முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 25 – ஆசைப் பத்து - 5

சிவபெருமானே, குற்றங்கள் நிறைந்த இந்த உடலை முற்றிலும் நீக்கவேண்டும், சிவபுரமான உன் திருநகருக்கு வரவேண்டும்,

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:09 PM
பகிர்:

இறைவன்மேல் தான் வைத்துள்ள ஆசையை விவரித்துத் தனக்கு அருளுமாறு வேண்டும் பாடல்கள் இவை. பத்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.

158

பாடலின்பம்

செடிஆர்ஆக்கைத் திறம்அற

வீசிச் சிவபுரநகர்புக்குக்

கடிஆர்சோதி கண்டுகொண்டு

என் கண்இணை களிகூரப்

படிதான்இல்லாப் பரம்பரனே,

உன் பழஅடியார்கூட்டம்

அடியேன் காண ஆசைப்பட்டேன்

கண்டாய் அம்மானே.

*

வெஞ்சேல்அனைய கண்ணார்தம்

வெகுளிவலையில் அகப்பட்டு

நைஞ்சேன், நாயேன், ஞானச்சுடரே

நான்ஓர் துணைகாணேன்,

பஞ்சுஏர்அடியாள்பாகத்து

ஒருவா, பவளத்திருவாயால்

அஞ்சேல்என்ன ஆசைப்பட்டேன்

கண்டாய் அம்மானே.

பொருளின்பம்

ஒப்பில்லாத உயர்ந்த இறைவா, அம்மானே,

சிவபெருமானே, குற்றங்கள் நிறைந்த இந்த உடலை முற்றிலும் நீக்கவேண்டும், சிவபுரமான உன் திருநகருக்கு வரவேண்டும், அங்கே தன்னைத்தானே விளக்கும் சோதியான உன்னைக் கண்டுகொள்ளவேண்டும், என்னுடைய கண்கள் மகிழ்ச்சியடையவேண்டும், உன்னுடைய பழைமையான அடியவர்களின் கூட்டத்தைக் காணவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன், அதனை நீ அறிந்து அருள்செய்.

*

ஞானச்சுடரே, செம்பஞ்சுக்குழம்பு தீட்டப்பட்ட திருவடிகளைக்கொண்ட உமையம்மையைத் தன் உடலின் ஒரு பகுதியாகக் கொண்டவனே, ஒப்பற்றவனே, அம்மானே,

விருப்பத்துக்குரிய, மீன்போன்ற கண்களைக்கொண்ட பெண்களின் கோபவலையில் நான் சிக்கிக்கொண்டேன், அதனால் மிகவும் நைந்துபோனேன், நாய்போன்ற எனக்குத் துணையென்று யாரும் இல்லை, சிவபெருமானே, நீ உன் பவளத் திருவாயால் என்னிடம் ‘ யப்படாதே’ என்று சொல்லவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன், அதனை நீ அறிந்து அருள்செய்.

சொல்லின்பம்

செடிஆர்ஆக்கை: துன்பம் நிறைந்த உடல்

புக்கு: புகுந்து

கடிஆர்சோதி: தனக்குத்தானே விளக்கமான சோதி

களிகூர: மகிழ

படிதான்இல்லா: ஒப்பில்லாத

பழஅடியார்: பழைமையான அடியவர்கள்

வெஞ்சேல்அனைய கண்ணார்: விருப்பத்துக்குரிய, மீன்போன்ற கண்களைக்கொண்டவர்கள்

வெகுளி: கோபம்

நைஞ்சேன்: நைந்தேன்

பஞ்சுஏர்அடியாள்: செம்பஞ்சுக்குழம்பு தீட்டப்பட்ட அழகிய திருவடிகளைக் கொண்ட உமையம்மை

ஒருவா: தனித்துவமானவனே

அஞ்சேல்என்ன: பயப்படவேண்டாம் என்று சொல்ல

முழு கட்டுரையைப் படிக்க →