சின்னதாக இருந்தாலும் சிறப்பாக இருக்கும் அரங்கங்களில் ஒன்று ஆர்கே கன்வென்ஷன் சென்டர். அங்கே "மதுரத்வனி' சார்பில் வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஐஸ்வர்யா சங்கரின் இன்னிசைக் கச்சேரி. சுகுணா வரதாச்சாரியின் சிஷ்யை என்று சொல்லும்போதே, இந்த இளம் கலைஞரின் திறமைக்கும், சங்கீதத்தின் ஆழத்துக்கும் சொல்லவா வேண்டும்.
பரூர் ஹரிணி ஸ்ரீவத்ஸô வயலின். ரகுநந்தன் மிருதங்கம். மூன்று பேரும் இளைஞர்கள். வயதானவர்கள் மட்டுமே ரசிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு நமது சங்கீதத்திற்கு இருந்தாலும், மேடைகளில் பார்த்தால் இளைஞர் பட்டாளம் தங்கள் திறமைகளை போட்டி போட்டுக்கொண்டு வெளிப்படுத்தி வருகிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் உதாரணம்.
எடுத்த எடுப்பிலேயே ஹயக்ரீவர் மீது "ஞானானந்தமயம் தேவம்' என்று ஸ்லோகத்தை விருத்தமாகப் பாடிவிட்டு, "ஸôவேரி' ராகத்தில் "சரசூட' வர்ணத்துடன் கலகலப்பாக கச்சேரி தொடங்கியது. ஐஸ்வர்யா புத்திசாலி. சுறுசுறுப்பான எடுப்பு விட்டுப் போய்விடலாகாது என்று, அடுத்தாற்போல விறுவிறுப்பாக "நாட்டை'யில் "ஸ்வாமிநாத பரிபாலய'. ராக ஆலாபனையும் ஸ்வரமும் பாடினார்.
தொடர்ந்து விஸ்தாரமாக அம்புஜம் கிருஷ்ணா "பூர்விகல்யாணி' ராகத்தில் புனைந்த "இனியாகிலும் நினை மனமே' என்கிற ரூபக தாளத்தில் அமைந்த சாகித்யம் இசைத்தார். பூர்விகல்யாணியின் சர்வ லட்சணங்களையும் வெளிப்படுத்தும் விஸ்தாரமான ஆலாபனை. பல்லவியில் கல்பனா ஸ்வரமும் பாடிவிட்டு அடுத்த உருப்படிக்கு நகர்ந்தார்.
"குந்தளவராளி' ராகம் ஒரு விறுவிறுப்பான, ஜனரஞ்சகமான ராகம். அதனால்தான், "ஏழிசை மன்னர்' எம்.கே. தியாகராஜ பாகவதரின் திரையிசைப் பாடல்கள் பலவும் இந்த ராகத்தில் அமைந்திருப்பதைக் காணலாம். பாபநாசம் சிவனுக்கும் மிகவும் பிடித்த ராகம் இது. பல சாகித்யங்கள் இதில் புனைந்திருக்கிறார். ஐஸ்வர்யா பாட எடுத்துக் கொண்டது பாபநாசம் சிவனின் "தாமசமா அம்பா' என்கிற கிருதி.
கச்சேரி என்னதான் விறுவிறுப்பாக இருந்தாலும், ஓர் இசைக் கலைஞரின் திறமைகளை எடுத்தியம்புவது என்னவோ அவரது விஸ்தாரமான ஆலாபனையும், நிரவல் ஸ்வரம் பாடுவதில் இருக்கும் மனோதர்மமும்தான். தமது வித்வத்தை நிரூபிப்பதற்கு ஐஸ்வர்யா தேர்ந்தெடுத்த ராகம் "சங்கராபரணம்'. தியாகய்யர் ஆதி தாளத்தில் அமைந்த "எந்துகு பெத்தல' என்கிற சாகித்யம்.
விஸ்தாரமான ஆலாபனை. "வேத சாஸ்த்ர' என்கிற இடத்தில் நிரவல் அமைத்துக் கொண்டு கல்பனா ஸ்வரம் பாடினார். ஸ்வரப் பிரஸ்தாரங்களின் தேர்ச்சியும் இருந்தது, கவர்ச்சியும் இருந்தது. பல இளம் கலைஞர்களுக்கு நல்ல தேர்ச்சி இருக்கும்.
கணக்கு விவகாரங்களில் தங்களுக்கு இருக்கும் வித்வத்தை வெளிக்காட்ட நினைத்தால் ரசிகர்கள் சலித்துக் கொள்ளத் தொடங்கிவிடுவார்கள். ஐஸ்வர்யாவிடம் ரசிகர்களைக் கட்டிப் போடும் ஸ்வரப் பிரஸ்தார விறுவிறுப்பும் இருப்பது பாராட்டப்பட வேண்டிய அம்சம்.
"மோடி ஜேசே' என்கிற "கமாஸ்' ராக ஜாவளியும், "சிந்து பைரவி'யில் "கருணை தெய்வமே கற்பகமே' என்கிற கிருதியும் பாடித் தனது நிகழ்ச்சியை நிறைவு செய்தார் ஐஸ்வர்யா சங்கர்.
அடுத்த சீசன் "ப்ரொமோஷன்' பட்டியலில் ஐஸ்வர்யா சங்கரின் பெயர் நிச்சயம் இடம் பெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.