பகுதி - 400
உன் பொற்பாதத்தை உள்ளத்து அன்போடு
பொதுப் பாடல்கள் வரிசையைச் சேர்ந்த இப்பாடல் ‘தினந்தோறும் உன் பொற்பாதத்தை உள்ளத்து அன்போடு ஓதுகின்ற அறிவு நிலைக்கின்ற வாழ்வைத் தந்தருள வேண்டும் என்று கோருகிறது.
அமைப்பு முறையினால் இது நேற்றும் அதன் முன்தினமும் பார்த்த ‘கட்டமுறு நோய்தீமை’ என்ற பாடலை அப்படியே ஒத்தது. ஒற்றொழித்து அடிக்கு 25 எழுத்துகள்; 5, 6, 12, 13, 19, 20 ஆகிய எழுத்துகள் நெடில், மற்றவை குறில்; சீரான இடைவெளிகளில் வல்லொற்று பயில்கிறது. ஒவ்வோரடியிலும் ஒன்று, மூன்று, ஐந்தாம் சீர்களில் தொடர்ச்சியாக எதுகை அமைந்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல் இரண்டு பாடல்களுக்கும் ஈற்றடி ஒன்றாகவே அமைந்திருக்கிறது.
தத்ததன தானான தத்ததன தானான
தத்ததன தானான தனதான
பக்கமுற நேரான மக்களுட னேமாதர்
பத்தியுடன் மேல்மூடி - யினிதான
பட்டினுட னேமாலை யிட்டுநெடி தோர்பாடை
பற்றியணை வோர் கூவி - யலைநீரிற்
புக்குமுழு காநீடு துக்கமது போய்வேறு
பொற்றியிட வேயாவி - பிரியாமுன்
பொற்கழலை நாடோறு முட்பரிவி னாலோது
புத்திநெடி தாம்வாழ்வு - புரிவாயே
இக்கனுக வேநாடு முக்கணர்ம காதேவர்
எப்பொருளு மாமீசர் - பெருவாழ்வே
எட்டவரி தோர்வேலை வற்றமுது சூர்மாள
எட்டியெதி ரேயேறு - மிகல்வேலா
மக்களொடு வானாடர் திக்கில்முனி வோர்சூழ
மத்தமயில் மீதேறி - வருவோனே
வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ
வைத்தபடி மாறாத - பெருமாளே.
Advertisement