முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 26 – அதிசயப் பத்து - 1

நீதிமுறைகள் என்னென்ன என்று நான் நினைப்பதில்லை, அப்படி நினைப்பவருடன் சேர்வதும் இல்லை, குற்றமுள்ள உயிராக இங்கே பிறந்து, இறந்து உழல்கிறேன்,

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:09 PM
பகிர்:

சிவபெருமானின் திருக்கோலத்தையும் அவர் தனக்கு அருள்செய்த தன்மையையும் எண்ணி வியப்படைந்து மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை, பத்து பாடல்கள்.

159

பாடலின்பம்

வைப்புமாடுஎன்றும் மாணிக்கத்து

ஒளிஎன்றும் மனத்துஇடை உருகாதே

செப்புநேர்முலை மடவரலியர்தங்கள்

திறத்துஇடை நைவேனை

ஒப்புஇலாதன உவமனில்இறந்தன

ஒண்மலர்த் திருப்பாதத்(து)

அப்பன் ஆண்டு தன் அடியரில்

கூட்டிய அதிசயம் கண்டோமே.

*

நீதிஆவன யாவையும்

நினைக்கிலேன், நினைப்பவரொடும்கூடேன்,

ஏதமேபிறந்து,இறந்து உழல்வேன்தனை

என் அடியான்என்று

பாதிமாதொடும் கூடிய

பரம்பரன், நிரந்தரமாய் நின்ற

ஆதி ஆண்டு தன் அடியரில்

கூட்டிய அதிசயம் கண்டோமே.

பொருளின்பம்

எம்பெருமானைச் 'சேமித்துவைத்த செல்வம்' என்றும், 'மாணிக்கத்திலிருந்து வீசுகிற ஒளி' என்றும் பலவிதமாகச் சொல்லி மனம் உருகவேண்டும், அப்படிச் செய்யாமல், சிமிழ்போன்ற மார்பகங்களைக் கொண்ட பெண்களுடைய அழகைக் கண்டு வியந்து நின்றேன், அதனால் நலிந்துபோனேன்,

ஒப்பற்ற, உவமை இல்லாத, ஒளி நிறைந்த மலர்த் திருவடிகளைக் கொண்ட என் அப்பன், சிவபெருமான் என்னையும் மன்னித்து ஏற்றுக்கொண்டான், தன்னுடைய அடியவர்களில் ஒருவனாக ஆக்கினான், இது அதிசயமல்லவா!

*

நீதிமுறைகள் என்னென்ன என்று நான் நினைப்பதில்லை, அப்படி நினைப்பவருடன் சேர்வதும் இல்லை, குற்றமுள்ள உயிராக இங்கே பிறந்து, இறந்து உழல்கிறேன்,

தன் உடலில் ஒருபாதியை உமையம்மைக்குத் தந்த அந்த உயர்ந்த பெருமான், என்றைக்கும் நிரந்தரமாகத் திகழும் முதல்வன், சிவபெருமான் என்னை மன்னித்து  ‘என் அடியான்’ என்றான், தன்னுடைய அடியவர்களில் ஒருவனாக ஆக்கினான், இது அதிசயமல்லவா!

சொல்லின்பம்

வைப்புமாடு: வைப்புநிதி/ சேமித்துவைத்த செல்வம்

செப்பு: சிமிழ்

மடவரலியர்: பெண்கள்

திறம்: அழகு

நைவேனை: நலிந்துபோனவனை

உவமனில்இறந்தன: உவமை இல்லாதவை

ஒண்மலர்த் திருப்பாதத்து: ஒளிநிறைந்த மலர்களைப்போன்ற மென்மையான திருவடிகள்/ சிவபெருமானின் திருவடிகள்

ஏதம்: குற்றம்

உழல்வேன்: திரிவேன்

பரம்பரன்: உயர்ந்த பெருமான்

ஆதி: முதல்வன்

முழு கட்டுரையைப் படிக்க →