முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

சொல்லப் போனால்... நயத்தக்க நாகரிகம் வேண்டாவா?

தேர்தல் பிரசாரங்களில் அரசியல் தலைவர்களின் தரந்தாழ்ந்த பேச்சுகளும் இணைய வெளியில் ஜனநாயகன் பற்றியும்...

Updated On : 12 ஏப்ரல், 2026 at 8:15 AM
பழனிவேல் ராஜன், பழ. நெடுமாறன், ஜனநாயகன்! - சித்திரிப்பு / விஜய்
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:15 PM

என்னதான் தேர்தல் காலத்துப் பிரசாரங்கள் என்றாலும் அரசியல் பேச்சுகள் ஏன் இவ்வளவு தரந்தாழ்ந்து போய்க்கொண்டிருக்கின்றன? உயர் நிலையிலுள்ள கட்சியின் பெரிய தலைவர்களே ஏன் தங்கள் தகுதிக்குப் பொருந்தாமல் கீழிறங்கிப் பேசுகிறார்கள்?

கடந்த வாரத்தில் தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பெரியவர் பழ. நெடுமாறனை மணவிழாவொன்றில் சந்தித்தபோது, 1980 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின்போது நடந்தவொன்றை நினைவுகூர்ந்தார்:

“1980 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் காமராஜர் காங்கிரஸ் சார்பில் மதுரை மத்திய தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். திமுக சார்பில், தேனியில் போட்டியிடுவார் எனக் கருதப்பட்ட, பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் (சென்னை மாகாண முன்னாள் முதல்வரும் நீதிக் கட்சித் தலைவருமான பி.டி. ராசனின் மகன், தற்போதைய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராசனின் தந்தை) எதிர்த்து நிறுத்தப்பட்டார். எங்கள் இருவரின் குடும்பங்களுக்கும் மூன்று தலைமுறைப் பழக்கம். இக்கட்டான நிலை.

Advertisement

“திடீரென பழனிவேல் ராஜன் தொலைபேசியில் அழைத்து, வீட்டுக்கு வர வேண்டும் என்றார். என்ன, இது புதுப்பழக்கம், எப்போதும்போல நீங்கள் வர வேண்டியதுதானே? என்று தெரிவித்தேன்.

“வீட்டுக்கு வந்த பழனிவேல் ராஜன் எங்களுடன் பேசிவிட்டு, மாடியிலிருந்த என் தந்தை கி. பழனியப்பனாரைச் சென்று பார்த்தார். மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறேன். நம் குடும்பத்தில் அப்பாவுக்குப் பிறகு நீங்கள்தான் மூத்தவர், வாழ்த்த வேண்டும் என்று வாழ்த்துப் பெற்றார். தொடர்ந்து, தேர்தலுக்கான என்னுடைய வேட்பு மனுவிலும் நீங்கள்தான் முன்மொழிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தந்தையும் உடனே தயக்கமின்றி, கையெழுத்திட்டுத் தந்தார்.

“கீழே இறங்கி வந்தவரிடம் சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள் என்று வீட்டில் பெண்கள் சொல்ல, சிற்றுண்டி அருந்திய பழனிவேல் ராஜன், ‘ஏம்மா, வீட்டில் நெடுமாறனைவிட நான்தான் மூத்தவன். நீங்கள் எல்லாரும் எனக்குதான் முதலில் வாக்களிக்க வேண்டும், மறந்துவிடாதீர்கள்’ என்று கேட்டுக்கொண்ட பின்  புறப்பட்டுச் சென்றார்.

“வீட்டில் திரண்டிருந்த என் நண்பர்கள், கட்சிக்காரர்கள் எல்லாரும், நாமும் அவர்கள் வீட்டுக்குச் சென்று நம்முடைய வேட்பு மனுவில் பழனிவேல் ராஜனின் மூத்த சகோதரர் பி.டி.ஆர். கமலத் தியாகராஜனிடம் முன்மொழிவு கையெழுத்துப் பெறலாம் என்று வற்புறுத்தினர். அட விடுங்க, ஏறுக்கு மாறாக, என்ன இது என்று சொல்லி நிறுத்திவிட்டோம்.

