பகுதி 14 – திருவுந்தியார் - 4
முன்பு, கலைமகளின் மூக்கு, நான்முகனின் தலை ஆகியவை அறுபட்டன, சந்திரனின் முகம் தேய்க்கப்பட்டது
உந்தி என்பது, பழந்தமிழர் விளையாட்டுகளில் ஒன்று. ஓரிருவரோ, பலரோ பந்தை உந்தச்செய்து விளையாடுவார்கள். அதனால் ‘உந்தி’ என்று பெயர் வந்தது. அந்த விளையாட்டில் சிவபெருமானின் பெருமைகளைச் சொல்லும்வண்ணம் அமைத்திருக்கிறார் மாணிக்கவாசகர்.
இந்தப் பகுதியில் இருபது பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.
96
பாடலின்பம்
நாமகள் நாசி, சிரம் பிரமன் படச்
சோமன் முகன் நெரித்து உந்தீபற,
தொல்லை வினை கெட உந்தீபற.
*
நான்மறையோனும் மகத்து இயமான்படப்
போம்வழி தேடுமாறு உந்தீபற,
புரந்தரன் வேள்வியில் உந்தீபற.
*
சூரியனார் தொண்டை வாயினில் பற்களை
வாரி நெரித்தவாறு உந்தீபற,
மயங்கிற்று வேள்வி என்று உந்தீபற.
*
தக்கனார் அன்றே தலைஇழந்தார், தக்கன்
மக்களைச் சூழ நின்று உந்தீபற,
மடிந்தது வேள்விஎன்று உந்தீபற.
பொருளின்பம்
முன்பு, கலைமகளின் மூக்கு, நான்முகனின் தலை ஆகியவை அறுபட்டன, சந்திரனின் முகம் தேய்க்கப்பட்டது, இவற்றைச் சொல்லி, சிவபெருமான் அருளால் நம்முடைய பழைய வினைகள் அறுந்துவிடவேண்டும் என்று பாடி உந்தீபற.
*
தக்கனுடைய வேள்வியில் கலந்துகொண்ட பிரம்மனும், அந்த வேள்வியை நடத்திய தக்கனும் வீழ்ந்தார்கள், இந்திரனோ தப்பும் வழியைத் தேடி அலைந்தான், அதனைப் பாடி உந்தீபற.
*
சூரியனின் கொவ்வைக்கனி போன்ற வாயிலிருந்த பற்களையெல்லாம் சிவபெருமான் உதிர்த்தார், வேள்வியில் கலந்துகொண்ட எல்லாரும் நடுங்கினார்கள், அதனைப் பாடி உந்தீபற.
*
தக்கன் அருகே அவனுடைய மக்களெல்லாம் இருந்தார்கள், ஆனாலும், பிழை செய்த தக்கன் தலையை இழந்தான், வேள்வியும் அழிந்தது, அதைப் பாடி உந்தீபற.
சொல்லின்பம்
நாமகள்: கலைமகள்
நாசி: மூக்கு
சிரம்: தலை
சோமன்: சந்திரன்
முகன்: முகம்
நெரித்து: தேய்த்து அழித்து
தொல்லை: பழைய
மறை: வேதம்
மகத்து: யாகத்து
இயமான்: எஜமான்/ உரிமையாளன்/ யாகத்தை நடத்தியவன்
போம்வழி: போகும் வழி
தேடுமாறு: தேடும் தன்மை
புரந்தரன்: இந்திரன்
தொண்டை: கொவ்வைக்கனி