முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 178

இன்றைய பாடலும் சுவாமிமலைத் திருப்புகழ்தான்.  இதன் தாள அமைப்பு, நேற்று வெளியான பாடலின் அதே தாள அமைப்புதான். 

Updated On : 4 மார்ச், 2016 at 12:51 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:15 PM

இன்றைய பாடலும் சுவாமிமைலைத் திருப்புகழ்தான்.  இதன் தாள அமைப்பு, நேற்று வெளியான பாடலின் அதே தாள அமைப்புதான்.  ‘ஒவ்வோரடியிலும் 2, 5, 9, 18-வது எழுத்துகளில் டகாரமும் (ட-வரிசைச் சொற்களும்) 8, 16, 24-வது எழுத்துகளில் மெல்லின ஒற்றும் கலந்து’ என்று குறிப்பிட்டிருந்தோம்.  இந்த டகாரம் ஒருசில இடங்களில் ரகரமாகவும் பயின்றிருக்கிறது.  இன்று பார்க்கின்ற இந்தப் பாடலிலே தாள அமைப்பு சற்றும் மாறவில்லை, நெடிலமைப்பு மாறவில்லை, மெல்லின ஒற்றுகள் பயிலும் வரிசை முறையும் மாறவில்லை.  ஆனால் நேற்றைய பாடலில் எங்கெல்லாம் டகாரம் இருந்ததோ அங்கெல்லாம் இன்றைய பாடலில் ரகாரம் பயின்றிருக்கிறது. 

இந்த ஒரே ஒரு மாற்றத்தினால் மட்டுமே — ஒரு வல்லெழுத்தின் இடத்தில் ஓர் இடையின எழுத்து — ஓசையில் நிறைய வேறுபாடு இருப்பதை உணரமுடிகிறது.  தாள அமைப்பில் எந்த மாற்றமும் இல்லாத போதிலும் ஒரே ஒரு எழுத்தில் செய்யப்படும் மாற்றம் சந்தம் ஒலிக்கின்ற விதத்தை எப்படி மாற்றுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு வேண்டுமானால், நேற்றைய, இன்றைய பாடல்களைக் கேட்டு ஒப்பிட்டு அறியலாம்.  நேற்றைய பாடலின் வண்ணக்குழிப்பு ‘தனாதனன’ என்றிருக்கும் இடங்களில் ஒலிக்கும் நேரத்தால் சம அளவு உள்ளதும், ஒலிக்கும் முறையால் ‘தனானதன’ என்று மாறியொலிப்பதுமாக அமைந்திருக்கிறது.  இரண்டு பாடல்களுக்கும் ஈற்றடி ஒன்றே.  இப்படி ஒரே ஈற்றடியோடு முடியும் பாடல்களின் ஈற்றடியை ‘மகுடம்’ என்பார்கள். 

நேற்றைய பாடல் எந்நேரமும் இறைவனைத் துதிக்க வேண்டும் என்று கேட்டது.  இன்றைய பாடல் செறிந்த ஞானத்தைக் கேட்கிறது.

Advertisement

தனானதன தானந் தனானதன தானந்
         தனானதன தானந் - தனதான

இராவினிருள் போலும் பராவுகுழ லாலும்

         இராமசர மாகும் - விழியாலும்

      இராகமொழி யாலும் பொறாதமுலை யாலும்

         இராதஇடை யாலும் - இளைஞோர்நெஞ்

சராவியிரு போதும் பராவிவிழ வேவந்

         தடாதவிலை கூறும் - மடவாரன்

      படாமலடி யேனுஞ் சுவாமியடி தேடும்

         அநாதிமொழி ஞானந் - தருவாயே

குராவினிழல் மேவுங் குமாரனென நாளுங்

         குலாவியினி தோதன் - பினர்வாழ்வே

      குணாலமிடு சூரன் பணாமுடிக டோறுங்

         குடாவியிட வேலங் - கெறிவோனே

துராலுமிகு தீமுன் பிராதவகை போலுந்

         தொடாமல்வினை யோடும் - படிநூறுஞ்

      சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ்

         சுவாமிமலை வாழும் - பெருமாளே.

</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/250131719&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.