ப்ரூஸ்லீ இறந்து விட்டதை நாம் அறிந்திருந்தாலும், ‘ரிட்டர்ன் ஆப் தி ட்ராகன்’ படத்தைப் பார்க்கும் போது, ஏதோ அவர் உயிர் பெற்று எழுந்துவிட்டதைப் போன்ற பிரமையே நமக்கு ஏற்படுகிறது.
அவரது சாய்ந்த நடையும், ஸ்டைலும், புன்முறுவலிடம் பாங்கும் அவர் மீது பாசம் கொள்ள வைக்கிறது. ஒண்டிக்கு ஒண்டியாய் நின்று, சக்கரம் போல நாற்புறமும் சுழன்று ஒவ்வொருவராக அவர் பாய்ந்து தாக்கிடும் கட்டங்கள் வியப்பூட்டுகின்றன. விரல்களை அசைத்து ஏகத்தாளமாக, விரோதிகளை கூப்பிடும் அழகு நமக்கு நல்ல ரசனை, துணிச்சலும், மனோதிடமும், சமயோஜிதமும், அறிவாற்றலும் இணைந்து அவர் தோன்றிடும் ஒவ்வொரு கட்டமும் கண்கொள்ளாக் காட்சிகள், சம்பவங்களையொட்டி அவர் காட்டிடும் சண்டைகள் சாகசமும் வீரமும் ஒருங்கே அமைந்துள்ளன.
‘நஞ்சுக்கோ’ என்ற சண்டை முறை, ப்ரூஸ்லீயினால் தான் உலகமெங்கும் பிரபலாமாயிற்று. இந்த முறையினால் இரண்டு துண்டு மரக்கட்டை அல்லது கயிற்றுடனோ இணைந்து அதைக்கொண்டு எதிராளியைத் திணரவைக்கவோ, அடித்துக் கீழே வீழ்த்தவோ முடிகிறது.
இந்தக் கலையை ஹாலிவுட் நடிகர்கள் ‘நான், நீ’ என முண்டியடித்துக் கொண்டு, லீயைக் குருவாக மதித்து அணுகினர். லீயின் பயிற்சிக் கட்டணம் ஒரு மணிக்கு 150 டாலர்!
‘பிளிட்ஸ் ஆப் ப்யூரி’ என்ற படமே அவரது திரைப் பிரவேசத்திற்கு வழி வகுத்தது. அவர் அடுத்து நடித்த ‘சைனீஸ் கனெக்ஷன்’ படம் சிங்கப்பூரில் திரையிடப்பட்டதும் போக்குவரத்தே ஸ்தம்பித்துவிட்டது!
அவரது அகால மரணத்திற்கு முன் அவர் எடுக்க நினைத்த படத்தின் பெயர் ‘தி கேம் ஆப் தி டெத் தான்! இதையொட்டி நட்ந்த விருந்திற்குப் பின்னரே அவர் மரணமடைந்தாராம். அவரது மரணத்தை அறுதியிட்டு உறுதியாக எவராலும் கூறமுடியவில்லை. சிலர் அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாகக் கூறினர். வேறு சிலர் அவர் அதிகத் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டதினால் இறந்ததாகக் கூறினர். மற்றும் சிலர் செக்ஸ் தான் காரணம் என்றனர்.
ப்ரூஸ்லீயின் பெயரைத் திரையில் டைட்டிலில் காணும் ரசிகர்களின் கரவொலிகள் காதுகளைத் துளைக்கின்றன. பிறகு நேரில் தோன்றியவுடன் ஏற்படும் சந்தோஷ ஆரவாரங்கள் இறுதிவரை நீடிக்கிறது. தானே ஜெயிக்கவேண்டும் என்ற எண்ணமில்லாமல், எதிராளி அமெரிக்க கராத்தே வீரரிடம் அவர் வாங்கிய செம்மையான அடி-உதைகள், ப்ரூஸ்லீயின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.
ப்ரூஸ்லீ இன்று நம்மிடையே இல்லாமலிருந்தாலும், அவரது வீர விளையாட்டுக்கள் திரையில் என்றும் சாகா வரம் பெற்றவை ஆகும்.
-டி.எம்.ஆர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.