முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 27 – புணர்ச்சிப் பத்து - 4

தன்னை நெஞ்சில் நினைத்துப் பார்க்கக்கூட இயலாதபடி பிறருக்கு அரியவனாகத் திகழ்கிறவனை, நெருப்பாக, நீராக, காற்றாக, நிலமாக,

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:09 PM
பகிர்:

புணர்ச்சி என்றால் சேர்தல் என்று பொருள். திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானிடம் சேர வேண்டும் என்று விரும்பிப் பாடிய பாடல்கள் இவை.

பத்து பாடல்களைக் கொண்ட தொகுப்பு இது.

167

பாடலின்பம்

நினையப் பிறருக்குஅரிய நெருப்பை,

நீரை,காலை,நிலன்,விசும்பைத்

தனைஒப்பாரைஇல்லாத் தனியை

நோக்கித் தழைத்துத் தழுத்தகண்டம்

கனையக் கண்ணீர் அருவிபாயக்

கையும் கூப்பிக் கடிமலரால்

புனையப்பெறுவதுஎன்றுகொல்லோ என்

பொல்லா மணியைப் புணர்ந்தே.

*

நெக்குநெக்குஉள் உருகிஉருகி

நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும்

நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி

நானாவிதத்தால் கூத்தும்நவிற்றிச்

செக்கர்போலும் திருமேனிதிகழ

நோக்கிச் சிலிர்சிலிர்த்துப்

புக்குநிற்பதுஎன்றுகொல்லோ என்

பொல்லா மணியைப் புணர்ந்தே.

பொருளின்பம்

தன்னை நெஞ்சில் நினைத்துப் பார்க்கக்கூட இயலாதபடி பிறருக்கு அரியவனாகத் திகழ்கிறவனை, நெருப்பாக, நீராக, காற்றாக, நிலமாக, வானமாகத் திகழ்கிறவனை, தனக்கு ஒப்பாக எவரும் இல்லாத தனித்துவமானவனைப் பார்க்க வேண்டும், மகிழ வேண்டும், தொண்டை தழுதழுக்க அவனை அழைத்துப் பாட வேண்டும், கண்ணீர் அருவியாகப் பாய வேண்டும், கை கூப்பி, மணம் நிறைந்த மலர்களால் அந்தச் சிவபெருமானை அலங்கரிக்க வேண்டும், இவ்வாறு அந்தத் துளையில்லாத மாணிக்கத்தை நான் சேர்கின்ற நாள் எப்போது?

*

உள்ளம் நெகிழ்ந்து, உள்ளே உருகி, நின்றுகொண்டும், இருந்தும், கிடந்தும், எழுந்தும், சிரித்தும், அழுதும், தொழுதும் அவனை வாழ்த்தி, பலவிதமாகக் கூத்தாடி, செவ்வானம் போன்ற அவனது திருமேனியைக் கண்டு சிலிர்த்து, அந்தச் சிவபெருமானின் திருக்கோயிலினுள் புகுந்து நிற்பது எப்போது? அந்தத் துளையில்லாத மாணிக்கத்தை நான் சேர்கின்ற நாள் எப்போது?

சொல்லின்பம்

நினைய: நினைக்க

காலை: காற்றை

நிலன்: நிலம்

விசும்பை: வானத்தை

தழைத்து: மகிழ்ந்து

தழுத்தகண்டம்: தழுதழுத்த தொண்டை

கனைய: ஒலி எழுப்ப

கடிமலரால்: மணம் நிறைந்த மலர்களால்

புனையப்பெறுவது: அலங்கரிப்பது

பொல்லா மணி: துளையில்லாத மாணிக்கம்

நெக்கு: நெகிழ்ந்து

நக்கும்: சிரித்தும்

நானாவிதத்தால்: பலவிதமாக

நவிற்றி: செய்து

செக்கர்போலும்: செவ்வானம்போல

புக்குநிற்பது: புகுந்துநிற்பது

முழு கட்டுரையைப் படிக்க →