“நான், பழனிவேல் ராஜன் இருவருமே வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு, என்னுடைய தந்தையும் கமலத் தியாகராஜனும் மதுரையைவிட்டு வெளியூருக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். புறப்படும் முன், என் தந்தை என்னை அழைத்து, நம்முடைய குடும்பங்கள் மூன்று தலைமுறைகளாகப் பழக்கம், நெருக்கமான நட்பு. தேர்தலும் பதவியும் வரும் போகும். இந்த நட்பு கெட்டுவிடக் கூடாது, இருவரும் கவனமாக நடந்துகொள்ளுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றார்.

“போட்டி மிகக் கடுமையாக இருந்தபோதிலும் பிரசாரங்களில் இரு தரப்பிலும் எந்தத் தருணத்திலும் எங்கேயும் எதுவும் துளிகூட தரக்குறைவாக நேரிடவில்லை. கண்ணியமாகத் தேர்தல் நடந்து முடிந்தது.”

45 ஆண்டுகளுக்கு முன் நடந்தது இந்த விஷயம்!

ஆனால், தற்போது தேர்தல் பிரசாரங்களில் யாரைப் பற்றி யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்றாகிவிட்டது. ஒருகாலத்தில் அரசியல் கூட்டங்களில் நகைச்சுவையாக, பொழுதுபோக்காக, கொஞ்சம் ரசனைக் குறைவாகக் குறிப்பிட்ட சில பேச்சாளர்கள் (பெயர்கள் இப்போது முக்கியமில்லை) மட்டும் பேசுவார்கள். மக்களும் சிரித்துவிட்டுப் போய்விடுவார்கள், அவ்வளவுதான்.  இப்போதும் சிலர் பேசுகிறார்கள், வழக்குகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.

எவ்வாறு இன்றைய திரைப்படங்களில் கதாநாயகர்களே நகைச்சுவையையும் கதாநாயகிகளே கவர்ச்சியையும் சேர்த்து எடுத்துக் கொண்டார்களோ (பழைய படங்களில் இவற்றுக்கென தனியே நடிகர், நடிகைகள் இருப்பார்கள்) அதேபோல, அரசியலிலும் இப்போது தரத்தைத் தரைமட்டத்துக்கு இறக்கிப் பேசுவதையும்  தனிப் பேச்சாளர்கள் இல்லாமல் தலைவர்களே எடுத்துக் கொண்டுவிட்டார்கள்போல. சில தலைவர்களின் பேச்சுகள் எல்லாம் சில நேரங்களில் எழுதவோ, சொல்லவோ இயலாதென்கிற அளவில் அவதூறுகளாக, சாபங்களாகச் சென்றுகொண்டிருக்கின்றன (எனவே, இங்கே யாரையும், எதையும் சுட்டிக்காட்டவில்லை).

நினைவுகூர ஒரேயொரு விஷயம். திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியைத் ‘திருவாரூரிலிருந்து திருட்டு ரயிலேறி வந்தவர்’ என்பதாகக் காலங்காலமாக அரசியல் மேடைகளில் யாராவது ஒருவர் எங்கேயேனும் முழங்கிக்கொண்டே இருப்பார்கள் – இருக்கிறார்கள். ஆனால், இதற்குச் சான்றாக எதுவுமில்லை.

கவியரசர் கண்ணதாசனின் ‘வனவாசம்’ என்கிற  தன் வரலாற்று நூலில், தான் ஊரிலிருந்து புறப்பட்டுச் சென்னை வந்ததைப் பற்றிக் குறிப்பிடும் பகுதியில், அவன் டிக்கெட் எடுக்காமல் ரயிலேறிவிட்டதாகவும் வழிநெடுக அவதிப்பட்டதாகவும் பயணம் முடிந்ததும்தான் அவனுக்கு நிம்மதி என்பது போலவும் குறிப்பிடுவார். பிறிதோரிடத்தில் நான், என்னுடைய என்று தன்னை முன்னிலைப்படுத்தக் கூடாது என்பதற்காகவே அவன் என்று தன்னைக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றும் கவியரசரே விளக்கியுமிருப்பார். ஆனால், இவற்றையெல்லாம் அரைகுறையாகப் படித்த, அல்லது முழுமையாகப் புரிந்துகொள்ளாத, அல்லது அறிந்தும் வேண்டுமென்றே யாரோ, அந்த அவன் என்பதைக் கருணாநிதியுடன் பொருத்திப் பற்ற வைத்திருக்கிறார்கள்; அதுவே இன்னமும் எரிந்துகொண்டுமிருக்கிறது.

