பகுதி - 399
மயிலின்மேல் ஏறிவரும் அந்த நாளை
பதச் சேதம் | சொற் பொருள் |
கட்டம் உறு நோய் தீமை இட்ட குடில் மா மாய கட்டுவிடும் ஓர் கால அளவாவே Advertisement
| கட்டம் உறு நோய்: கஷ்டத்தைத் தரும் நோய்; தீமை இட்ட குடில்: தீங்குகள் பலவற்றால் நிறைந்துள்ள உடலாகிய குடில்; கால அளவாவே: கால அளவை (அளவிட்டு அறிந்து); |
கத்த உறவோர் பாலர் தத்தை செறிவார் வாழ்வு கற்பு நெறி தான் மாய உயர் காலன்
| தத்தை: கிளி—இங்கே மனைவி; செறிவுஆர் வாழ்வு: செறிவு நிறைந்த வாழ்க்கையும்; கற |
இட்ட ஒரு தூதாளும் முட்ட வினையால் மூடி இட்ட விதியே ஆவி இழவா முன்
| தூதாள்: தூதர்கள்; முட்ட: தாக்க; விதியே: விதிப்படியே; |
எத்தி உனை நாடோறும் முத்தமிழினால் ஓத இட்டம் இனிதோடு ஆர நினைவாயே
| எத்தி: ஏத்தி (குறுக்கல் விகாரம்); இட்டம்: இஷ்டம்; |
துட்டர் என ஏழ் பாரும் முட்ட வினையாள் சூரர் தொக்கில் நெடு மா மார்பு தொளையாக
| பாரும் முட்ட: உலகமும் மோத (கூட்டம் அலைமோதுகிறது என்பதுபோல், துக்கத்தால் ஒன்றுகூடுவதைக் குறிக்கிறது); தொக்கில்: தோலில் (த்வக் என்றால் வடமொழியில் தோல்); |
தொட்ட வடிவேல் வீர நட்டம் இடுவார் பால சுத்த தமிழ் ஆர் ஞான முருகோனே
| நட்டம் இடுவார்: நடனமாடுபவர், நடராசர்; |
மட்டு மரை நால் வேதன் இட்ட மலர் போல் மேவ மத்த மயில் மீது ஏறி வரு நாளை
| மட்டு: நறுமணமுள்ள; மரை: தாமரை; மத்த மயில்: செருக்குற்ற மயில் (proud peacock); |
வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழவைத்த படி மாறாத பெருமாளே.
| வைத்த நிதி: சேமித்து வைத்துள்ள நிதி; |
கட்டம் உறு நோய் தீமை இட்ட குடில் மா மாய கட்டுவிடும் ஓர் காலம் அளவாவே... கஷ்டத்தைத் தருவதான நோயாலும்; மற்ற தீமைகளாலும் நிறைந்திருக்கின்ற இந்த உடல், உலகத்தின் பெருமாயையான பந்தத்தை விட்டுவிடுகின்ற—உயிர்பிரிகின்ற—காலத்தை அறிந்துகொண்டதும்,
கத்த உறவோர் பாலர் தத்தை செறிவார் வாழ்வு கற்பு நெறி தான் மாய... உறவினர்களும் குழந்தைகளும் ஓலமிட்டு அழவும்; மனைவி, தன்னுடைய செறிவு நிறைந்த வாழ்க்கையையும், இத்தனைக் காலம் கற்புநெறி தவறாமலும் வாழ்ந்த வாழ்க்கை அழிந்துபோகும்படியும்;
உயர் காலன் இட்ட ஒரு தூதாளும் முட்ட... உயர்ந்தவனான யமன் அனுப்பிய ஒப்பற்ற தூதர்களும் (நெருங்கி வந்து) தாக்க;
வினையால் மூடி இட்ட விதியே ஆவி இழவா முன்... வினைகளால் மூடப்பட்ட இந்த உயிரை, விதி செலுத்தும் வழியில் இழப்பதற்கு முன்னால்,
எத்தி உனை நாடோறும் முத்தமிழினால் ஓத இட்டம் இனிதோடு ஆர நினைவாயே... உன்னை அனுதினமும் அடியேன் முத்தமிழாலே போற்றித் துதிக்க, என்னை நீ விருப்பத்தோடும் அன்போடும் முழுமையாக நினைத்தருள வேண்டும்.
