முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 20 – திருப்பள்ளியெழுச்சி - 5

விண்ணில் வாழும் தேவர்களாலும் நெருங்க இயலாத சிறப்பைக் கொண்டவனே,

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:09 PM
பகிர்:

பள்ளி என்ற சொல்லின் பொருள், படுக்கை என்பது. துயின்றுகொண்டிருக்கும் இறைவனை விழித்தெழுமாறு வேண்டிப் பாடும் பாடல்கள் இவை.

இந்தப் பகுதியில் பத்து பாடல்கள் உள்ளன.

இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.


133

பாடலின்பம்

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா

விழுப்பொருளே, உன தொழும்பு அடியோங்கள்

மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே,

வண் திருப்பெருந்துறைஉறையாய், வழிஅடியோம்

கண்அகத்தே நின்று களிதரு தேனே,

கடல்அமுதே, கரும்பே, விரும்புஅடியார்

எண்அகத்தாய், உலகுக்கு உயிர்ஆனாய்,

எம்பெருமான், பள்ளிஎழுந்தருளாயே.

*

புவனியில்போய்ப் பிறவாமையின் நாள் நாம்

போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி

சிவன் உய்யக் கொள்கின்றஆறுஎன்று நோக்கி,

திருப்பெருந்துறைஉறைவாய், திருமாலாம்

அவன் விருப்புஎய்தவும் மலர்அவன் ஆசைப்

படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்

அவனியில் புகுந்துஎமை ஆட்கொளவல்லாய்,

ஆரமுதே, பள்ளிஎழுந்தருள்வாய்.

பொருளின்பம்

எம்பெருமானே,

விண்ணில் வாழும் தேவர்களாலும் நெருங்க இயலாத சிறப்பைக் கொண்டவனே,

உன்னுடைய அடியவர்களாகிய எங்களை மண்ணில் வந்து வாழச்செய்தவனே, வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவனே, சிவபெருமானே, உன் வழியில் வரும் அடியவர்களாகிய எங்கள் கண்ணில் நின்று ஆனந்தத்தைத் தருகிற தேனே, கடலில் பிறந்த அமுதம்போன்றவனே, கரும்பே, விரும்பும் அடியவர்களின் எண்ணத்தில் உறைபவனே, உலகுக்கு உயிர் ஆனவனே, பள்ளிஎழுந்தருள்வாய்.

*

அரிய அமுதமே,

திருமாலும் பிரம்மனும் மண்ணில் பிறக்க விரும்புகிறார்கள், ‘இந்தப் பூமியில்தான் சிவபெருமான் தன் அருளை வழங்குகிறார், அங்கே சென்று நாம் பிறக்காமல், இங்கே விண்ணுலகில் வீணாக நாளைக் கழிக்கிறோமே’ என்று எண்ணுகிறார்கள்.

திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் பெருமானே, அவர்கள் அப்படி இங்கே பிறக்க விரும்பும்படி உன் விரிவான மெய்க்கருணையுடன் இங்கே வந்து இந்தப் பூமியைப் புனிதமாக்கியவனே, எங்களை ஆட்கொள்ள வல்லவனே, பள்ளிஎழுந்தருள்வாய்.

சொல்லின்பம்

நண்ண: நெருங்க

மாட்டா: இயலாத

விழுப்பொருளே: சிறந்த பொருளே

தொழும்பு அடியோங்கள்: பணிவிடை செய்யும் அடியவர்கள்

வண்: வளம் நிறைந்த

திருப்பெருந்துறைஉறையாய்: திருப்பெருந்துறையில் வசிப்பவனே

அகத்தே: உள்ளே

களி: ஆனந்தம்

விரும்பு அடியார்: விரும்பும் அடியவர்கள்

எண் அகத்தாய்: எண்ணத்தில் உள்ளவனே

புவனி: உலகம்

அவமே: வீணாக

உய்ய: பிழைக்க

ஆறு: வழி

மலர்அவன்: மலர்மீது தவம் செய்யும் பிரம்மன்

அலர்ந்த: அகன்ற

அவனி: உலகம்

ஆரமுதே: அரிய அமுதமே

முழு கட்டுரையைப் படிக்க →