முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 26 – அதிசயப் பத்து - 5

வினையினால் உண்டானது இந்த உடல், இதில் பொருந்துகிற மெய்ப்பொருள் எப்படிப்பட்டது என்றால்,

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:09 PM
பகிர்:

சிவபெருமானின் திருக்கோலத்தையும் அவர் தனக்கு அருள்செய்த தன்மையையும் எண்ணி வியப்படைந்து மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை, பத்து பாடல்கள்.

163

பாடலின்பம்

உற்ற ஆக்கையின் உறுபொருள்

நறுமலர் எழுதரு நாற்றம்போல்

பற்றல்ஆவதுஓர் நிலைஇலாப்

பரம்பொருள் அப்பொருள் பாராதே

பெற்றவா பெற்ற பயன்அது

நுகர்ந்திடும் பித்தர்சொல் தெளியாமே

அத்தன் ஆண்டு தன் அடியரில்

கூட்டிய அதிசயம் கண்டோமே.

*

இருள்திணிந்துஎழுந்திட்டதுஓர்

வல்வினைச் சிறுகுடில் இது,இத்தைப்

பொருள்எனக்களித்து அருநரகத்துஇடை

விழப்புகுகின்றேனைத்

தெருளும் மும்மதில் நொடிவரை

இடிதரச் சினப்பதத்தொடு செந்தீ

அருளும் மெய்ந்நெறி, பொய்ந்நெறி

நீக்கிய அதிசயம் கண்டோமே.

பொருளின்பம்

வினையினால் உண்டானது இந்த உடல், இதில் பொருந்துகிற மெய்ப்பொருள் எப்படிப்பட்டது என்றால், நல்ல மலரிலே மணம் சேர்ந்திருப்பதைப்போல நாம் பற்றிக்கொள்ளக்கூடியது, அந்தப் பரம்பொருளின் தன்மை இத்தகையது என்று யாராலும் சொல்ல இயலாது,

இந்த விஷயத்தை உணராத சிலர், உலகவாழ்க்கையில் கிடைத்த இன்பங்கள்தான் பெரியவை என்று எண்ணி அவற்றை அனுபவித்துக்கொண்டிருப்பார்கள், அந்தப் பித்தர்களின் சொல்லை நான் நம்பிவிடாதபடி என் தந்தை, சிவபெருமான் என்னை ஆட்கொண்டான், தன்னுடைய அடியவர்களில் ஒருவனாக ஆக்கினான், இது அதிசயமல்லவா!

*

இந்த உடல், அறியாமை என்கிற இருளைத் திணித்துத் தீயவினைகளால் உருவாக்கிய சிறியகுடில். இதை ஒரு பெரிய விஷயம் என்று நினைத்து, மகிழ்ந்து, கொடுமையான நரகத்தில் விழச் சென்றுகொண்டிருக்கிறேன்,

கோபத்தோடு சிவந்த நெருப்பைத் தந்து, எல்லாரும் தெளிவாகக் காண்கின்ற முப்புரங்களையும் நொடிப்பொழுதில் அழித்தவன், உண்மையான நெறியாகத் திகழ்கிறவன், சிவபெருமான் என்னிடமிருந்த பொய்ந்நெறிகளை நீக்கினான், இது அதிசயமல்லவா!

சொல்லின்பம்

ஆக்கை: உடல்

நாற்றம்: மணம்

பெற்றவா: பெற்றவற்றை

அத்தன்: தந்தை

இத்தை: இதை

தெருளும்: தெளிவாகத் தெரியும்

மெய்ந்நெறி: உண்மைநெறி/ சிவபெருமான்

முழு கட்டுரையைப் படிக்க →