நாளைய நட்சத்திரம்...
இன்றைய இளைய தலைமுறை கலைஞர்கள் வரிசையில் மிகவும் சிலாகித்து பேசப்படுபவர் ராமகிருஷ்ணமூர்த்தி. ஆஸ்திக சமாஜம் நரசிம்மன், கிருஷ்ணகான சபா செயலர் ய. பிரபு போன்றவர்களால் நாளைய நட்சத்திரம் என்று வர்ணிக்கப்படுபவர்.
இன்றைய இளைய தலைமுறை கலைஞர்கள் வரிசையில் மிகவும் சிலாகித்து பேசப்படுபவர் ராமகிருஷ்ணமூர்த்தி. ஆஸ்திக சமாஜம் நரசிம்மன், கிருஷ்ணகான சபா செயலர் ய. பிரபு போன்றவர்களால் நாளைய நட்சத்திரம் என்று வர்ணிக்கப்படுபவர். இவருடைய கச்சேரியை ஒருமுறை கேட்டால் அடுத்த முறை இவர் எங்கே பாடினாலும் அங்கே ஆஜராகிவிடும் ரசிகர் வட்டம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் படித்து வளர்ந்த ஒருவருக்கு இந்த அளவுக்கு சங்கீத தேர்ச்சி ஏற்பட்டதற்கு காரணம் அவருக்கு அடிப்படை ஏற்படுத்திக் கொடுத்த தில்லி சுந்தரராஜன். போதாக்குறைக்கு வைரமங்கலம் லட்சுமிநாராயணன், செங்கல்பட்டு ரங்கநாதன், சி.ஆர். வைத்தியநாதன் என்று பலரிடம் சிûக்ஷ.
எம். ராஜீவ் வயலின், எம்.எஸ். வரதன் மிருதங்கம். மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் அரங்கத்தில் கடந்த 27.12.13 அன்று மதியம் ஒன்றரை மணி கச்சேரி ராமகிருஷ்ணமூர்த்தியுடையது. மத்தியான நேரத்திலும் அரங்கத்தில் அவரது கச்சேரியைக் கேட்க ரசிகர்கள் கூடியிருந்ததிலிருந்தே எந்த அளவுக்கு அவர் பிரபலம் என்று தெரிந்தது. தைரியமாக அடுத்த சீசனிலிருந்து ராமகிருஷ்ணமூர்த்திக்கு நமது சபாக்கள் சாயங்கால கச்சேரிக்கு புரமோஷன் கொடுக்கலாம்.
சாதாரணமாக முகாரியில் பாடப்படும் சிவகாம சுந்தரி அன்று ராமகிருஷ்ணமூர்த்தியால் ஜகன்மோகினி ராகத்தில் பாடப்பட்டது. தொடர்ந்து மனசுலோனிம (ஹிந்தோளம்), சங்கரிசங்குரு (சாவேரி). ஹிந்தோளத்தில் ஸ்வரம் மட்டும் பாடினார். சாவேரி ஆலாபனை செய்தார்.
Advertisement
அன்றைய நிகழ்ச்சியின் முக்கிய உருப்படி பேகடா. விஸ்தாரமான ராக ஆலாபனை. ராமகிருஷ்ணமூர்த்தியின் ஆலாபனைகளில் அனுபவசாலி கலைஞர்களிடம் காணப்படும் தேர்ச்சி இருந்தது ஆச்சரியப்பட வைத்தது. குரல் அநாயசமாக எல்லா ஸ்தாயிகளிலும் பேசுகிறது. பிருகாக்கள் இயற்கையாக எழுந்து ஓடி வருகின்றனர். வோ காவன சதுரா என்கிற தியாகய்யரின் சாகித்யம். கல்பனா ஸ்வரம் அட்டகாசம். அப்படியொரு மனோதர்மம். ஸ்வரம் பாடி முடிந்தபோது எழுந்து நின்று கரகோஷம் எழுப்பலாம் போலிருந்தது.
தனியாவர்த்தனத்துக்குப் பிறகு ஒரு ஸ்லோகத்தை விருத்தமாகப் பாடி காபி, பெஹாக் இரண்டு ராகங்களில் கண்டு தன்ய நாதே என்கிற பாடலை இசைத்தார். யதுகுல காம்போதியில் ஒரு உருப்படியுடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தார். அடுத்த சில வருடங்களில் ராமகிருஷ்ணமூர்த்தி என்கிற இசைப்புயல் சென்னை சங்கீத சபாக்களில் மையம் கொள்ள இருக்கிறது.