துட்டர் என ஏழ் பாரும் முட்ட வினையாள் சூரர்... ‘இவர்கள் துஷ்டர்கள்’ என்று ஏழுலகத்திலுள்ள அனைவரும் திரண்டுவந்து கதறும்படியாகத் தங்களுடைய கொடுந்தொழிலை நடத்திவந்த சூரர்களுடைய,
தொக்கில் நெடு மா மார்பு தொளையாக தொட்ட வடிவேல் வீர... தோலால் மூடப்பட்ட பரந்த மார்பைத் துளைக்கும்படியாகக் கூரிய வேலைச் செலுத்திய வீரனே!
நட்டம் இடுவார் பால சுத்த தமிழ் ஆர் ஞான முருகோனே... நடனமாடுபவரான நடராசரின் பாலனே! சுத்தமான தமிழால் நிறைந்துள்ள ஞானவானே! முருகனே!
மட்டு மரை நால் வேதன் இட்ட மலர் போல் மேவ... நான்குவேதங்களை ஓதும் பிரமன் அமர்ந்துள்ள நறுமணம்வீசும் தாமரை மலரைப் போல (பதுமத்தைப் போல) பத்மாசனக் கோலத்திலே,
மத்த மயில் மீது ஏறி வரு நாளை... செறுக்கு நிறைந்த மயிலின்மேல் நீ அமர்ந்தபடி வருகின்ற அந்த நாளை,
வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்த படி மாறாத பெருமாளே.... (இதுவே தாங்கள்) சேமித்து வைத்துள்ள பொக்கிஷம் என்று விருப்பத்தோடு நாடிவரும் அடியார்களை நித்தமும் வாழவைப்பவனே! (கருணைத்) தன்மை மாறாத பெருமாளே!
சுருக்க உரை
‘இவர்கள் துஷ்டர்கள்’ என்று ஏழுலகத்திலும் உள்ளவர்கள் ஒன்றுகூடி வேதனையோடு அரற்றும்படியாகக் கொடுந்தொழிலைச் செய்துவந்த சூரர்களுடைய தோலால் மூடப்பட்ட பரந்த மார்பு துளைபடும்படியாக வேலை வீசிய வடிவேலனே! நடனப் பெருமானாகிய நடராசரின் பாலனே! பிரமன் அமர்ந்துள்ள தாமரையைப் போன்ற பத்மாசனக் கோலத்திலே நீ மயிலின்மேல் ஏறிவரும் அந்த நாளை, தங்கள் வாழ்வின் பெரிய நிதியாகக் கருதி, விரும்பி வந்து சூழ்கின்ற அடியார்களை என்றும் வாழவைக்கும், கருணைத்திறம் மாறாத பெருமாளே!
கஷ்டங்களைத் தருகின்ற நோயாலும் பிற துன்பங்களாலும் நிறைந்த இந்த உடல், மாயை நிறைந்ததாகிய இந்த உலகத்தோடு தன் பந்தத்தை முடித்துக்கொள்ளும் நேரம் நெருங்குவதை அறிந்து உறவினரும் குழந்தைகளும் கதறி அழவும்; கிளிபோன்ற மனைவியுடைய நீண்டகால வாழ்க்கையும்; அவள் கட்டிக் காத்த கற்புநெறியும் அழிந்துபடும்படியாக யமதூதர்கள் நெருங்கிவந்து தாக்கவும்; வினைகளாலே மூடப்பட்ட இந்த உடல், தன்னுடைய விதிப்படி உயிரை இழப்பதற்கு முன்னால்,
உன்னை முத்தமிழால் ஏத்திப் போற்றி அன்றாடம் துதிக்க வேண்டும்; நீயும் விருப்பத்தோடும் அன்போடும் அடியேனை நினைத்தருள வேண்டும்.