கருத்துக் களம்

நோயற்ற வாழ்வுக்கு...

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் எனும் பழமொழி நாம் பள்ளியில் படிக்கும்போதே அறிந்துகொண்ட ஒன்றுதான்.

தினமணி

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் எனும் பழமொழி நாம் பள்ளியில் படிக்கும்போதே அறிந்துகொண்ட ஒன்றுதான். எத்தனைக் கோடி செல்வமிருந்தாலும், மேற்படிப்பு படித்து உயர் பதவி வகித்தாலும், நாட்டையே கட்டிப்போடும் அதிகாரம் படைத்திருந்தாலும், ஆரோக்கியமான உடல் அமையாவிட்டால் எதையுமே மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும் வாய்ப்பை இழந்துவிடுவோம்.
 ஆரோக்கியமாக வாழ தொடர் முயற்சிகளை, பயிற்சிகளை நாம் மேற்கொள்வதில்லை. இளம் வயது முதலே படிப்பு, வேலை, பணம், தொழில், குடும்பம் என்றே அலைந்து கொண்டிருப்போம். நோய் தாக்கும்போதும், வயதான காலத்திலும் விழித்துக்கொண்டு நாமும் கஷ்டப்பட்டு குடும்பத்தினரையும் கஷ்டப்படுத்துவோம். ஆரோக்கியம் விலைக்கு வாங்கக் கூடிய கடைச் சரக்காக இல்லாத காரணத்தால், கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் நபராகக் காட்சி தருவோம்.
 யோக அப்பியாசங்கள் எனும் யோகாசன உடற்பயிற்சிகள் நம் நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளதை நாம் அறிவோம். யோகாவும், சித்தாவும் நம் முன்னோர்கள் நமக்குக் கொடுத்துள்ள பொக்கிஷங்கள். நமது பொக்கிஷம் வெளிநாடுகளில் நல்லபடி பயன்படுத்தப்படுகிறது.
 காவல் துறை, ராணுவத் துறை, மலை ஏறும் பயிற்சியாளர்கள், விஞ்ஞானிகள் இவர்களுக்கு இப்பயிற்சிகள் கற்பிக்கப்படுகின்றன. மன உளைச்சலைக் குறைத்து சிந்தனையைச் சீராக்க, கைதிகளுக்கும் போதிக்கப்படுகின்றன.
 யோகப் பயிற்சிகள் உடலை உறுதி செய்வதோடு மனதையும் உறுதி செய்வது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜூன் 21-ஐ சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை அறிவித்து யோகாவை பெருமைப்படுத்தி இருக்கிறது.
 ஆன்மிகவாதிகளான யோகிகளின் கண்டுபிடிப்பாக இது இருந்தாலும், கடவுளே இல்லை என்கிற நாத்திகர்களும் யோகாவுக்கு எதிரியல்ல. மொழி, மதம், நாடு கடந்து ஆண், பெண், படித்தவர், படிக்காதவர் என எந்த வயதினரும் இப்பயிற்சிகளை கற்றுப் பயன் அடையலாம்.
 நோயிலிருந்து விடுபடவும், நோயே வராமல் தடுத்துக் கொள்ளவும் இப்பயிற்சிகள் கைகொடுக்கும். யோகப் பயிற்சிகள் தலைமுதல் பாதம் வரை நரம்புகளைப் புத்துணர்ச்சி பெற வைத்து ரத்த ஓட்டத்தையும் சீராக்குவதால், சராசரி மனிதருக்கு வரும் நீரிழிவு, ரத்த அழுத்தம், மாரடைப்பு ஆகியவை தவிர்க்கப்படுகின்றன. பாரம்பரிய வியாதிகளினின்றும் தற்காத்து கொள்ளலாம்.
 மன மகிழ்ச்சி, மன அமைதி, துணிச்சல், எதையும் தாங்கும் இதயம், கற்பனை வளம், தெளிவான சிந்தனை போன்றவை இயற்கையாகவே தோன்றும். புகைப் பிடிப்போர், மது அருந்துவோர் தொடர்ந்து யோகா பயிற்சி செய்தால் அவர்களாகவே அப்பழக்கங்களினின்று விடுபடும் வாய்ப்பும் உண்டு.