(உண்மையிலேயே கருணாநிதி எப்போது, எவ்வாறு சென்னை வந்து சேர்ந்தார்; எந்த நிலையில் இருந்தார் என்பதையெல்லாம் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அரங்கண்ணல் எழுதிய ‘நினைவலைகள்’ நூலின் பழைய பதிப்பைப் படித்தால் அறியலாம்).

இதுமாதிரி, மகாத்மா காந்தியில் தொடங்கி, நம்மூர் மாமன்ற கவுன்சிலர்கள் வரையிலும் அடிப்படையோ, ஆதாரங்களோ இல்லாத கதைகள், கட்டுக்கதைகள்  நிறைய.

ஆனால், இதே நாட்டில்தான் எத்தனையோ கருத்து வேறுபாடுகளுக்கும், மாறுபட்ட அரசியல் நிலைப்பாடுகளுக்கும் அப்பாற்பட்டு, தனிப்பட்ட நட்பு, மதிப்பு, மரியாதை, உறவுகளைத் தலைவர்கள் தொடர்ந்திருக்கின்றனர். மகாத்மா காந்தி – சுபாஷ் சந்திர போஸ், ஜவாஹர்லால் நேரு – வல்லபபாய் படேல், பெரியார் – ராஜாஜி, காமராஜர் – அண்ணா... நெடிய பட்டியல் இது. அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தபோதிலும் அதிமுக பொதுச் செயலர் எம்ஜிஆர், திமுக தலைவர் மு. கருணாநிதி ஆகியோர்கூட தரந் தாழ்ந்து விமர்சித்துக் கொண்டதில்லை (ஸ்டாலின் அங்கிள் என்பதையெல்லாம் எங்கே கொண்டு சேர்ப்பதெனத் தெரியவில்லை).

தலைமுறைகள் மாறுகின்றன, தரமும் மாறுகின்றது போல. நாட்டையும் நாட்டு மக்களையும் அரசியலையும் அரசியல் தலைவர்களையும் கூடவே தரத்தையும் நாகரிகத்தையும் யார்தான் காப்பாற்றப் போகிறார்கள்?

தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக அரசியல் கட்சியைத் தொடங்கி அத்தனை தொகுதிகளிலும் வேட்பாளர்களை இறக்கித் தாமும் போட்டியிடுகிறார் நடிகர் விஜய். ஆனால், அவர் கதாநாயகனாக நடித்த திரைப்படமான ஜனநாயகனை அதிகாரபூர்வ ரிலீஸ் வரையிலும் வைத்துக் காப்பாற்ற முடியாத நிலையில், யாரெனத் தெரியாத நபர்களால், இணைய தளங்களில் வெளியாகிவிட்டது.

படத்தின் பட்ஜெட் சுமார் ரூ. 400 கோடி இருக்கலாம் என்கிறார்கள். தேர்தல் பிரசாரத்தையும் மனதில் வைத்து, பொங்கல் விடுமுறைக்கு வெளியிடத் திட்டமிட்ட படம். சான்று கிடைக்காமல் இழுத்தடிக்கப்பட்டதில் முடங்கிக் கிடக்க, இடையே விஜய்யின் அரசியல் பரபரப்பாக நடந்துகொண்டிருக்க, திடீரென முழுப் படமும் எச்.டி (ஹை டெபனேஷன்) பிரிண்ட்டில் இணையதளங்களில் வெளிவந்திருக்கிறது. உடனுக்குடனே சில மணி நேரங்களில் அகற்றப்பட்டுவிட்டது. எவ்வளவு பேர் பார்த்தார்கள்? எவ்வளவு பேர் டவுன்லோட் செய்திருப்பார்கள்? யாருக்கும் தெரியாது.

இவ்வாறு இணைய தளங்களில் திரைப்படங்கள் கசிவது இதுவே முதல் முறையல்ல. சில மாதங்களுக்கு முன் விஷ்ணு விந்யாசம் என்ற தெலுங்குப் படம், தணிக்கைக்கு அனுப்பிய சாய் பல்லவியின் பிரேமம் மலையாளத் திரைப்படம், பவன் கல்யாணின் அத்தரின்டிகி தரேடி என்ற தெலுங்குப் படம், சரத்குமாரின் ஜக்குபாய் தமிழ்ப் படம்...

ஜனநாயகனுக்காக ரஜினிகாந்த், கமல் ஹாசனில் தொடங்கி சிவகார்த்திகேயன் எனப் பலரும் மிகவும் சீரியஸாக கவலை தெரிவித்திருக்கிறார்கள், வருந்தியிருக்கிறார்கள் (வழக்கம்போல தவெக தலைவரும் படத்தின் ஹீரோவுமான விஜய் இன்னமும் எதுவும் கூறவில்லை).

‘வெளியான திரைப்பட பிரிண்ட்டில் எடிட்: ரெபரன்ஸ், 14012026 என்று குறிப்பிட்டிருக்கிறது. இதுவொரு தனிப்பட்ட பிரதி. இத்தகைய பிரதி தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர், எடிட்டர் ஆகியோரிடம் மட்டும்தான் இருக்கும். என்றால் எப்படி வெளியாகியிருக்கும்?’ என்று சமூக ஊடகங்களில் பலர் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர்.

அதானே, எப்படி வெளிவரும், அப்படியும் இருக்கலாமோ என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கும்போது, திரைத் துறை நுட்பங்களை விளக்கிப் பதிவொன்றை வெளியிட்டார் இயக்குநர் சேரன்.

‘ஒரு திரைப்படம் வாட்டர் மார்க் போட்டு அனுப்பப்பட்டால், அந்தப் பிரதி டப்பிங், SFX, RR, DI, Mix ஆகிய துறைகளுக்குத்தான் செல்லும். இவற்றுக்கு மட்டும்தான் வாட்டர்மார்க் இடுவோம். ஏதாவது வணிகரீதியில் அனுப்பினால் மட்டும் வணிகப் பிரதி, விழா பிரதி, தணிக்கைப் பிரதி (For Business purpose, Festival copy, Censor copy)  என்று குறிப்பிடுவோம். எல்லா காட்சிகளையும் தொகுத்து அனுப்பும் எடிட்டிங்கில் இருந்து இதுவரை எடிட் ரெபரன்ஸ் என்றோ அல்லது எடிட் காப்பி என்றோ குறிப்பிட்டு அனுப்பியதே இல்லை. அதுவும் எடிட்லதான் படமே ரெடியாகும்... அப்போ அவர்களுக்கு அந்த வாட்டர் மார்க் போட்டு எப்படி வரும்?  ஜனநாயகன் குழு அல்லது காவல்துறை இதை தீவிரமாக விசாரிக்க வேண்டும். எங்கேயோ தவறு உள்ளிருந்தே நடந்திருக்கிறது...  ...பெரும் முதலீட்டில் எடுக்கப்பட்ட திரைப்படத்தை திருடர்கள் மனசாட்சியின்றி வெளியிட்டு இப்படித் தரம் கெட்டு நடப்பதை ஓர் இயக்குநராகக் கண்டிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார் சேரன்.

மும்பையில் சான்று பெற்ற ஹிந்தித் திரைப்படங்கள், ஹிந்தியில் டப் செய்து வெளியிடப்பட்ட ஏராளமான தெலுங்குப் படங்களை ஹேக் செய்து பிரதியெடுத்து வெளியிட்டதாகக் கடந்த ஆண்டில் புணேயைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதும் நினைவுகூரத் தக்கது.

தற்போது இணையத்தில் வெளியான ஜனநாயகன் படத்தில் கெட்ட வார்த்தை வசனங்கள் மியூட் செய்யப்பட்டிருப்பதாகவும் டிரைலரில் இருந்த சில ரத்தக் காட்சிகள் வெட்டப்பட்டுள்ளதாகவும் எனவே, இது தணிக்கை செய்யப்பட்ட பிரதியாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, இணையத்தில் ஜனநாயகன் வெளியானதில் தங்களுக்கு எவ்விதத் தொடர்புமில்லை என்று மத்திய தணிக்கைச் சான்று வாரியம் தெரிவித்திருக்கிறது.

