முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 11 - திருத்தெள்ளேணம் - 7

நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் என்கிற ஐம்பூதங்களும் அழிந்தால்கூட, தான் அழியாமல், அசையாமல் நிலைபெற்றிருப்பவன் சிவபெருமான்,

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:

தெள்ளேணம் என்பது தமிழ்ப் பெண்கள் விளையாடிய ஒரு பழைய விளையாட்டு. கைகளைக் கொட்டிக்கொண்டு ஆடுவது.

பெண்கள் தெள்ளேணம் ஆடியபடி சிவபெருமானின் பெருமையைப் பாடுவதாக இந்தப் பாடல்கள் அமைந்துள்ளன.

இதில் இருபது பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

78

பாடலின்பம்

வான்கெட்டு, மாருதம் மாய்ந்து, அழல், நீர், மண்கெடினும்

தான்கெட்டல் இன்றிச் சலிப்புஅறியாத் தன்மையனுக்கு

ஊன்கெட்டு, உயிர்கெட்டு, உணர்வுகெட்டு என் உள்ளமும் போய்

நான்கெட்டவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ.

*

குலம் பாடி, கொக்குஇறகும் பாடி, கோல்வளையாள்

நலம் பாடி, நஞ்சுண்டவா பாடி, நாள்தோறும்

அலம்புஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற

சிலம்பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ.

பொருளின்பம்

நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் என்கிற ஐம்பூதங்களும் அழிந்தால்கூட, தான் அழியாமல், அசையாமல் நிலைபெற்றிருப்பவன் சிவபெருமான், அவனை எண்ணியதால் என்னுடைய பிறப்பின் அடையாளமான இந்த உடல் கெட்டது, உயிர் கெட்டது, உணர்வு கெட்டது, உள்ளம் கெட்டது, ‘நான்' என்கிற ஆணவம் கெட்டது, இத்தனைக்கும் காரணமாக அமைந்த அந்தப் பெருமானைப் பாடித் தெள்ளேணம் கொட்டி ஆடுவோம்,

சிவபெருமானின் குலப்பெருமையைப் பாடுவோம், அவன் சூடியிருக்கிற கொக்கின் இறகைப் பாடுவோம், நன்னெறி வளையாமல் உலகை ஆளும் உமையம்மையின் சிறப்பைப் பாடுவோம், சிவபெருமான் நஞ்சை உண்டு உலகைக் காத்த கருணையைப் பாடுவோம், தினந்தோறும் நீர் சத்தமிட்டுப் பொங்கி வளம் சேர்க்கின்ற நகரமான தில்லை அம்பலத்தில் ஆடுகிற அவனுடைய சிலம்பாட்டத்தைப் பாடுவோம், தெள்ளேணம் கொட்டி ஆடுவோம்,

சொல்லின்பம்

மாருதம்: காற்று

மாய்ந்து: அழிந்து

அழல்: நெருப்பு

சலிப்பு: சலனம்

ஊன்: உடல்

கோல்: செங்கோல்

வளையாள்: வளையாதவள்

நஞ்சுண்டவா: நஞ்சுண்ட தன்மை

ஆர்: ஆர்க்கின்ற/ சத்தம் செய்கின்ற

புனல்: நீர்

முழு கட்டுரையைப் படிக்க →