பகுதி 8 – திருவம்மானை - 1
அம்மானை என்பது சிறுமிகள் விளையாடும் ஒரு விளையாட்டு. அப்படி அம்மானை விளையாடும் சிறுமிகள் இறைவனை எண்ணிப் பாடும்விதமாக
அம்மானை என்பது சிறுமிகள் விளையாடும் ஒரு விளையாட்டு. அப்படி அம்மானை விளையாடும் சிறுமிகள் இறைவனை எண்ணிப் பாடும்விதமாக இந்தப் பாடல்களை மாணிக்கவாசகர் எழுதியுள்ளார். இவை தரவு கொச்சகக் கலிப்பா என்ற வகையில் அமைந்தவை. திருவண்ணாமலையில் அருளப்பட்டவை.
51
பாடலின்பம்
செங்கண் நெடுமாலும் சென்று இடத்தும் காண்பு அரிய
பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்து அருளி
எங்கள் பிறப்பு அறுத்திட்டு எம் தரமும் ஆட்கொண்டு
தெங்குதிரள் சோலைத் தென்னன், பெருந்துறையான்,
அம்கணன், அந்தணனாய் அறைகூவி வீடு அருளும்
அம் கருணை வார் கழலே பாடுதும் காண் அம்மானாய்.
*
பாரா, விசும்பு உள்ளார், பாதாளத்தார், புறத்தார்
ஆராலும் காண்டற்கு அரியான், எமக்கு எளிய
பேராளன், தென்னன், பெரும்துறையின் பிச்சு ஏற்றி
வாரா வழி அருளி வந்து என் உளம் புகுந்த
ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன் விசிறும்
பேர் ஆசை வாரியனைப் பாடுதும் காண் அம்மானாய்.
பொருளின்பம்
சிவந்த கண்களைக் கொண்ட நெடியவனான திருமால் பன்றி உருவெடுத்து, பூமியை அகழ்ந்துசென்று சிவபெருமானின் திருவடிகளைத் தேடினான். ஆனால், அவனாலும் அதனைக் காண இயலவில்லை. அப்படிப்பட்ட சிறந்த மலர்ப்பாதங்களைப் பூமியில் வைத்து எம்பெருமான் இங்கே வந்தான், எங்கள் பிறப்பை அறுத்தான், எங்கள் தகுதியைக் கருதாமல் ஆட்கொண்டான்,
தென்னை மரங்கள் நிறைந்த சோலைகளைக் கொண்ட திருப்பெருந்துறையின் இறைவன், அழகிய கண்களைக் கொண்டவன், அந்தணன், நம்மை அறைகூவி அழைத்து வீடுபேற்றை வழங்குகிறவன், அவனுடைய கருணை கொண்ட திருவடிகளை வாழ்த்திப் பாடுவோம், அம்மானை ஆடுவோம்.
பூமியில் உள்ளவர்கள், வானத்தில் உள்ளவர்கள், பாதாளத்தில் உள்ளவர்கள், மற்ற உலகங்களில் வாழ்கிறவர்கள் என யாராலும் அவனைக் காண இயலாது. அந்த அளவுக்கு அரியவனான அவன், எங்களுக்கு அருள் செய்வதற்காக எளியவனாகத் திகழ்கிறான்.
திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் அந்தத் தென்னன், எங்களுக்கெல்லாம் பித்தைத் தந்தவன், மீண்டும் பிறக்காமலிருக்கும் வழியைக் காட்டியவன்,
என் உள்ளம் புகுந்த அந்தத் தெவிட்டாத அமுதத்தை, மீன் பிடிப்பதற்காக அலைகடலில் வலை வீசியவனை, மாபெரும் அன்புக் கடலைப் பாடுவோம், அம்மானை ஆடுவோம்.
சொல்லின்பம்
இடந்து: அகழ்ந்து
பூதலம்: பூமி
போந்து: வந்து
தெங்கு: தென்னை
அம்: அழகிய
கணன்: கண்களைக் கொண்டவன்
அறைகூவல்: ஆர்வத்தோடு அழைத்தல்
வீடு: மோட்சம்
கழல்: ஆண்களின் வீர அணிகலன், இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது
பார்: உலகம்
விசும்பு: ஆகாயம்
காண்டற்கு: காணுதற்கு/ பார்ப்பதற்கு
பிச்சு: பித்து
ஆரா: தெவிட்டாத
விசிறும்: வீசுகிற
வாரியன்: கடல்போன்றவன்