முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 15 – திருத்தோணோக்கம் 2

மங்கலப் பொருள்களைக் கொண்டு சிவபெருமானுக்குப் பக்தர்கள் பூஜை செய்வார்கள்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:08 PM
பகிர்:

தோளைப் பார்த்துப் பாடுவது தோள்நோக்கம், அல்லது, தோணோக்கம், இரு தோழியர் ஒருவர் தோளை ஒருவர் பார்த்துப் பாடியபடி விளையாடுவது, அல்லது, வெற்றியடைந்த மன்னன் ஒருவனுடைய வீரத்தோளைப் பார்த்துப் பிறர் பாடுவதைத் தோணோக்கம் என்பார்கள். அவ்வகையில் சிவபெருமானின் பெருமைகளை மாணிக்கவாசகர் பாடியுள்ளார்.

இப்பகுதியில் பதினான்கு பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.

99

பாடலின்பம்

பொருள்பற்றிச் செய்கின்ற பூசனைகள்போல் விளங்கச்

செருப்புஉற்ற சீர்அடி, வாய்க்கலசம், ஊன்அமுதம்

விருப்புஉற்று வேடனார் சேடுஅறிய மெய்குளிர்ந்துஅங்(கு)

அருள்பெற்று நின்றவா தோள்நோக்கம் ஆடாமோ.

*

கல்போலும் நெஞ்சம் கசிந்துஉருகக் கருணையினால்

நிற்பானைப்போல என் நெஞ்சின்உள்ளே புகுந்துஅருளி

நல்பால்படுத்து என்னை நாடுஅறியத் தான்இங்ஙன்

சொல்பாலது ஆனவா தோள்நோக்கம் ஆடாமோ.

பொருளின்பம்

மங்கலப் பொருள்களைக் கொண்டு சிவபெருமானுக்குப் பக்தர்கள் பூஜை செய்வார்கள். ஆனால், கண்ணப்பர் என்ற வேடர் செருப்பு அணிந்த கால்களாலும், வாயில் நீரை நிரப்பி அதையே கலசமாகக் கொண்டும், மாமிசத்தைப் படைத்தும் இறைவனை விருப்பத்தோடு வழிபட்டார்.

பிறர் மங்கலப் பொருள்களைக் கொண்டு செய்கின்ற பூசனைகளைப்போலவே சிவபெருமான் கண்ணப்பரின் வழிபாட்டையும் ஏற்றுக்கொண்டார், மேனி குளிர்ந்தார், கண்ணப்பரின் பெருமையை உலகம் அறியுமாறு அவருக்கு அருள் செய்தார், அந்தத் தன்மையைப் பாடி நாம் தோள்நோக்கம் ஆடுவோம்.

*

கல்போன்ற என்னுடைய நெஞ்சம் கசிந்து உருகும்படி செய்தான் சிவபெருமான், கருணை வடிவமாக என் நெஞ்சினுள் புகுந்து அருளினான், என்னை நல்ல வழியில் செலுத்தினான், அவன் புகழை நாடு அறியும்படி என்னைப் பாடச்செய்தான், என்னுடைய சொற்களில் வந்து நிற்கிறான், அந்தத் தன்மையைப் பாடி நாம் தோள்நோக்கம் ஆடுவோம்.

சொல்லின்பம்

பூசனைகள்: பூஜைகள்

சீர்: சிறப்பு

ஊன்: மாமிசம்

சேடு: பெருமை

மெய்: உடல்

நின்றவா: நின்ற தன்மை

நற்பால்படுத்து: நல்ல வழியில் செலுத்தி

இங்ஙன்: இங்கே/ இவ்வாறு/ இப்படி

சொற்பாலது: சொல்லில் சேர்வது

ஆனவா: ஆன தன்மை

முழு கட்டுரையைப் படிக்க →