முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 8 – திருவம்மானை - 2

அம்மானை என்பது சிறுமிகள் விளையாடும் ஒரு விளையாட்டு. அப்படி அம்மானை விளையாடும் சிறுமிகள் இறைவனை எண்ணிப்

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:


அம்மானை என்பது சிறுமிகள் விளையாடும் ஒரு விளையாட்டு. அப்படி அம்மானை விளையாடும் சிறுமிகள் இறைவனை எண்ணிப் பாடும்விதமாக இந்தப் பாடல்களை மாணிக்கவாசகர் எழுதியுள்ளார். இவை தரவு கொச்சகக் கலிப்பா என்ற வகையில் அமைந்தவை. திருவண்ணாமலையில் அருளப்பட்டவை.

52

பாடலின்பம்

கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை

வல்லாளன், தென்னன், பெருந்துறையான் பிச்சு ஏற்றிக்

கல்லைப் பிசைந்து கனி ஆக்கி, தன் கருணை

வெள்ளத்து அழுத்தி வினை கடிந்த வேதியனை,

தில்லை நகர் புக்கு சிற்றம்பலம் என்னும்

ஒல்லை விடையானைப் பாடுதும் காண் அம்மானை.

*

கேட்டாயோ தோழி கிறி செய்த ஆறு, ஒருவன்,

தீட்டு ஆர் மதில் புடை சூழ் தென்னன், பெருந்துறையான்

காட்டாதன எல்லாம் காட்டி, சிவம் காட்டி,

தாள் தாமரை காட்டி, தன் கருணைத் தேன் காட்டி

நாட்டார் நகை செய்ய நாம் மேலை வீடு எய்த

ஆள்தான் கொண்டு ஆண்டவா பாடுதும் காண் அம்மானை.

பொருளின்பம்

கல் மனம் கொண்ட, நாய் போன்ற என்னை அந்த வல்லாளன், தென்னன், திருப்பெருந்துறையில் எழுந்தருளும் சிவபெருமான் பித்துப்பிடிக்கச் செய்துவிட்டான், இந்தக் கல்லைப் பிசைந்து கனியாக்கிவிட்டான், பின் அந்தக் கனியைத் தன் கருணையாகிய வெள்ளத்தில் அழுத்தி என்னுடைய வினைகளை நீக்கிவிட்டான், அந்த வேதியனை, தில்லை நகரில் புகுந்து சிற்றம்பலத்தில், விரைந்து செல்லும் காளையின்மீது காட்சி தரும் சிவபெருமானைப் பாடுவோம், அம்மானை ஆடுவோம்.

தோழி, ஒப்பற்ற சிவபெருமான் செய்த மாயங்களைப்பற்றி நீ கேள்விப்பட்டிருக்கிறாயா?

வண்ணம் தீட்டப்பட்ட அழகிய மதில்களால் சூழப்பட்ட திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் தென்னன், இதுவரை யாருக்கும் காட்டாத அருளை நமக்குக் காட்டினான், சிவப்பொருளைக் காட்டினான், தன்னுடைய திருவடித் தாமரைகளைக் காட்டினான், தன்னுடைய கருணையாகிய தேனைக் காட்டினான்,

அதனால் நாம் பித்தேறிக் கிடக்க, இந்த நாட்டு மக்கள் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறார்கள், அப்படி நாம் வீடு பேறு அடையும்படி சிவபெருமான் நம்மை ஆட்கொண்டதன்மையைப் பாடுவோம், அம்மானை ஆடுவோம்.

சொல்லின்பம்

பிச்சு: பித்து

புக்கு: புகுந்து

ஒல்லை: வேகமாக

விடை: காளை, சிவபெருமானின் வாகனம்

கிறி: மாயச்செயல்

தாள்: திருவடி

நாட்டார்: நாட்டு மக்கள்

நகை: புன்னகை/ சிரிப்பு

வீடு: மோட்சம்

ஆண்டவா: ஆண்ட தன்மை

முழு கட்டுரையைப் படிக்க →