் இந்தியா உள்ளது.

எந்த நாட்டிலும் அமையாத மற்றொரு இயற்கை அமைப்பை இந்தியா கொண்டுள்ளது. தீவு, தீபகற்பம், வளைகுடா, விரிகுடா, நீர்சந்தி, கடல், பெருங்கடல் - இந்த ஏழும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரே நிலம் இந்தியாதான். இந்த ஏழும் அமையப்பெற்ற நிலத்தில் நன்னீரோட்டம் அதிகமாக இருக்கும் என்பது புவி ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு.

உதாரணமாக 2006-ஆம் ஆண்டு மும்பை மாகிம் வளைகுடா கரையொட்டிய கடல் நீர் இனிப்பு நீராக மாறியிருந்தது. குஜராத் தீத்தல் கடற்கரைவரை அந்த இனிப்பை உணர முடிந்தது. இதற்கான காரணம் கடலில் பெய்யும் மழை வளைகுடா, விரிகுடா ஒட்டிய நிலப்பகுதியில் படியும் என்பது புவி ஆய்வாளர்களின் கருத்து.

ஒரு நிலப்பகுதியின் நீரோட்டத்தை அந்த நிலத்தை ஒட்டியுள்ள பேராழியும், நீரின் சுவையை அந்த நிலம் கொண்டுள்ள மண்ணின் வகையும் தீர்மானிக்கின்றன. பூமியின் வட அரைக்கோளத்தில் அமையப்பெற்றுள்ள சாக்கடல், செங்கடல், பாரசீக வளைகுடா கடல்களில் உவர்ப்புத்தன்மை மிக அதிகம். அதாவது ஒரு லிட்டர் கடல் நீர் 40 கிராம் உப்பைப் பெற்றுள்ளன. அதேபோல் பசிபிக் பெருங்கடல் மொத்தக் கடலின் சராசரி உப்பான 32 கிராம் உப்பைக் கொண்டுள்ளது. துருவப் பெருங்கடல்களான ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் பெருங்கடல் 22 கிராம் உப்பைக் கொண்டுள்ளன. அதற்கு அடுத்து வங்காள விரிகுடாதான் 25 கிராம் உப்பைக் கொண்டுள்ளது. இதற்கான காரணம் வங்காள விரிகுடாவில் கலக்கும் இந்திய நதிகள் யாவும் நன்னீர் வகையைச் சார்ந்தவை.

வட அட்லாண்டிக் கடலில் கலக்கும் "காஸ்பியன் கடல்' என்பது நதி வகையைச் சார்ந்தது. ஆனால், அது கடலுக்கு நிகரான உப்பைப் பெற்றிருப்பதால் "கடல்' என்று அழைக்கப்படுகிறது. உலகின் பல நதிகள் உப்பு நீர்களாக ஓடிக் கடலில் சங்கமிக்கின்றன. ஆனால், இந்தியாவில் பாயும் அனைத்து நதிகளும் நன்னீர் நதிகளே.

ஒரு நாட்டின் குடிநீர் தேவையை நிலத்தடி நீரும், நதி நீருமே நிவர்த்தி செய்ய முடியும். நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்தும் நாடு இந்தியா. இருப்பினும் நிலத்தடி நீரை மக்களுக்கு உறுதி செய்வதில் இந்தியா 133-ஆவது இடத்தில் உள்ளது. ஒரு நாட்டிற்கு நிலத்தடி நீரைவிட நதி மூலமே சிறப்பானது. அந்த வகையில் ஒரு நாட்டுக்குத் தேவையான அளவு நதி நீர் கொண்ட நாடாக இந்தியா இருந்தும் குடிநீருக்காக நதிகளைப் பயன்படுத்திக் கொள்வதில் இந்தியா இன்னும் சிறப்பான இடத்தைப் பிடிக்கவில்லை.

