பகுதி - 174
சற்றே நீண்ட சந்த அமைப்புக் கொண்ட திருவேங்கடத் திருப்புகழ் ஒன்றை இன்று பார்க்கலாம். திருவேங்கடப் பதியைப் பற்றிய அறிமுகத்தை நம்முடைய 31-ம் தவணையில் ‘நெச்சுப் பிச்சி’ என்ற பாடலோடு கொடுத்திருந்தோம்.
சற்றே நீண்ட சந்த அமைப்புக் கொண்ட திருவேங்கடத் திருப்புகழ் ஒன்றை இன்று பார்க்கலாம். திருவேங்கடப் பதியைப் பற்றிய அறிமுகத்தை நம்முடைய 31-ம் தவணையில் ‘நெச்சுப் பிச்சி’ என்ற பாடலோடு கொடுத்திருந்தோம். மீண்டும் ஒருமுறை சொல்கிறோம். இன்றைய திருப்பதித் தலமும் அருணகிரியார் பாடிய திருவேங்கடத் திருப்புகழ் குறிக்கும் முருகன் ஆலயமும் வேறுவேறு. திருவேங்கடமுடையானை அருணகிரியாரே ‘இபமாந்தர் சக்ர பதிசெறி’ என்ற திருவாஞ்சியத் திருப்புகழில்,
உலகீன்ற பச்சை யுமையணன்
வடவேங்க டத்தி லுறைபவ
னுயர்சார்ங்க சக்ர கரதலன் ...... மருகோனே
என்று பாடுகிறார். ‘உலகு ஈன்ற பச்சை உமைஅ(ண்)ணன், வடவேங்கடத்தில் உறைபவன், உயர் சார்ங்க சக்ர கரதலன்’ உலகத்தைப் படைத்த உமையின் அண்ணனும், வடவேங்கடத்தில் கோவில் கொண்டிருப்பவனும் சார்ங்க வில்லையும் சுதர்ஸன சக்ரத்தையும் கையில் தரித்திருப்பவனுடைய மருமகனே என்று அவர் பாடியிருப்பதால், திருவேங்கடத் திருப்புகழில் அவர் குறித்திருப்பது மலைப்பாதையில் உள்ள கபிலேச்வரர் காமாட்சியம்பிகை ஆலயத்திலுள்ள ஆறுமுகப் பெருமாளை என்பதை சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை, சேலம், வெளியிட்டிருக்கும் திருப்புகழ் நூல் தெளிவாகவே குறிப்பிடுகிறது. தணிகைமணி செங்கல்வராய பிள்ளையவர்களின் காலத்தில் ‘விஷ்ணு ஆலயமும் முருகன் ஆலயமும் இத்தலத்தில் இருந்திருக்க வேண்டும்’ என்ற குறிப்போடு நின்றுவிட்டது. சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபையின் பதிப்பு இது எந்த ஆலயம் என்பதைத் தெளிவாகவே குறிப்பிடுகிறது.
Advertisement
இப்போது பாடலின் அமைப்புக்கு வருவோம். ஒவ்வொரு அடிக்கும் 52 எழுத்துகள். ஒவ்வொன்றிலும் 51-ம் எழுத்து மட்டுமே நெடில், மற்றவை எல்லாம் குறில் எழுத்துகள். இந்த அமைப்புமுறையால் தாளத்தில் ஒரு ‘கிடுகிடு சடட’த்தன்மை தொடர்ந்து ஒலிப்பதைக் கேட்கலாம். அடிக்கு 52 எழுத்துகள் என்றால் பாடல் மொத்தத்திலும் இருப்பது 416 எழுத்துகள்; இதில் மொத்தம் எட்டே எட்டு எழுத்துகள் நெடில், மற்றவை அனைத்தும் குறில். இப்படியொரு சந்தச் சக்கர விளையாட்டு. ‘கவிதை அமுதமொழி தருபவர் உயிர்பெற அருள் நேயா’ என்று இறைவனைப் பாடுகிறார். கவிதையின் இந்த அமுதமொழியே உயிரைத் தளிர்க்கச் செய்கின்றதன்றோ! ஷடுமை என்றொரு பிரயோகத்தை இந்தப் பாடலில் பார்க்கலாம். அதற்கு ஆறெழுத்து மந்திரம் என்பது பொருள்.பாடலைப் பார்ப்போம், பதிவைக் கேட்போம்.
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன தனதன தனதன - தனதான
சரவண பவநிதி யறுமுக குருபர
சரவண பவநிதி யறுமுக குருபர
சரவண பவநிதி யறுமுக குருபர - எனவோதித்
தமிழினி லுருகிய வடிரவ ரிடமுறு
சனனம ரணமதை யொழிவுற சிவமுற
தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற - வருள்வாயே
கருணைய விழிபொழி யொருதனி முதலென
வருகரி திருமுகர் துணைகொளு மிளையவ
கவிதைய முதமொழி தருபவ ருயிர்பெற - வருள்நேயா
கடலுல கினில்வரு முயிர்படு மவதிகள்
கலகமி னையதுள கழியவும் நிலைபெற
கதியுமு னதுதிரு வடிநிழல் தருவது - மொருநாளே
திரிபுர மெரிசெயு மிறையவ ரருளிய
குமரச மரபுரி தணிகையு மிகுமுயர்
சிவகிரி யிலும்வட மலையிலு முலவிய - வடிவேலா
தினமுமு னதுதுதி பரவிய அடியவர்
மனதுகு டியுமிரு பொருளிலு மிலகுவ
திமிரம லமொழிய தினகர னெனவரு - பெருவாழ்வே
அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர்
மருகனெ னவெவரு மதிசய முடையவ
அமலிவி மலிபரை உமையவ ளருளிய - முருகோனே
அதலவி தலமுதல் கிடுகிடு கிடுவென
வருமயி லினிதொளிர் ஷடுமையில் நடுவுற
அழகினு டனமரு மரகர சிவசிவ - பெருமாளே.
</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/250130989&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>