முகப்பு
மெய்யாலுமா

மெய்யாலுமா

திட்டவட்டமாக மறு பிரவேசத்துக்கு முதல்வர் முற்றுப்புள்ளி வைத்துவிட்ட நிலையில் கலகலத்துப் போயிருக்கிறதாம் ஆக்டோபசாக ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்றிக் கோலோச்சிக் கொண்டிருந்த குடும்பம். பொதுக்குழுவில் எ

Updated On : 28 ஜூலை, 2025 at 4:30 AM
பகிர்:

திட்டவட்டமாக மறு பிரவேசத்துக்கு முதல்வர் முற்றுப்புள்ளி வைத்துவிட்ட நிலையில் கலகலத்துப் போயிருக்கிறதாம் ஆக்டோபசாக ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்றிக் கோலோச்சிக் கொண்டிருந்த குடும்பம். பொதுக்குழுவில் என்ன நடந்தது என்று கேட்டுத் தெரிந்துகொள்ள அவர்களால் பரிந்துரைக்கப்பட்டுப் பதவி சுகம் அனுபவிக்கும் பல அமைச்சர்களையும் தொடர்பு கொண்டபோது, யாருமே கைப்பேசியை எடுக்கவில்லை என்பதுடன் உதவியாளர்களின் கையையும் கட்டிப்போட்டுவிட்டனராம்.

பொதுப்பணியில் ஈடுபட்டவரும், தனது தொகுதியில் கலைச்சேவையை ஊக்குவித்துக் கல்லாகட்டுவதில் மன்னாதி மன்னரானவரும்தான் தகவல் தந்து உதவினார்களாம். அதிலும் முன்னவர் புத்திசாலி என்கிறார்கள். வைணவத்தையும் சைவத்தையும் இணைத்து அவரது பெற்றோர்கள் பெயர் வைத்ததே புத்திசாலித்தனமாக அவர் செயல்படுவார் என்பதால்தானோ என்னவோ. காரோட்டியின் கைப்பேசியைப் பயன்படுத்திப் பேசிக் கலாய்த்து விசுவாசத்தையும், அதேநேரத்தில் பதவியையும் காப்பாற்றிக் கொள்ள முற்பட்டாராமே, மெய்யாலுமா?

ஆளுநர் மாளிகையில் பிரதமரைப் பார்த்துப் பேசிய முதல்வருக்குத் தரப்பட்ட நேரமும், மரியாதையும் தனக்குத் தரப்படவில்லை என்கிற வருத்தம் அவருக்கு. அதைவிட வருத்தம் தங்களிடம் கலந்துபேசி, தனது கருத்தைக் கேட்காமல் அம்மையாரின் கருத்தை ஏற்றுக்கொண்டு பேரிடர் நிபுணர் குழுவைக் கலைத்தது. தன்னையும் தனது குடும்பத்தினரையும் அவர் மதிப்பதில்லை என்பதைத் தனது சகாக்களிடம் எல்லாம் கூறிப் புலம்புகிறாராமே, மெய்யாலுமா?

ஆளுநர் மாளிகைக்குப் பிரதமரைச் சந்திக்க மூத்த திராவிடத் தலைவர் அழைத்துச் சென்ற குழுவில் இருந்தவர்களில் யாருக்கும் முல்லைப் பெரியாறு பற்றிய தெளிவான விவரங்கள் இருக்கவில்லையாம். கூடப்போன மதுரைக்கார முன்னாள் அமைச்சரை யாரும் பேசவிடவில்லை. சேதுவைக் குழப்பிய முன்னாள் மத்திய அமைச்சரும் சரி, ஜாமீனில் வந்திருக்கும் அம்மணியும் சரி, பிரதமரின் அமைச்சரவை சகாவும் சரி பிரச்னையைத் தெளிவாக எடுத்துக்கூறத் தெரியாமல் அசடு வழிந்தார்களாம்.

"அதிர்ஷ்டத்தில் அரசியலுக்கு வந்தவர் என்று இவர்களால் வர்ணிக்கப்படும் முதல்வர் புள்ளிவிவரங்களுடன் பிரச்னையைப் பிட்டு பிட்டு வைக்கிறார். நீண்ட அரசியல் பாரம்பரியம் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் இவர்களது கட்சியில் அவரைப் போலப் பிரச்னையை எடுத்துச் சொல்ல ஒருவர் கூட இல்லையா?' என்று கேட்டுச் சிரித்தார்களாமே பிரதமரின் உதவியாளர்கள், மெய்யாலுமா?

அதிரடி மாற்றங்கள் காவல் துறையிலும், அதிகாரிகள் மத்தியிலும், அமைச்சரவையிலும் ஏற்படும் என்கிற எதிர்பார்ப்பு என்னவாயிற்று? காரணமாகத்தான் மாற்றங்கள் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மூன்று பிரிவிலும் தீவிரமான விசாரணை முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. காவல் துறையின் களையெடுப்பும் மாற்றங்களும் முதலில் நடைபெறும் என்றும், அடுத்தபடியாக அதிகாரிகள் மட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என்றும் தகவல்.

தானே அதிகாரிகளின் சர்வீஸ் ரெக்கார்டைப் பார்வையிட்டு வேண்டியவர் வேண்டாதவர் என்பதை ஒதுக்கி வைத்துவிட்டுத் திறமைசாலிகளை நியமிப்பது என்று முடிவெடுத்திருக்கிறாராம் முதல்வர். தான் ஒருமுறை நேரில் பார்த்துப் பேசிவிட்டால், எல்லோரும் தனது ஆதரவாளர்களாகவும், விசுவாசிகளாகவும் மாறிவிடுவார்கள் என்று நம்புகிறாராம் முதல்வர். இந்த மாற்றங்கள் எல்லாம் தை மாதம் தான் நடைமுறைப்படுத்தப்படுமாமே, மெய்யாலுமா?

ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் தொடங்கிய கட்சியில் சில முன்னேற்றங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது. அதில் முக்கியமான மாற்றம் கிச்சடிச் சம்பாவுக்குப் பெயர்போன வட மாவட்டத்தின் பெயரைத் தனது அடைமொழியாகக் கொண்டிருப்பவருக்கு நிரந்தர ஓய்வு தரப்படுவது. வீரமானவர் இருந்த இடத்தைத் தனக்குத் தரவேண்டும் என்ற அடம்பிடிக்கிறாராம் அஞ்சாநெஞ்சர். அப்படித் தந்துவிடக்கூடாது என்று அஞ்சுகிறாரம் அவரது தம்பி. இரண்டு பேருக்கும் இடையில் சண்டை எதற்கு, அதை எனக்குத் தந்து விடுங்களேன் என்கிறாராம், "தியாகம்' செய்து சிறைச்சாலையை வலம் வந்த பெண்மணி. வாரிசு யுத்தம் மீண்டும் தொடங்கி விட்டதாமே, மெய்யாலுமா?

சத்யா ஸ்டுடியோவில் மக்கள் வெள்ளத்தில் தொடங்கிய கட்சி தங்களுக்கு அழைப்பு விடுக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்து விட்டனராம், விட்டுப் பிரிந்த தலைவர்கள். வட சென்னையின் பாபுவிலிருந்து தென் மாவட்டக் கோடியில் இருக்கும் சாமி வரை, அம்மா விரலசைத்தால் ஓடிவந்து காலில் விழத் தயாராகக் காத்திருக்கிறார்களாம். அப்படி ஒரு அழைப்பு விடுக்கப்பட்டால், அறிவாலயம் காலியாகி விடும் என்று கூறுவது வேறு யாருமல்ல, முதல்வரின் அரசியல் பிரவேசத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த முதல் நபர்தானாமே, மெய்யாலுமா?

காரைக்குடியில் பல்கலைக்கழக விழா. கலந்து கொண்டவர் பாரதப் பிரதமர். அந்த விழாவில் பிரதமரின் மூத்த அமைச்சரவை சகா என்பது இருக்கட்டும், அந்தத் தொகுதியில் மக்களவை உறுப்பினர் என்கிற முறையிலாவது சிவகங்கைச் சீமான் அழைக்கப்பட வேண்டுமா இல்லையா? ஏன் அழைப்பிதழில் கூட அவரது பெயர் இல்லையாம்?

விசாரித்தபோதுதான் தெரிந்தது இது "முற்பகல் செய்யும் பிற்பகல் விளையும்' பழமொழியை ஒட்டிய சம்பவம் என்று. சில மாதங்களுக்கு முன்னால் நடந்த தேசியப் பாதுகாப்புப் படைப் பயிற்சி மையத் தொடக்க விழாவில் மாநில அரசின் பங்களிப்பு இருந்தும்கூட, முதல்வர் அழைக்கப்படவில்லையாம்.

தமிழக அரசால் 66 ஏக்கர் இடம் தரப்பட்டு வண்டலூர் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பயிற்சி மையத்தின் துவக்க விழாவுக்கு அன்றைய துணை முதல்வரை அழைக்கத் தெரிந்தபோது, திறப்பு விழாவுக்கு முதல்வரை அழைக்க வேண்டும் என்கிற மரியாதை இல்லாமல் போனது ஏன் என்பதுதான் முதல்வரின் கோபத்துக்குக் காரணமாம்.

உள்ளே இருக்கும் துறையின் அமைச்சருக்கு அவ்வளவு வீம்பு இருந்தால், முதலாவதாக இருப்பவருக்கு எந்த அளவுக்கு வைராக்கியம் இருக்கும் என்பதைக் காட்டத்தானாமே, இந்த அவமானம். மெய்யாலுமா?

மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் அலைக்கற்றை நாயகி. பிரதமரை ஆளுநர் மாளிகையில் சந்தித்த கூட்டணிக் கட்சியின் குழுவில் அவரும் இடம் பெற்றிருந்ததுதான் சர்ச்சைக்குக் காரணம். வழக்கு விசாரணையில் இருக்கும்போது சம்பந்தப்பட்ட எதிரி பிரதமரைச் சந்திப்பதன் மூலம் அவரது அனுதாபத்தையும் ஆதரவையும் திரட்டுவதான் தந்தையின் நோக்கமாம். அதற்கு முல்லைப் பெரியாறு ஒரு சாக்காக அமைந்ததாம், அவ்வளவே!

தனது கூட்டணிக் கட்சித் தலைவர் இவரை அழைத்து வருவார் என்று எதிர்பார்க்காத பிரதமருக்கு ஒரே அதிர்ச்சி. அந்த அம்மணி தன்னுடன் காணப்படும் புகைப்படம் எதுவும் வெளிவந்துவிடக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறாரமே, பிரதமர், மெய்யாலுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.