ஜனநாயகனை யார் கசியவிட்டார்கள்? கசிவுக்கு யார் காரணம்? ஏன் வெளியிட்டார்கள்? அதுவும் இப்போது வெளியிட்டார்கள்? பின்னணி என்ன? வதந்திகள் பரவிக் கொண்டேயிருக்கின்றன. பாரதிராஜாவின் முதல் மரியாதை திரைப்படத்தில் சிவாஜி கணேசனிடம் ஏ.கே. வீராசாமி ஒரு வசனம் சொல்வார் – எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி! – இப்போது மக்களுக்கும்.

மட்டுமல்ல, இன்னொரு உண்மையும். ஆமாம், திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் இருக்கிறதா?

உண்மையான காங்கிரஸ் நம்ம பக்கம்தான் இருக்கிறது என்று திருநெல்வேலியில் பேசிய தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டுக் கில்லியடித்தார். கூடவே, இன்னொரு பக்கம், திமுகவுடன் கூட்டணி முடிவாகிக் களத்தில் இருக்கும் நிலையில், காங்கிரஸ் தலைமை ஒப்புதலுடன்தான் பல முறை விஜய்யைத் தாம் சந்தித்துப் பேசியதாகக் கட்சியின் தரவு பகுப்பாய்வுத் துறைத் தலைவர் பிரவீண் சக்ரவர்த்தி தெரிவித்தார். நானாகச் சென்று பார்க்கவில்லை; தலைமையின் ஒப்புதல், அங்கீகாரத்துடன்தான் நடந்தது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

கர்நாடகத் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் மட்டும் தமிழ்நாட்டுக்குப் பிரசாரம் செய்ய வந்ததுடன், முதல்வர் மு.க. ஸ்டாலினுடன்தான் காங்கிரஸ் இருக்கிறது என்று தெரிவித்துச் சென்றிருக்கிறார். இதுவரையிலும் அகில இந்தியத்  தலைவர்கள் – ராகுல் காந்தியோ, மல்லிகார்ஜுன கார்கேயோ - யாரும் தமிழ்நாட்டுப் பக்கம் பிரசாரத்துக்கு வரவில்லை. அல்லாமல், கட்சிக்குள்ளேயே குடுமிப்பிடி சண்டைகள் வேறு. தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் முதல்வர் ஸ்டாலின் பேசும் பிரசார மேடையில் ராகுல் காந்தியும் பங்கு பெறுவார் எனச் செய்திகள் வெளியாகின. உறுதி செய்யப்படவில்லை. தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 10 நாள்கள்தான் இருக்கின்றன. இரு கட்சிகளின் உயர் தலைவர்களிடையே தகவல் தொடர்பாவது இருக்கிறதா?

தொடர்பு இருந்தே ஆக வேண்டும் என்று என்ன பெரிய கட்டாயம்? நினைத்தால் மாற்ற வேண்டியதுதான், யாருக்குக் காரணம் சொல்ல வேண்டும்? எதற்காகக் காரணம் சொல்ல வேண்டும்? ஆற்றல் மிக்க தேர்தல் ஆணையம் என்றால் சும்மாவா? அப்படித்தான் தமிழ்நாட்டில் அரசு உயர் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிக் கொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம்.

‘தமிழ்நாட்டில் மாற்றினார்களா? மேற்கு வங்கத்தில் மட்டும் ஏன் மாற்றுகிறார்கள்?’  என்று கேட்டதும் கேட்டார் முதல்வர் மமதா பானர்ஜி. தமிழ்நாட்டிலும் தொடங்கிவிட்டது தேர்தல் ஆணையம். தலைமைச் செயலர் முருகானந்தம், பொறுப்பு டிஜிபி வெங்கடராமன், உள்துறைச் செயலர் தீரஜ்குமார், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் எல்லாரையும் மாற்றியாகிவிட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதத்தை மாற்றினார்கள், பின்னர் விலக்கிக் கொண்டார்கள். குறிப்பாக எந்தப் புகாரும் இல்லாத நிலையில் எதற்காக இந்த மாற்றங்கள்? நல்லவேளை, மு.க. ஸ்டாலினிடம் முதல்வர் பதவியை விட்டுவிட்டார்கள். ஏனென்றால், அவர் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வர மாட்டார்!

summary

The low-quality speeches of political leaders during election campaigns and about the leak of Jana Nayagan movie online...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.