முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 19 – திருத்தசாங்கம் - 5

உருக்கத்துடன் வழிபடுகின்ற பக்தர்கள் உள்ளத்தில் தங்கியிருக்கும் திருப்பெருந்துறையான், சிவபெருமானின் மாலை எது என்று நீ சொல்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:08 PM
பகிர்:

தச+அங்கம்=தசாங்கம், அதாவது, பத்து பகுதிகள் / பத்து உறுப்புகளைப் பற்றிப் பாடுவது. ஓர் அரசனின் நாடு, ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார், கொடி என்கிற பத்து உறுப்புகளைப் பெருமைப்படுத்திப் பாடும் பாடல்களின் தொகுப்பு தசாங்கம் எனப்படும். உலகின் அரசனாகிய இறைவனையும் இவ்வகையில் பாடி வணங்கலாம். இங்கே சிவபெருமானின் சிறப்பு பாடப்பட்டுள்ளதால், இதனைத்  ‘திருத்தசாங்கம்’ என்று அழைக்கிறோம்.

இதில் பத்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பாடலைப் பாடும் தலைவி (அதாவது, மாணிக்கவாசகர்) ஒரு கிளியிடம் பேசுவதுபோல் இவை அமைந்துள்ளன. இவை நேரிசை வெண்பா வகையைச் சேர்ந்தவை. தில்லையில் அருளப்பட்டவை.

128

பாடலின்பம்

ஆயமொழிக் கிள்ளாய், அள்ளூறும் அன்பர்பால்

மேய பெருந்துறையான் மெய்த்தார்என்? தீயவினை

நாளும் அணுகாவண்ணம் நாயேனை ஆளுடையான்

தாளி, அறுகாம் உவந்த தார்.

*

சோலைப் பசுங்கிளியே, தூநீர்ப் பெருந்துறைக்கோன்

கோலம் பொலியும் கொடிகூறாய், சாலவும்

ஏதிலார் துண்என்ன மேல்விளங்கி ஏர்காட்டும்

கோதுஇலா ஏறாம் கொடி.

பொருளின்பம்

சிவபெருமானின் மாலை:

சொற்களை ஆராய்ந்து பேசுகிற கிளியே,

உருக்கத்துடன் வழிபடுகின்ற பக்தர்கள் உள்ளத்தில் தங்கியிருக்கும் திருப்பெருந்துறையான், சிவபெருமானின் மாலை எது என்று நீ சொல்.

தீயவினைகள் ஒருநாளும் என்னை அணுகாதபடி காத்தவன், நாய்போன்ற என்னை ஆட்கொண்டவனுடைய விருப்பத்துக்குரிய மாலை, தாளியும் அறுகும் என்று நீ சொல்.

*

சிவபெருமானின் கொடி:

சோலையில் வாழும் பசுங்கிளியே,

தூய்மையான தன்மையைக் கொண்டவன், திருப்பெருந்துறையின் தலைவன், அந்தச் சிவபெருமானின் அழகிய கொடி எது என்று நீ சொல்.

பகைவர்கள் எல்லாரும் பார்த்தவுடன் நடுங்கும்படி அவருக்கு மேலே அழகாக விளங்கும் குற்றமில்லாத இடபக்கொடிதான் சிவபெருமானின் கொடி என்று நீ சொல்.

சொல்லின்பம்

ஆயமொழி: ஆராய்ந்த சொற்கள்

கிள்ளாய்: கிளியே

அள்ளூறும்: உள்ளம் உருகும்

மேய: விளங்குகிற/ பொருந்துகிற

தார்: மாலை

உவந்த: மகிழ்ந்த

தூநீர்: தூய்மைத்தன்மை

கோன்: தலைவன்

கோலம்: அழகு

சாலவும்: மிகவும்

ஏதிலார்: பகைவர்கள்

துண்என்ன: திடுக்கிட

ஏர்: அழகு

கோதுஇலா: குற்றமில்லாத

ஏறு: இடபம்/ காளை

முழு கட்டுரையைப் படிக்க →