 உடல் உறுப்புகள் லேசில் பழுதடைவதில்லை. எந்த வயதில் பயிற்சி மேற்கொள்கிறோமோ அதே வயது இளமையோடு உள் உறுப்புகள் விளங்குவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. யோகா பயிற்சி செய்வோருக்குப் பிறக்கும் வாரிசுகளும் ஆரோக்கியத்துடனும், அறிவாற்றலுடனும் வளர்வார்கள்.
 நாம் செய்யவேண்டியது என்ன? தகுதியான குருவிடம் இணைந்து யோகப் பயிற்சியை முறையாகக் கற்றுக் கொள்ள வேண்டும். பிரபல நிபுணர் பி.கே.எஸ். ஐயங்கார் தொடங்கி பல்வேறு நிபுணர்களும், ஆராய்ச்சியாளர்களும் யோகா தொடர்பான புத்தகங்கள் எழுதியுள்ளனர். தேவையெனில், அதுபோன்ற புத்தகங்களைப் படித்து யோகா குறித்து ஆழமாக அறிந்து கொள்ளலாம்.
 பல ஆசனங்களை உள்ளடக்கிய சூரிய நமஸ்கார் பயிற்சியும், நின்ற நிலையில், அமர்ந்த நிலையில், படுத்த நிலையில் எனப் பொதுவாக செய்யக் கூடிய 10-க்கும் குறைவான ஆசனங்களையும், ஒரு சில மூச்சுப் பயிற்சிகளையும் செய்தாலே ஓரளவு போதுமானது.
 விடியற்காலை 5 மணி முதல் 6 மணிக்குள் செய்வது உசிதமானது. இயலவில்லை எனில், காலையிலோ மாலையிலோ பயிற்சி செய்யலாம். 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை வெறும் வயிற்றில் காற்றோட்டமான இடத்தில் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
 யோகா பயிற்சிகள் எளிமையானவை, சுலபமானவை. குண்டாக உள்ள ஆண்களும், பெண்களும்கூட இப்பயிற்சிகளைப் பழக முடியும். முதலில் சில நாள்களுக்குச் சிறிது சிரமமிருந்தாலும், நாளடைவில் நல்ல முறையில் பழக்கத்துக்கு வந்துவிடும்.
 நமது உடலுக்கும், வயதுக்கும் ஏற்றார்போல ஆசனங்களைத் தேர்வு செய்து பழக வேண்டும். அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே எளிமையான ஆசனங்களைப் பழகலாம். கர்ப்பமுற்ற பெண்கள், பெண் மருத்துவரின் ஆலோசனை பெற்றே பயிற்சியில் ஈடுபட வேண்டும். காய்ச்சல், தலைவலி, பல் வலி, கண் வலி, காது வலி போன்றவை இருந்தால் குணமாகும் வரை பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
 யோக பயிற்சிகளை போன்றே நாம் உண்ணும் உணவும், அருந்தும் பானகமும் நமக்கு ஆரோக்கிய வாழ்வு அமைவதில் முக்கிய பங்காற்றுகின்றன.
 யோகாசனத்துடன் நமது உணவு முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளையும், கீரை வகைகளையும், காய்கறிகளையும், பழ வகைகளையும் உண்ணுவதால் வயிற்று உபாதைகளை தவிர்க்கலாம்.
 முடிந்த அளவு சைவ உணவாக இருப்பது நலம். 40 வயதுக்கு மேல் அசைவ உணவு வகைகளைக் குறைத்துக் கொள்வது நன்மை தரும். கண்ட கண்ட உணவை, கண்ட நேரங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பசி எடுத்தே உண்பது, பசிக்கேற்ப உண்பதே சிறந்தது. நொறுங்கத் தின்றால் நூறு வயது எனும் பழமொழி உண்டு.
 வரும்முன் காப்பவனே புத்திசாலி. யோகா பழகி, நல்ல உணவு வகைகளை உண்டு ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்வு வாழ்வோம்.
 மோசூர் கணேசன்,
 அரக்கோணம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT