பகுதி 21 – கோயில் மூத்த திருப்பதிகம் - 2
அன்பு கொண்ட அடிமைகளுக்கு மகிழ்வுடன் அருள் செய்பவனே, சிவபெருமானே,
‘பதிகம்’ என்றால் பத்து பாடல்கள், ‘கோயில்’ என்றால் தில்லை. தில்லையில் அருளப்பட்ட பத்து பாடல்கள் இந்தப் பகுதியில் அமைந்துள்ளன.
இவை அந்தாதிப் பாடல்களாகவும் உள்ளன. அதாவது, முதல் பாடலின் நிறைவுச் சொல் அடுத்த பாடலின் முதல் சொல்லாக வரும்.
135
பாடலின்பம்
உகந்தானே அன்புஉடை அடிமைக்(கு),
உருகா உள்ளத்து உணர்வுஇலியேன்
சகம்தான் அறிய முறையிட்டால்
தக்கவாறு அன்று என்னாரோ,
மகம்தான் செய்து வழிவந்தார்
வாழ வாழ்ந்தாய், அடியேற்குஉன்
முகம்தான் தாராவிடில் முடிவேன்,
பொன்னம்பலத்து எம் முழுமுதலே.
*
முழுமுதலே ஐம்புலனுக்கும்,
மூவருக்கும் என்தனக்கும்
வழிமுதலே, நின் பழஅடி
யார்திரள் வான் குழுமிக்
கெழுமுதலே அருள் தந்திருக்க
இரங்கும்கொல்லோ என்று
அழும்அதுவேஅன்றி மற்றுஎன்
செய்கேன் பொன்னம்பலத்து அரசே.
பொருளின்பம்
பொன்னம்பலத்தில் நடனம் புரியும் எங்கள் முழுமுதலே,
அன்பு கொண்ட அடிமைகளுக்கு மகிழ்வுடன் அருள் செய்பவனே, சிவபெருமானே,
நானோ உன்னை எண்ணி உருகாத உள்ளத்தைக் கொண்டவன், பக்தி உணர்வு இல்லாதவன், ஆகவே, எனக்கு அருள்செய் என்று இந்த உலகம் அறியும்படி உன்னிடம் வந்து முறையிடுகிறேன், உன்னைப் பெற இது சரியான வழி அல்ல என்று இவர்கள் சொல்வார்களோ?
யாகங்கள் செய்து உன்னை வழிபட்டவர்களை வாழச்செய்து, அவர்கள் உள்ளங்களில் வாழ்பவனே, எனக்கு உன்னுடைய திருமுகத்தைக் காட்டு, இல்லாவிட்டால் நான் அழிந்துவிடுவேன்.
*
பொன்னம்பலத்தில் நடனம் புரியும் அரசே, முழுமுதலே, ஐம்புலன்களுக்கும், மூன்று தேவர்களுக்கும் எனக்கும் வழிகாட்டும் முதற்பொருளே, பழமையான அடியவர்கள் கூட்டத்திற்கு அருள் செய்யும் பெருமானே,
நீ எனக்கு அருள் செய்யமாட்டாயா என்று எண்ணி ஏங்கி அழுகிறேன், இதைத்தவிர என்னால் வேறு என்ன செய்ய இயலும்? சிவபெருமானே, அருள்செய்.
சொல்லின்பம்
உகந்தானே: மகிழ்பவனே
உணர்வுஇலியேன்: உணர்வு இல்லாதவன்
சகம்: உலகம்
தக்கவாறு: சரியான வழி
மகம்: யாகம்
வழிமுதலே: வழிகாட்டும் முதற்பொருளே
பழ அடியார்: பழைய அடியவர்கள்
வான்: சிறந்த
கெழுமுதலே: சேர்ந்திருப்பவனே