இன்றைய உலகம் மிக வேகமாக வெப்பமடைந்துகொண்டு வருகிறது. இதனால் பனி துருவங்கள் உருகக் தொடங்கியுள்ளன. உருகும் பனிப்பாறைகள் அனைத்தும் நன்னீர் வகையைச் சார்ந்தவை. அந்த நீர் நிலத்தடி நீராகவோ, அல்லது நதி நீருடனோ கலந்தால் உலகளாவிய தண்ணீர் தட்டுப்பாடு தீரும். ஆனால், அது நேரடியாகக் கடலில் கலப்பதால் கடல்மட்டம் உயர்ந்துகொண்டு வருகிறது. கடல் மட்டம் உயர்வதால் பல நகரங்கள் அழிவது ஒருபக்கம் இருந்தாலும், நன்னீர் இருப்பு சதவீதம் குறைந்துகொண்டு வருகிறது. இதனால் உலக நாடுகள் சமீபகாலமாக நன்னீர் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகின்றன.

இந்தியாவில் பாயும் பெரும்பாலான நதிகள் இமயமலையில் உற்பத்தியாகின்றன. உலகின் மிக உயரமான சிகரம் எவரெஸ்ட் பனிப்பாறைகளால் ஆனது. அப்பாறையும் உலக வெப்பத்தால் உருகிக்கொண்டு வருகிறது. உருகும் நீர், சமவெளியில் பல மைல் தூரம் கடந்து கடலில் சங்கமிக்கிறது. இந்த இயற்கை அமைப்பு உலகில் வேறு எந்த நாட்டிற்கும் கிட்டாத ஒன்று. இதைக் கருத்தில் கொண்டுதான், பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் இந்திய நதிநீர் வளத்தை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன.

மத்திய தரைக்கடலில் கலக்கும் நைல் நதியும், தென் அட்லாண்டிக் கடலில் கலக்கும் அமேசான் நதியும் ஒரே மாதிரியான நீரோட்டத்தைப் பெற்றிருப்பதில்லை. அவ்வப்போது வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி விடுகின்றன. ஆனால் வங்காள விரிகுடாவில் கலக்கும் கங்கை, பிரம்மபுத்திரா சமச்சீரான நீரோட்டத்தைப் பெற்றுள்ளன. சிந்துவுடன் சேர்ந்து இந்த மூன்று நதிகளும் மழைக்காலங்களில் மழை நீராலும் கோடைக்காலங்களில் உருகும் பனியாலும் நீர் அடர்த்தியை சமச்சீராகத் தக்க வைத்துக்கொள்கின்றன.

இன்று நம்மிடம் "மினரல்' என்னும் சொல் புரையோடியிருக்கிறது. அது ஒரு செயற்கையான சுவை என மக்களால் கருதப்பட்டு வருகிறது. மினரல் என்பது ஆற்று, ஊற்று, கிணற்று நீர் சுவைகளின் கலவை. இந்தச் சுவையை உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான கனடா, அமெரிக்காவிற்கிடையே பாயும் "சுப்பீரியர்' ஏரிகூடப் பெற்றிருக்கவில்லை. ஆனால் கங்கை, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி போன்ற இந்திய நதிகள் அந்தச் சுவையைக் கொண்டுள்ளன. ஆனால் இந்த நதிகளின் தண்ணீரை இன்று பருகுமளவிற்கு சுத்தமாக இருக்கிறதா என்பது நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி. உலக நதிகளில் நுண் கிருமியை அழிக்கக்கூடிய "பாக்டீரியா ஃபேஜ்' எனும் நன்னுயிரி கங்கை நதியில் மட்டுமே உண்டு. அதற்கு ஒரே காரணம் மிதவெப்ப மண்டலத்தில் கங்கை நதி பாய்கிறது என்பதுதான். இதனால்தான் கங்கை நதி சடலங்களைச் சுமக்கும் தடாகமாக மாறியிருந்தாலும் அது புனித நதியாகக் கருதப்பட்டு வருகிறது.

உலகில் நீர் தட்டுப்பாடு ஒரு பிரச்னை என்றால், இந்தியாவில் நீர் மாசுபாடு பிரதான பிரச்னை. தமிழ்நாட்டில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக விளங்குவது காவிரி. இந்தக் காவிரி மேட்டூர் அணையில் அமிலத்தன்மை குறைவாகவும், தஞ்சாவூர் மாவட்டத்தைத் தொடும்பொழுது அமிலத்தன்மை அதிகமாகவும் இருக்கிறது. இது ஒரு புறமிருக்க, மலத்தில் வாழும் "எகோலி பாக்டீரியா' தமிழக நதிநீரில் அதிகம் இருப்பதைக் காண முடிகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →