முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 8 – திருவம்மானை - 7

அம்மானை என்பது சிறுமிகள் விளையாடும் ஒரு விளையாட்டு. அப்படி அம்மானை விளையாடும் சிறுமிகள்

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:

அம்மானை என்பது சிறுமிகள் விளையாடும் ஒரு விளையாட்டு. அப்படி அம்மானை விளையாடும் சிறுமிகள் இறைவனை எண்ணிப் பாடும்விதமாக இந்தப் பாடல்களை மாணிக்கவாசகர் எழுதியுள்ளார். இவை தரவு கொச்சகக் கலிப்பா என்ற வகையில் அமைந்தவை. திருவண்ணாமலையில் அருளப்பட்டவை.

57

பாடலின்பம்

முன்னானை மூவர்க்கு, முற்றுமாய் முற்றுக்கும்

பின்னானை, பிஞ்ஞகனை, பேணு பெருந்துறையின்

மன்னானை, வானவனை, மாது இயலும் பாதியனை,

தென் ஆனைக்காவானை, தென்பாண்டி நாட்டானை,

என்னானை, என்னப்பன் என்பார்கட்கு இன் அமுதை

அன்னானை, அம்மானைப் பாடுதும் காண் அம்மானாய்.

*

பெற்றி பிறர்க்கு அரிய பெம்மான், பெருந்துறையான்,

கொற்றக் குதிரையின்மேல் வந்து அருளித் தன் அடியார்

குற்றங்கள் நீக்கி, குணம் கொண்டு, கோதாட்டிச்

சுற்றிய சுற்றத் தொடர்வு அறுப்பான் தொல்புகழே

பற்றி இப்பாசத்தைப் பற்று அற நாம் பற்றுவான்

பற்றிய பேரானந்தம் பாடுதும் காண் அம்மானாய்.


பொருளின்பம்

முப்பெரும்தேவர்களுக்கும் முன்பாகத் தோன்றியவன், அவனே இந்த உலகத்தில் அனைத்தும், அந்த அனைத்துக்கும் பின்பாக நிலைத்திருப்பவனும் அவனே, அந்தப் பிஞ்ஞகனை, அனைவரும் விரும்பும் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் மன்னனை, விண்ணுலகின் தலைவனை, பெண்ணை ஒருபாகமாகக் கொண்டவனை, தென்னகத்தில் திருவானைக்கா என்ற திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவனை, தென்பாண்டி நாட்டவனை, ‘எனக்கு இனியவன், என்னுடைய அப்பன்’ என்று சொல்பவர்களுக்கு இனிய அமுதத்தைப்போல் நலம் தருபவனை, அந்தத் தலைவனை, சிவபெருமானைப் போற்றிப் பாடுவோம், அம்மானை ஆடுவோம்.

*

தன்னுடைய தன்மை இத்தகையது என்று பிறரால் அறிந்துகொள்ள இயலாத பெரியவன், திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்,

வெற்றிக் குதிரையின்மேல் வந்து அருள் செய்து, தன்னுடைய அடியவர்களின் குற்றங்களை நீக்கி, நல்ல குணங்களைப் பாராட்டி ஏற்றுக்கொண்டு சீராட்டுவான், நம்மைச் சுற்றியிருக்கும் பந்தபாசம் என்கிற தொடர்பை அறுப்பான், அவனுடைய தொன்மையான புகழைப் பற்றிக்கொண்டு, இந்த உலகப்பாசத்தை நாம் முழுமையாக நீக்கிக்கொள்வோம்.

நாம் பற்றிய அந்தப் பெருமான் நம்மையும் பற்றிக்கொண்ட பேரானந்தத்தைப் பாடுவோம், அம்மானை ஆடுவோம்.

சொல்லின்பம்

முன்னான்: முன்பு தோன்றியவன்

பேணு: பேணும்/ விரும்பும்

மன்னான்: மன்னன்

என்னானை: எனக்கு இனியவன்

அன்னானை: அப்படிப்பட்டவனை

அம்மான்: தலைவன்/ பெரியவன்

பெற்றி: தன்மை

பெம்மான்: பெருமான்/ பெரியவன்

கொற்றம்: வெற்றி

கோதாட்டி: சீராட்டி

தொடர்வு: தொடர்பு

தொல்புகழ்: தொன்மையான/ பழமையான புகழ்

முழு கட்டுரையைப் படிக்க →