முகப்பு
மெய்யாலுமா

மெய்யாலுமா..?

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மாமன்னர் ராஜராஜன் முடிசூட்டிக் கொண்ட மாநகரில், சிதம்பரநாதன் நடத்திய விழாவில் மத்திய நிதியமைச்சரின் மைத்துனர் கலந்துகொண்டார் என்ற செய்தி கேட்டதும் முதலில் திடுக்கிட்டது அறி

Updated On : 28 ஜூலை, 2025 at 4:30 AM
பகிர்:

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மாமன்னர் ராஜராஜன் முடிசூட்டிக் கொண்ட மாநகரில், சிதம்பரநாதன் நடத்திய விழாவில் மத்திய நிதியமைச்சரின் மைத்துனர் கலந்துகொண்டார் என்ற செய்தி கேட்டதும் முதலில் திடுக்கிட்டது அறிவாலயம்தானாம். தனது கட்சியைச் சேர்ந்த அந்த ஊர் அமைச்சருக்கு செல்பேசி அழைப்பு பறந்தது. "என்ன இது? யார் ஏற்பாடு?' என்று தலைவர் தொடுத்த கேள்விக் கணையால் அந்த அமைச்சர் அதிர்ந்து போய்விட்டார்.

 ÷விசாரித்தால் அப்படி ஒரு மைத்துனர் மத்திய நிதியமைச்சருக்குக் கிடையாது என்று தகவல் கிடைத்தது. அவருக்கு இருப்பது ஒரே ஒரு மைத்துனர். அவர் இருப்பதோ மும்பையில். சுப விரதம் இருந்து பெற்றவர் என்பதால் சுப்ரதோ கோஷ் என்று பெயர். கிருஷ்ணமோகன் என்பது யார் என்று தெரியாது என்று நிதியமைச்சரின் அலுவலகத்தில் சொல்லிவிட்டார்கள்.

 ÷தகவல் கிடைத்தவுடன் அறிவாலயத்தில் ஒரே திகைப்பு. அவர்களுக்கு மட்டுமா? நிதியமைச்சரின் மைத்துனர் நமக்குத் தெரியாமல் எங்கிருந்து வந்து குதித்தார்? அவருக்கும் ஈழத்தமிழர் ஆதரவாளர்களுக்கும் என்ன நெருக்கம்? என்று தெரியாமல் கதர்ச் சட்டைக்காரர்களுக்கும் அல்லவா திகைப்பு.

 ÷சிந்த்தா மத் கரோ (கவலைப்படாதீர்கள்) என்று முன்னாள் அதிகாரத் துணை மையத்தின் கணவருக்கு மோகனப் புன்னகையுடன் குற்றேவல் புரியும் பக்கத்து மாநில மக்களவை உறுப்பினரின் வேலைதான் இந்த ஆள்மாறாட்ட நாடகம் என்று சொல்லப்படுகிறது. தனக்கு மத்திய அரசில் செல்வாக்கு இருக்கிறது என்று பயமுறுத்தத்தான் இந்த நாடகமாமே, மெய்யாலுமா?

 யாரோ ஒருவரைக் கொண்டு வந்து மத்திய அமைச்சரின் மைத்துனர் என்று இங்கே இவர் அறிமுகப்படுத்த, அந்த ஆள்மாறாட்டத்தின் விளைவாக அந்த மூத்த அமைச்சருக்குத் தலைவலி தொடங்கி இருக்கிறது. ஈழத் தமிழர் ஆதரவு அணிகளுடன் அந்த அமைச்சரின் உறவினருக்குத் தொடர்பு இருக்கிறது என்று வங்காளப் பத்திரிகைகள் செய்தி வெளியிட, யார் அந்த மோகனப் புன்னகை செய்யும் கிருஷ்ணன் என்று தெரியாமல் நிதிநிலைமையை விடப் பெரிய பிரச்னையாக இதை நினைத்துக் கவலைப்படுகிறாராமே நெம்பர் இரண்டு, மெய்யாலுமா?

 கவிதாயினியின் வீட்டுக்குக் கட்சிக்காரர்கள் யார் போனாலும் தடபுடல் கவனிப்பாம். கோரிக்கை மனு எது வந்தாலும் அதற்கான ஆலோசனைகள் கூறி தங்கள் கட்சியின் மத்திய அமைச்சர் தொடர்புடையதாக இருந்தால் உடனடித் தொலைபேசி உத்தரவுகளும் பிறப்பிக்கப்படுகிறதாம். ஊருக்கு நூறு ஆதரவாளர்கள் தனக்கும் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறதாம் சகோதரி தரப்பு. ஆண் வாரிசுக்குப் பெண் வாரிசு சரிநிகர் சமம் என்பதை நிரூபிப்பதில் குறியாக இருக்கிறாராம் அவர். இதற்கு அப்பாவின் ஆசி இல்லையாமே, மெய்யாலுமா?

 பெண் வாரிசு தங்களுடன் சரிநிகர் சமானமாக மேடையில் அமர்ந்துவிடக் கூடாது என்று திட்டமிட்டே திமுக பொதுக்குழு பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி கூட்டப்பட்டிருக்கிறதாம். இந்தத் தேதியில் தில்லி நீதிமன்றத்தில் அவர் கையெழுத்திட்டாக வேண்டும் என்பது தெரிந்துதான் தேதி நிச்சயிக்கப்பட்டதாம். பொதுக்குழுத் தேதியைத் தள்ளி வைக்கும்படி தாயும் மகளும் எவ்வளவோ போராடிப் பார்த்தும், அப்பாவே வேண்டுகோள் விடுத்தும் ஆண் வாரிசுகள் பிடிவாதமாக மறுத்து விட்டனராம். இந்தப் பிரச்னையில் சகோதரர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்களாமே, மெய்யாலுமா?

 சென்னை கோடம்பாக்கம் தர்மாபுரத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு கட்சிப் பொதுக்கூட்டம். இன்னாள் மாவட்டமும் முன்னாள் மாவட்டமும் ஆஜர். ஆனால் அமைச்சராகி விட்ட தொகுதி எம்.எல்.ஏ. எங்கே என்று காத்திருந்து காத்திருந்து கூட்டம் வெறுத்துப் போனதுதான் மிச்சம். தேய்பிறைக் காலமாயிற்றே, கூட்டமும் தேயத் தொடங்கி விட்டது. மாநகரத்து சாமிதுரையே எந்த இடத்தில் கூட்டம் நடந்தாலும் தலையைக் காட்டிவிட்டுப் போகும்போது தொகுதி அமைச்சருக்கு என்ன கேடு வந்தது என்று கட்சிக்காரர்கள் முணுமுணுப்பதில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது? விஷயம் வேறொன்றுமில்லையாம். ஆதிக்கும் மதிக்கும் பிடிக்காததுதான் காரணமாமே, மெய்யாலுமா?

 ராவணாதிகளின் விசுவாசியாக இருந்தவர்களில் ஒருவர் சமீபத்திய அமைச்சரவை மாற்றத்தில் இன்னொரு இலாகாவுக்கு மாற்றப்பட்டவர். மணியானவர் என்று கருதப்படும் இவரை கொங்கு மண்டலக் கட்சிக்காரர்கள் ஜுவல் மணி என்றுதான் அழைக்கிறார்கள். பினாமி பெயரில் அடுத்தடுத்து மூன்று நகரங்களில் இவர் நகைக்கடை தொடங்கி விட்டிருப்பதைப் பார்த்து, தலைமுறை தலைமுறையாக வியாபாரம் செய்து வரும் நகைக்கடைக்காரர்களே மிரண்டு போயிருக்கிறார்களாம்.

 ÷தொழில் துறையில் இருந்தபோது கிரானைட் நிறுவனங்களையும், பழைய இரும்பு வியாபாரிகளையும் ராவணாதிகளின் சார்பில் உருட்டி மிரட்டி வாங்கிய பணமெல்லாம் இப்போது இவருக்கே இவருக்காகிவிட்டதன் பின்னணியில்தானாம் இத்தனை நகைக்கடைகள். வேல் பாயும் என்று எதிர்பார்த்த நிலையில் இவருக்கு வேலையும் போகவில்லை, சம்பாதித்த "மணி'யும் போகவில்லை என்று சொல்லிச் சிரிக்கிறார்களாமே, மெய்யாலுமா?

 ÷

 இந்தியாவின் மத்தியில் இருக்கும் பிரதேசத்திலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பெண் உறுப்பினர் அவர். மதுரையா சிதம்பரமா என்று கேட்பார்கள். இவர் இரண்டும் கலந்தவர். அப்படி என்றால்? மதுரை என்றால் யார் பெயர் ஞாபகத்துக்கு வரும்? சிதம்பரம் என்றால் எந்தப் பெயர் நினைவுக்கு வரும்? இரண்டையும் இணைத்தால் இவரது பெயர்.

 ÷காங்கிரஸ் கட்சியின் பட்டத்து இளவரசரால் அடையாளம் காணப்பட்ட இளைய தலைமுறைத் தலைவர்களில் இவரும் ஒருவர். தான் ஒரு அடிமட்ட மக்களின் பிரதிநிதி என்று காட்டிக் கொள்வதில் குறியாக இருக்கும் இந்தப் பெண்மணி அடுத்த வாரிசைப் பார்க்கப் போகும்போது ஆட்டோ ரிக்ஷாவில்தான் பயணிப்பார்.

 ÷சமீபத்தில் 8,000 பேர் கூடியிருந்த இளைஞர் காங்கிரஸôரின் மாநாடு. பட்டத்து இளவரசர் இவரிடம் ஒரு கோகோ கோலா டின்னைக் கொடுத்தபோது, அம்மணி போட்டாரே பார்க்கலாம் ஒரு போடு, அதைக் கேட்டு நேரு குடும்ப வாரிசே வாயைப் பிளந்து அதிர்ச்சியில் சமைந்துவிட்டது என்றால் சுற்றி இருந்தவர்களைக் கேட்க வேண்டுமா?

 ÷அப்படி என்ன சொல்லி இருப்பார் என்று நினைக்கிறீர்கள்? ""இதை எப்படித் திறப்பது?'' என்று அப்பாவியாக அந்த அம்மணி கேட்டாராமே, மெய்யாலுமா?

 வெளியேறியவர்கள் பரபரப்பாக்கும் வதந்திகளில் ஒன்று, கோட்டையில் கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன என்பது. இன்னொன்று, அமைச்சர்களையும் அதிகாரிகளையும் நாங்கள் கண்காணித்து அவ்வப்போது தகவல் தந்ததுபோல இப்போது செயல்பட யாரும் இல்லாததால் அவரவர் இஷ்டத்துக்குக் கொள்ளை அடிக்கிறார்கள் என்பது. ஆனால், இப்போதும் சில முக்கியமான அமைச்சர்களும், அதிகாரிகளும் தங்களுடன் தொடர்பில் இருப்பதை மட்டும் சொல்லாமல் இருக்கிறார்களாமே, மெய்யாலுமா?

 நீண்ட நாள்களாகவே தனியார் செவிலியர் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியருக்கும் அரசுப் பணியில் சேர அனுமதி வேண்டும் என்கிற கோரிக்கை இருந்து வருகிறது. இப்போது தனியார் செவிலியர் கல்லூரி நடத்தும் ஒருவரே அமைச்சராகி விட்டிருப்பதால்தான் அந்தக் கோரிக்கை விரைந்து நிறைவேற்றப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறதே, மெய்யாலுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.