படப்பிடிப்பு அநேகமாக முடிந்துவிட்ட கட்டம். ஓரிரு வெளிப்புறக் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டால் படம் முழுவதும் முடிந்தாற்போலத்தான். அடுத்த நாள் வெளியூரில் நடக்கவிருக்கும் படப்பிடிப்புக்கு என்னை நான் தயார் செய்து கொள்ள முடியாதபடி சோதனையாக காய்ச்சல் வந்து என் உடம்பில் புகுந்து கொண்டது. உடல்நலம் ஓரளவே குறைந்திருந்தாலும் படப்பிடிப்பால் மிகவும் மோசமாகிவிடும் என்று டாக்டர் பயமுறுத்தினார். படம் முடிந்தால் படத்தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என்று எல்லோருமே திருப்தியாக இருக்கும்; என் ஒருத்தியின் ஒத்துழைப்பால் அத்தனை பேருக்கும் மனமகிழ்ச்சி ஏற்படுமேயானால் அதை வீணாகத் தடுப்பானேன்? உடல் நலக் குறை மனபலத்தால் சரியாகிவிடாதா? என்று யோசித்தேன். யோசனையின் முடிவு, படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் தீர்மானமாக இருந்தது.
அம்மாவுக்கு மனதில் சஞ்சலம்தான். இந்தப் பெண்ணை பத்திரமாக அழைத்துச் சென்று வரவேண்டுமே என்று. டாக்டரோ, என் தீர்மானத்தை மாற்ற விரும்பாதவராய் மாத்திரைகளை எழுதிக் கொடுக்க ஆரம்பித்தார். நான் உடல்நலக் குறைவால் படுக்கும்போதெல்லாம் எனக்கு பிடிக்காத ஒரு சமாசாரம் இருக்குமானால் அது மாத்திரை சாப்பிடுவதுதான். டாக்டர் மாத்திரை எழுதிக் கொடுத்ததைப் பார்த்ததும் ‘பகீர்’ என்றது. ‘அம்மா மடியில் கொஞ்ச நேரம் படுத்திருந்தால் போதும், சரியாகி விடுமே டாக்டர்’ என்று சொல்லிப் பார்த்தேன். ஊஹும், டாக்டர் மசியவில்லை.
அம்மாவை வருத்தத்துடன் பார்த்தேன். அம்மா தணிந்த குரலில் என்னிடம், ‘கவலைப்படாதே, டாக்டரிடம் சும்மாவாச்சும் மருந்து வாங்கிக் கொள்ளலாம். சாப்பிட வேண்டாம்’ என்று சொன்னார். எனக்கு ஒரே சந்தோஷம். அப்போதே பாதி உடம்பு குணமாகிவிட்டது போலிருந்தது.
மறுநாள் காரில் புறப்பட்டுச் சென்றோம். நீராகாரம்தான் சாப்பிட்டேன். அம்மா வெந்நீரில் குளுகோஸ் கரைத்துக் கொடுத்தார். அப்படி மூன்று, நான்கு முறை வெந்நீர் சாப்பிட்ட பிறகு, நாவு கசப்பதை உணர்ந்தேன். ‘என்னம்மா நாக்கு கசக்குது; ஜுரம் அதிகமாயிடுச்சோ?’ என்று கேட்டேன்.
அம்மா மெல்ல சிரித்தபடி சொன்னார்: ‘அதெல்லாம் ஒன்றுமில்லை. நேற்றைக்கு பார்த்ததைவிட நீ இன்றைக்கு ரொம்பவும் தெம்பாக இருக்கிறாய். அதோடு நீ சாப்பிட்டது குளூகோஸ் வாட்டர் இல்லை. டாக்டர் கொடுத்த மாத்திரையைப் பொடி பண்ணி வெந்நீரில் கலந்து கொடுத்தேன்!’
மாத்திரை சாப்பிடவே பிடிக்காத என்னை ஏமாற்றி அம்மா மாத்திரை சாபிட வைத்தவிதம் எனக்கு ஓரளவு கோபத்தை வரவழைத்தாலும், என் நன்மைக்காகத்தானே அப்படிச் செய்தார் என்று உண்மையை உணர்ந்தேன். அப்போது ஜுரம் பறந்தோடிவிட்டது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.