ரசிகப்ரியா!
ஏகப்பட்ட சகோதரிகள் மேடையேறிவிட்ட காலம் இது. ஆனாலும், ரசிகர்களின் மனமேடையில் பிரியமுடன் ஏறி அமர்ந்திருப்பது என்னவோ பிரியா சகோதரிகள் என்று அறியப்படும் சண்முகப்ரியாவும் ஹரிப்ரியாவும்தான்.
ஏகப்பட்ட சகோதரிகள் மேடையேறிவிட்ட காலம் இது. ஆனாலும், ரசிகர்களின் மனமேடையில் பிரியமுடன் ஏறி அமர்ந்திருப்பது என்னவோ பிரியா சகோதரிகள் என்று அறியப்படும் சண்முகப்ரியாவும் ஹரிப்ரியாவும்தான். நேற்று யாராவது சாயங்காலம் 6.30 மணிக்கு பார்த்தசாரதி சபாவுக்கு போயிருந்தால் இந்த சகோதரிகளுக்கு இருக்கும் வரவேற்பு எப்படிப்பட்டது என்று தெரியும். அரங்கம் நிறைந்த நிகழ்ச்சி. ஹவுஸ் ஃபுல் போர்டு போடாத குறை.
சீனிவாசராவ் வயலின், ஸ்கந்தசுப்பிரமணியம் மிருதங்கம், புருஷோத்தமன் கஞ்சிரா. சமீபத்தில் காலமான டி.ஆர். சுப்பிரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர் இயற்றிய செந்தில்வாழ் முருகைய்யா என்கிற பெஹாக் ராக வர்ணத்துடன் தங்களது கச்சேரியை பிரியா சகோதரிகள் ஆரம்பித்தபோதே களைகட்டிவிட்டது. கேண்டீனில் உட்காரந்திருந்தவர்கள்கூட வராந்தாவில் வந்து நின்று கச்சேரி கேட்க தலைப்பட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
பாஹி பாஹி பாலகணபதே (ஹம்சத்வனி), லக்ஷ்ணமுனு கல (சுத்த சாவேரி) பாடிவிட்டு விஸ்தாரமாக ரிஷப பிரியா ஆலாபனை. பன்னிரு கையெனே பதம் தரும் மெய்யனே என்கிற டி. பட்டம்மாளின் சாகித்யம். கல்பனாஸ்வரமும் பாடினார்கள். ரிலீப்புக்கு தீட்சிதரின் ஸ்ரீமாத்ருபூதம் (கன்னட). பைரவி ராக ஆலாபனை அசத்தல் என்று சொல்வதா, எக்ஸலென்ட் என்று சொல்வதா தெரியவில்லை. ஸரி எவரம்மாதான் சாகித்யம். நிரவல் ஸ்வரம் எல்லாம் பாடினார்கள். பைரவி முடிந்த கையோடு இரண்டு மூன்று கிருதிகள் பாடுவார்கள் என்று எதிர்பார்த்தால், துணிந்து பிந்துமாலினி ராகத்தில் ஆதிதாளம் கண்ட நடையில் ராகம், தானம், பல்லவியில் இறங்கிவிட்டார்கள். ராகமாலிகையில் தோடியும் மோகனமும் கையாண்ட பிறகு சற்று வித்தியாசமாக இருக்கட்டும் என்று ஹிந்துஸ்தானி ராகமான முல்தானி ராகத்தை தொட்டுக்காட்டியபோது அப்ளாஸ் அதிர்ந்தது.
Advertisement
ஏகப்பட்ட ரசிகர் விருப்பம். சீட்டுக்கு மேல் சீட்டாக வந்தவண்ணம் இருந்தது. அந்த ரசிகர்களையெல்லாம் பிரியா சகோதரிகள் திருப்திபடுத்துவதாக இருந்தால் 6 மணி நேர கச்சேரிதான் செய்ய வேண்டும். சமீப காலங்களில் இந்த அளவுக்கு நேயர் விருப்ப விண்ணப்பங்கள் வேறெந்த கலைஞருக்கும் வந்ததாக தெரியவில்லை.
முத்துகாரே யசோதா (குறிஞ்சி), ஸ்ரீரங்கநாதன் (ஆரபி) இரண்டும் பாடி ஏனைய ரசிகர்களின் விருப்பத்தை நேரம் காரணமாக நிறைவேற்ற முடியாததற்கு வருத்தம் தெரிவித்து மங்களம் பாடி முடித்தார்கள்.
ராதா ஜெயலட்சுமி பாடாத குறையை அவர்களின் இந்த சிஷ்யைகள் நிறைவு செய்கிறார்கள்.