முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 200

இன்றைய பாடல் ரத்னகிரி தலத்துக்கானது.  குளித்தலையிலிருந்து மணப்பாறை செல்லும் வழியில் உள்ள அப்பர் பாடிய தலம் இது.  1017 படிகள் கொண்ட மலைக் கோவிலில்

Updated On : 4 ஏப்ரல், 2016 at 10:33 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:26 PM

இன்றைய பாடல் ரத்னகிரி தலத்துக்கானது.  குளித்தலையிலிருந்து மணப்பாறை செல்லும் வழியில் உள்ள அப்பர் பாடிய தலம் இது.  1017 படிகள் கொண்ட மலைக் கோவிலில் இறைவன் இரத்னகிரீஸ்வரர் – அம்பிகை சுரும்பார்குழலியோடு எழுந்தருளியுள்ள தலம்.  இங்கே ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களுமாக மயில்மீது அமர்ந்த கோலத்தில், இருபுறமும் தேவியர் விளங்க முருகன் எழுந்தருளியிருக்கிறான். 

நான் சுமக்கும் இந்த உடல் வெறும் ஒருபிடிசாம்பலாகப் போகத்தானா என்று நேற்றைய சீகாழித் திருத்தலப் பாடலில் வினவியிருந்தார்.  இன்றைய பாடலில் இன்னும் ஒருபடி மேலே சென்று, மோகவலையில் விழுந்து வாடிவாடி அழிந்து போவேனோ என்று கேட்டு, ‘சீசீ இது நாற உடல்’ என்று அருவருக்கிறார்.  அடியார்களுக்கென்று ஒரு செல்ல உரிமை உண்டு.  இறையனாருக்கு உபதேசம் செய்த முருகனையே குருவாகக் கொண்டு அவனிடமிருந்தே உபதேசம் பெற்ற குருநாதருக்கு இல்லாத உரிமையா!  கேலியைப் பாருங்கள்.  ‘நான் காம வலையில் சிக்கிக் கொள்ளாமல் அருள்க’ என்று வேண்டும் அதேமூச்சில், ‘வள்ளிப்பிராட்டியின் மேல் காதல் கொண்ட காமுகன்தானே நீ’ என்று சொல்வதைப் போல கடைசியடியில், ‘காமுக குகா!’ என்றே அழைக்கிறார்.  செந்தமிழாலே வைதாரையும் வாழவைக்கும் பெருமானுக்கு இது உவப்பாக இருக்கும்தானே!

பாடலின் இரண்டாம் பகுதியில் சந்தம் துள்ளத் தொடங்குகிறது.  அனைத்து இறைவர்களும் ஆடுகிறார்கள்.  ‘அதல சேடனாராட’ (பார்க்க: தவணை 122) பாடலை நினைவூட்டும் பாடல் இது.  சந்தங்களும் தாளங்களும் செய்யும் ரகளையை ரசிக்கிறோம்.

Advertisement

தத்ததன தானதன தானதன தானதன
தத்ததன தானதன தானதன தானதன
தத்ததன தானதன தானதன தானதன        தனதான

சுற்றகப டோடுபல சூதுவினை யானபல
  கற்றகள வோடுபழி காரர்கொலை காரர்சலி
  சுற்றவிழ லானபவி ஷோடுகடல் மூழ்கிவரு           துயர்மேவித்
துக்கசமு சாரவலை மீனதென கூழில்விழு

  செத்தையென மூளுமொரு தீயில்மெழு கானவுடல்
  சுத்தமறி யாதபறி காயமதில் மேவிவரு                பொறியாலே
சற்றுமதி யாதகலி காலன்வரு நேரமதில்
  தத்துஅறி யாமலொடி யாடிவரு சூதரைவர்

  சத்தபரி சானமண ரூபரச மானபொய்மை             விளையாடித்
தக்கமட வார்மனையை நாடியவ ரோடுபல
  சித்துவிளை யாடுவினை சீசியிது நாறவுடல்
  தத்திமுடி வாகிவிடு வேனொமுடி யாதபத            மருள்வாயே

தித்திமித தீதிமித தீதிமித தீமிதத
  தத்ததன தானதன தானனன தானனன
  திக்குடுடு டூடமட டாடமட டூடுடுடு                      எனதாளம்
திக்குமுகி லாடஅரி யாடஅய னாடசிவ

  னொத்துவிளை யாடபரை யாடவர ராடபல
  திக்கசுரர் வாடசுரர் பாடமறை பாடஎதிர்                களமீதே
எத்திசையு நாடியம னார்நிணமொ டாடபெல
  மிக்கநரி யாடகழு தாடகொடி யாடசமர்

  எற்றிவரு பூதகண மாடவொளி யாடவிடு             வடிவேலா
எத்தியொரு மானைதினை காவல்வல பூவைதனை
  சித்தமலை காமுககு காநமசி வாயனொடு
  ரத்நகிரி வாழ்முருக னேயிளைய வாவமரர்       பெருமாளே.

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/257205143&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.