பகுதி 43 – திருவார்த்தை - 4
பெருமான் இந்தப் பூமியில் வந்து தோன்றி, நம்மைப்போன்ற அடியவர்களின் மனத்தில் இருந்த வேறுபாடுகளை அகற்றி அருள்செய்தான், அந்தப் பெருமையை அறிந்தவர் யாரோ, அவரே எம் தலைவர்!
இறைவனின் தன்மைகளைச் சொல்லும் மேலான வார்த்தை என்ற பொருளில் இப்பாடல்கள் அமைந்துள்ளன.
திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.
பத்து பாடல்கள் கொண்ட தொகுப்பு.
241
பாடலின்பம்
நாதம் உடையது ஓர் நற்கமலப்போதினில் நண்ணிய நல்நுதலார்
ஓதிப் பணிந்து அலர்தூவி ஏத்த ஒளிவளர் சோதி எம் ஈசன், மன்னும்
போதுஅலர் சோலைப் பெருந்துறை எம் புண்ணியன் மண்ணிடை வந்து தோன்றிப்
பேதம் கெடுத்து அருள்செய் பெருமை அறியவல்லார் எம்பிரான்ஆவாரே.
*
பூஅலர் கொன்றை அம் மாலை மார்பன், போர்உகிர் வன்புலி கொன்ற வீரன்,
மாதுநல்லாள் உமை மங்கை பங்கன், வண்பொழில்சூழ் தென் பெருந்துறைக்கோன்
ஏதுஇல் பெரும்புகழ் எங்கள் ஈசன், இரும்கடல் வாணற்குத் தீயில் தோன்றும்
ஓவிய மங்கையர் தோள்புணரும் உருஅறிவார் எம்பிரான்ஆவாரே.
பொருளின்பம்
வண்டுகள் ஒலிசெய்கிற நாதத்தைக்கொண்ட, நல்ல தாமரை மலர்களில் திகழ்கிறவர்கள், நல்ல நெற்றியைக் கொண்ட திருமகளும் கலைமகளும். அவர்கள் இருவரும் மலர்களைத் தூவி, போற்றி வணங்குகிற, ஒளிநிறைந்த சோதிவடிவானவன், நம் ஈசன், நெருங்கிய மலர்களைக் கொண்ட சோலைகள் நிறைந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் நம் புண்ணியன், சிவபெருமான்,
அத்தகைய பெருமான் இந்தப் பூமியில் வந்து தோன்றி, நம்மைப்போன்ற அடியவர்களின் மனத்தில் இருந்த வேறுபாடுகளை அகற்றி அருள்செய்தான், அந்தப் பெருமையை அறிந்தவர் யாரோ, அவரே எம் தலைவர்!
*
மலர்ந்த கொன்றை மலர்களைத் தொடுத்த அழகிய மாலையை மார்பில் அணிந்தவன், போர் செய்வதற்காகக் கூர்மையான நகங்களைக் கொண்ட வலிமையான புலியைக் கொன்ற வீரன்,
பெண்களில் சிறந்த உமையம்மையைத் தன் உடலில் ஒரு பங்காகக் கொண்டவன், செழிப்பான சோலைகளால் சூழப்பட்ட தென் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் தலைவன், குற்றமில்லாத பெரிய புகழைக் கொண்ட நம் ஈசன், சிவபெருமான்,
பெருங்கடல்களின் தலைவனான வருணனுக்குத் தீயுருவில் காட்சி தந்தவன், அதேசமயம், ஓவியம்போன்ற அழகிய பெண்களின் தோள்களில் தோய்கிற உருவைக் கொண்டவன், அவனுடைய உண்மையுருவை அறிந்தவர் யாரோ, அவரே எம் தலைவர்!
சொல்லின்பம்
நாதம்: இனிய ஒலி
நல்கமலப்போது: நல்ல தாமரை மலர்
நண்ணிய: திகழ்கிற
நல்நுதலார்: நல்ல நெற்றியைக் கொண்டவர்கள்
அலர்: மலர்
ஏத்த: போற்ற
மன்னும்: நெருங்கும்
போதுஅலர் சோலை: மலர்கள் நிறைந்த சோலை
பேதம்: வேறுபாடு
அறியவல்லார்: அறிய முடிந்தவர்கள்
பிரான்: தலைவன்
அம் மாலை மார்பன்: அழகிய மாலையை மார்பில் அணிந்தவன்
உகிர்: நகம்
வன்புலி: வலிமையான புலி
மங்கைபங்கன்: பெண்ணைத் தன் உடலில் ஒரு பங்காகக் கொண்டவன் / சிவபெருமான்
வண்பொழில்: செழிப்பான சோலைகள்
தென் பெருந்துறைக் கோன்: தென் திருப்பெருந்துறையின் தலைவன்
ஏது இல் பெரும்புகழ்: குற்றமில்லாத பெரிய புகழ்
இரும்கடல்வாணற்கு: பெரிய கடல்களின் தலைவனான வருணனுக்கு
ஓவிய மங்கையர்: ஓவியம் போன்ற அழகிய பெண்கள்
தோள் புணரும்: தோளில் படிகிற