முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 18 – குயில் பத்து - 3

மரக்கிளையில் அமர்ந்து பாடுகிற குயிலே, நான் சொல்வதைக் கேட்டால் உனக்கு இன்பம் பிறக்கும்,

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:08 PM
பகிர்:

ஒரு பெண் சிவபெருமானைத் தன் தலைவனாக எண்ணுகிறாள். அவரைக் காண இயலவில்லையே என்ற ஏக்கத்தால் குயிலிடம் பேசுகிறாள்.  ‘அவர் இங்கே வர வேண்டும். அதற்காக நீ கூவு’ என்கிறாள்.

இந்தப் பகுதியில் பத்து பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.

121

பாடலின்பம்

சுந்தரத்து இன்பக் குயிலே, சூழ்கடல் ஞாயிறுபோல

அந்தரத்தே நின்றுஇழிந்துஇங்கு அடியவர் ஆசை அறுப்பான்

முந்தும் நடுவும் முடிவும் ஆகிய, மூவர் அறியாச்

சிந்துரச் சேவடியானை, சேவகனை வரக் கூவாய்.

*

இன்பம் தருவன் குயிலே, ஏழு உலகும் முழுது ஆளி,

அன்பன், அமுது அளித்து ஊறும் ஆனந்தன், வான்வந்த தேவன்,

நல்பொன் மணிச்சுவடு ஒத்த நற்பரிமேல் வருவானைக்

கொம்பின் மிழற்றும் குயிலே, கோகழிநாதனைக் கூவாய்.

பொருளின்பம்

அழகான இன்ப கீதம் பாடும் குயிலே,

சுடராக இந்த உலகைச் சூழ்ந்திருக்கும் சூரியனைப்போல, சிவபெருமான் விண்ணில் இருந்து இங்கே வந்தான், அடியவர்களின் ஆசையை அறுத்தான், முதலாக, நடுவாக, முடிவாகத் திகழ்கிறவன் அவன், பிரம்மன், திருமால், உருத்திரன் என்ற மூவராலும் அவனை அறிய இயலவில்லை, சிந்துர வண்ணம் கொண்ட திருவடிகளைக் கொண்ட அந்த வீரன் இங்கே வரவேண்டும் என்று நீ கூவு.

*

மரக்கிளையில் அமர்ந்து பாடுகிற குயிலே, நான் சொல்வதைக் கேட்டால் உனக்கு இன்பம் பிறக்கும்,

இந்த ஏழு உலகங்களையும் முழுமையாக ஆள்கிறவன், எல்லார்மீதும் அன்புடையவன், சிவஞானமாகிய அமுதத்தை அனைவருக்கும் அளிக்கிறவன், மனத்தில் ஆனந்த வெள்ளமாகப் பெருகுகிறவன், விண்ணிலிருந்து இங்கே வந்த தேவன், நல்ல பொன்போல அழகான புள்ளிகளைக் கொண்ட நல்ல குதிரையின்மீது ஏறி வருகிறவன், திருக்கோகழியில் எழுந்தருளியிருப்பவன், அவன் இங்கே வரவேண்டும் என்று நீ கூவு.

சொல்லின்பம்

சுந்தரம்: அழகு

ஞாயிறு: சூரியன்

அந்தரம்: வானம்

இழிந்து: இறங்கி

முந்தும்: முதலும்

மூவர்: பிரம்மா, திருமால், உருத்திரன்

சிந்துரம்: சிவப்பு

சேவகன்: வீரன்

ஆளி: ஆள்பவன்

சுவடு: குதிரையின் உடலில் உள்ள புள்ளிகள்

பரி: குதிரை

கொம்பு: கிளை

மிழற்றும்: கூவும்

நாதனை: தலைவனை

முழு கட்டுரையைப் படிக்க →