முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 21 – கோயில் மூத்த திருப்பதிகம் - 4

பொன்னம்பலத்தில் கூத்தாடும் பெருமான் என்மீது இரக்கம் காட்டுவான் என்று எண்ணி எண்ணி ஏமாந்தேன், அப்போது, எனக்கு ஓர் அரிய கற்பனையைக் காண்பித்து ஆட்கொண்டாய்,

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:09 PM
பகிர்:

‘பதிகம்’  என்றால் பத்து பாடல்கள்,  ‘கோயில்’  என்றால் தில்லை. தில்லையில் அருளப்பட்ட பத்து பாடல்கள் இந்தப் பகுதியில் அமைந்துள்ளன.

இவை அந்தாதிப் பாடல்களாகவும் உள்ளன. அதாவது, முதல் பாடலின் நிறைவுச் சொல் அடுத்த பாடலின் முதல் சொல்லாக வரும்.

137

பாடலின்பம்

இரங்கும் நமக்கு அம்பலக்கூத்தன்

என்றுஎன்று ஏமாந்துஇருப்பேனை

அரும்கற்பனை கற்பித்துஆண்டாய்,

ஆள்வார்இலி மாடு ஆவேனோ,

நெருங்கும் அடியார்களும் நீயும்

நின்று நிலாவி விளையாடும்

மருங்கே சார்ந்து வர எங்கள்

வாழ்வே, வா என்று அருளாயே.

*

அருளாதுஒழிந்தால் அடியேனை

அஞ்சேல் என்பார் ஆர்இங்கு?

பொருளா என்னைப் புகுந்துஆண்ட

பொன்னே, பொன்னம்பலக்கூத்தா,

மருளா மனத்தோடு உனைப் பிரிந்து

வருந்துவேனை வா என்றுஉன்

தெருளார் கூட்டம் காட்டாயேல்

செத்தேபோனால் சிரியாரோ?

பொருளின்பம்

பொன்னம்பலத்தில் கூத்தாடும் பெருமான் என்மீது இரக்கம் காட்டுவான் என்று எண்ணி எண்ணி ஏமாந்தேன், அப்போது, எனக்கு ஓர் அரிய கற்பனையைக் காண்பித்து ஆட்கொண்டாய்,

பெருமானே, நீ என்னைக் கைவிட்டால், நான் மேய்க்க யாரும் இல்லாத மாடுபோல் ஆகிவிடுவேன், நெருங்கி வரும் அடியவர்களுடன் சிவபெருமானான நீயும் நின்று நிலாவி விளையாடுகின்ற இடத்தில் நானும் இருக்கவேண்டும்,

எங்கள் வாழ்வே, ‘வா’ என்று என்னை அங்கே அழைத்து அருள்செய்.

*

பெருமானே, நீ எனக்கு அருள் செய்யாவிட்டால் வேறு யார் எனக்கு உதவுவார்கள்? ‘பயப்படாதே’  என்று சொல்லி என் அச்சத்தைப் போக்குகிறவர்கள் இங்கே வேறு யார்?

என்னையும் ஒரு பொருளாகக் கருதி எனக்குள் புகுந்து ஆட்சிசெய்யும் பொன்னே, பொன்னம்பலத்தில் ஆடும் கூத்தனே, சிவபெருமானே, நான் எதையோ எண்ணி மயக்கத்தில் திரிகிறேன், உன்னைப் பிரிந்து வருந்துகிறேன், என்னை  ‘வா’  என்று அழைத்துக்கொள், தெளிவடைந்த உன் அடியவர்களின் கூட்டத்தைக் காட்டி அங்கே என்னைச் சேர்த்துக்கொள், இல்லையென்றால் நான் செத்தேபோவேன், அப்போது எல்லாரும் என்னைக் கண்டு சிரிப்பார்கள், அவ்வாறு நிகழாமல் அருள்செய்.

சொல்லின்பம்

இரங்கும்: (சிவபெருமான்) இரக்கம் காட்டுவார்

ஆள்வார்இலி மாடு: மேய்க்க யாரும் இல்லாத மாடு

மருங்கே: பக்கத்தில்

அஞ்சேல்: பயப்படாதே

பொருளா: பொருளாக

மருளா: மயங்குகிற

தெருளார்: தெளிவானவர்கள்/ சிவனடியார்கள்

முழு கட்டுரையைப் படிக்க →