பாடாந்தர சுத்தம்!
கடந்த வெள்ளிக்கிழமை நாதஇன்பம் சார்பில் சி.ஆர். வைத்தியநாதனின் சங்கீத கச்சேரி. அதிகாலை 10 மணிக்கே கூட இப்படி கூட்டம் இருக்கும் என்று யார் எதிர்பார்த்திருப்பார்கள்? இந்த சங்கீத சீசனில் நல்ல கச்சேரி எது என்று தேர்வு செய்து புதுமுகங்களாக இருந்தாலும் கூட்டம் கூடுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை நாதஇன்பம் சார்பில் சி.ஆர். வைத்தியநாதனின் சங்கீத கச்சேரி. அதிகாலை 10 மணிக்கே கூட இப்படி கூட்டம் இருக்கும் என்று யார் எதிர்பார்த்திருப்பார்கள்? இந்த சங்கீத சீசனில் நல்ல கச்சேரி எது என்று தேர்வு செய்து புதுமுகங்களாக இருந்தாலும் கூட்டம் கூடுகிறது. அதிலும் ஒரு கச்சேரியில் இளைஞர் ஒருவர் நன்றாக பாடிவிட்டால் அவருடைய அடுத்த கச்சேரியை தேடி போய் கேட்டு ரசிக்கிறார்கள். இதெல்லாம் ஆரோக்கியமான சங்கீத வளர்ச்சியின் அறிகுறி.
அம்பிகா பிரசாத்தின் வயலின், நெல்லை பாலாஜியின் மிருதங்கம். பி.எஸ். நாராயணஸ்வாமியின் சிஷ்யர் என்கிற விசிட்டிங் கார்டுடன் இசை உலகில் ஒருவர் வளைய வருகிறார் என்றால் அவருடைய சங்கீதம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வைத்தியநாதன் அந்த பட்டியலில் ஒருவர்.
முறைப்படி கனகாங்கி தோடி ராக வர்ணத்துடன் தனது கச்சேரியை தொடங்கிய வைத்தியநாதனின் அடுத்த உருப்படி வரசித்தி விநாயகம் (கானடா). தொடர்ந்தது விஸ்தாரமான பந்துவராளி ஆலாபனை. நாரதமுனிதான் சாகித்யம். சாரேக்கு ஸ்ரீ ஹரி என்கிற இடத்தில் நிரவல் ஸ்வரம்.
Advertisement
மனஸா மன சாமர்த்தியம் ஏமி என்கிற விவர்தினி ராக சாகித்யத்தில் ஸ்வரம் மட்டும் பாடினார். தேவமனோகரியில் எவரிக்கை, வரமுவில் மனமே உனக்கு என்று இரண்டு உருப்படிகளை கையாண்டு விட்டு விஸ்தாரமாக காம்போதி ஆலாபனை. காம்போதியில் இனியும் தொட்டுக்காட்ட எதுவும் இல்லை என்பது போல அத்தனை பிடிகளையும் அநாயசமாக அவர் வெளிப்படுத்தியதை பாராட்டியாக வேண்டும். ஓ ரங்கசாயி தான் சாகித்யம். பூலோக வைகுண்டம் என்ற இடத்தில் நிரவல் ஸ்வரம்.
அதோடு கச்சேரியை முடித்துக் கொண்டு விட்டார். இனிமேல் அதிகமாக துக்கடாவெல்லாம் பாடினால் காம்போதி கேட்ட சுகம் போய்விடும் என்று ரசிகர்கள் எழுந்து போய்விடுவார்களோ என்கிற பயம்கூட காரணமாக இருக்கலாம்.
சாகித்ய ஸ்பஷ்டம். சங்கதிகள் அவ்வளவு நேர்த்தியாகவும் அழகாகவும் வந்து விழுந்தன. எல்லாவற்றுக்கும் மேலே பாடாந்தர சுத்தம்.
இப்போதெல்லாம், இளைஞர்கள் பாடும்போது ஒவ்வொரு உருப்படியும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. சிலதில் ஜி.என்.பி. பாணி, சிலதில் செம்மங்குடி பாணி, சிலதில் அரியக்குடி பாணி, சிலதில் மணி அய்யர் பாணி என்று பல்வேறு ரிக்கார்டுகளை கேட்டு அதைப்போல மேடையில் பாடும் முயற்சியில் ஈடுபடுபவர்கள்தான் அதிகம். இல்லாவிட்டாலும்கூட இரண்டு மூன்று குருவிடம் சிûக்ஷ என்பதால் சங்கீதத்தில் கலப்படம் காணப்படுகிறது.
வைத்தியநாதனுக்கு அப்படியொரு பிரச்னையே இல்லை. முழுக்க முழுக்க பி.எஸ். நாராயணஸ்வாமியின் சிஷ்யர், அவரிடம் குருகுலம் செய்தவர் என்பதை அவரது சங்கீதம் வெளிச்சம் போடுகிறது. அதனால்தான் சொன்னேன் பாடாந்தர சுத்தம் என்று!