பகுதி - 401
மயிலின் மேலேறி வலம் வருபவனே
பதச் சேதம் | சொற் பொருள் |
பக்கம் உற நேரான மக்களுடனே மாதர் பத்தியுடன் மேல் மூடி இனிதான Advertisement
| பக்கம் உற: அருகில் வர, சூழ்ந்து கொள்ள; நேரான மக்கள்: நல்ல ஒழுக்கமுள்ள பிள்ளைகள்; பத்தியுடன்: பக்தியுடன், அன்புடன், சிரத்தையுடன்; |
பட்டின் உடனே மாலை இட்டு நெடிது ஓர் பாடை பற்றி அணைவோர் கூடி அலை நீரில்
| |
புக்கு முழுகா நீடு துக்கம் அது போய் வேறு பொற்றி இடவே ஆவி பிரியா முன்
| முழுகா: முழுகி; நீடு துக்கம்: நெடிய, பெரிய துக்கம்; வேறு: வேற்றுவர், மாற்றார்; பொற்றி: பொன் தீ—பொன்போல ஒளிவீசும் தீ; |
பொன் கழலை நாள் தோறும் உள் பரிவினால் ஓது(ம்) புத்தி நெடிது ஆம் வாழ்வு புரிவாயே
| உள்பரிவு: மனத்தில் பெருகும் அன்பு; புத்தி நெடிதாம் வாழ்வு: புத்தி நீளும்படியான (தொடரும்படியான) வாழ்வு; |
இக்கன் உகவே நாடு(ம்) முக்க(ண்)ணர் மகா தேவர் எப்பொருளும் ஆம் ஈசர் பெரு வாழ்வே
| இக்கன்: இக்கை உடையவன்; இக்கு: கரும்பு—எனவே இக்கன், கரும்பு வில்லை உடைய மன்மதன்; உகவே: அழிந்துபடவே; நாடும்: திருவுள்ளம் கொள்ளும்; பெரு வாழ்வு: பெரிய செல்வம்; |
எட்ட அரிது ஓர் வேலை வற்ற முது சூர் மாள எட்டி எதிரே ஏறும் இகல் வேலா
| எட்ட அரிது: கடக்க முடியாத, பரந்த; ஓர் வேலை: ஒப்பற்ற கடலை; முதுசூர்: தொன்மையான சூரன்; இகல்: வலிமை; |
மக்களோடு வான் நாடர் திக்கில் முனிவோர் சூழ மத்த மயில் மீது ஏறி வருவோனே
| மத்த மயில்: செருக்குற்ற மயில்; |
வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்த படி மாறாத பெருமாளே.
| வைத்த நிதி: சேமித்து வைத்த நிதி; |
பக்கம் உற நேரான மக்களுடனே மாதர் பத்தியுடன் மேல் மூடி இனிதான பட்டின் உடனே... நல்ல ஒழுக்கமுடைய மக்களும் பெண்களும் அருகிலே சூழ்ந்து நிற்க; பட்டாடையை மேலே அன்போடு போர்த்தி;
மாலை இட்டு நெடிது ஓர் பாடை பற்றி அணைவோர் கூடி... மாலை போட்டு; நீண்ட பாடையைப் பற்றி வருபவர்கள் ஒன்றுகூடி;
அலை நீரில் புக்கு முழுகா நீடு துக்கம் அது போய்... அலையடிக்கும் நீரிலே இறங்கி, முழுகி, மிகுதியாக இருந்த துக்கமும் போய்த் தொலைய;
வேறு பொன் தீ இடவே ஆவி பிரியா முன்... அன்பில்லாத மாற்றார்களைப் போல அந்த உடலுக்குப் பொன்போல ஒளிவீசும் தீயை மூட்டும்படியாக உயிர் பிரிவதற்கு முன்னாலே,
பொன் கழலை நாள் தோறும் உள் பரிவினால் ஓது(ம்) புத்தி நெடிது ஆம் வாழ்வு புரிவாயே... உன்னுடைய பொற்பாதங்களை அனுதினமும் உள்ளன்போடு ஓதுகின்ற அறிவு பெருகுவதான வாழ்க்கையைத் தந்தருள வேண்டும்.
இக்கன் உகவே நாடு(ம்) முக்க(ண்)ணர் மகா தேவர் எப்பொருளும் ஆம் ஈசர் பெரு வாழ்வே... இக்கு—கரும்பு—வில்லை உடைய மன்மதன் அழிந்துபோகும்படி திருவுள்ளம் கொண்ட முக்கண்ணரும் மகாதேவருமான சிவபெருமான்; எல்லாப் பொருளிலும் நிறைந்துள்ள ஈசனுடைய பெரிய செல்வமே!
எட்ட அரிது ஓர் வேலை வற்ற முது சூர் மாள எட்டி எதிரே ஏறும் இகல் வேலா... கடக்க முடியாதபடி பரந்திருக்கும் கடல் வற்றிப் போக; தொன்மையான சூருன் இறந்து போகும்படியாக அவன்மேல் போருக்கு எதிரே எழுந்த வலிமை நிறைந்த வேலனே!
மக்களோடு வான் நாடர் திக்கில் முனிவோர் சூழ மத்த மயில் மீது ஏறி வருவோனே... (இவ்வுலகத்து) மக்களும் விண்ணுலகத்து தேவர்களும் பல திசைகளிலும் உள்ள முனிவர்களும் சூழ்ந்துவர, செருக்கு நிறைந்ததான மயிலின்மேலே ஏறி வலம் வருபவனே!
வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்த படி மாறாத பெருமாளே.... (தாங்கள்) சேமித்து வைத்துள்ள பொக்கிஷம் நீயே என்று விருப்பத்தோடு நாடிவரும் அடியார்களை நித்தமும் வாழவைப்பவனே! (கருணைத்) தன்மை மாறாத பெருமாளே!
சுருக்க உரை
கரும்பு வில்லை ஏந்திய மன்மதன் அழிந்துபோகும்படியாகத் திருவுளளம் கொண்டவரும்; முக்கண்ணரும்; மகாதேவரும்; எங்கேயும் எல்லாவற்றிலும் நிறைந்திருப்பருமான சிவனாருடைய பெரும் செல்வமே! கடக்க முடியாத பெருங்கடல் வற்றிப் போக; தொன்மையான சூரன் இறந்துபடும்படியாக அவனை எதிர்த்துப் போருக்கெழுந்த வலிய வேலனே! மனிதர்களும் தேவர்களும் முனிவர்களும் சூழ்ந்துவர, செருக்கு நிறைந்த மயிலின் மேலேறி வலம் வருபவனே! உன்னையே தங்கள் வாழ்வின் பெரிய நிதியாகக் கருதி, விரும்பி வந்து சூழ்கின்ற அடியார்களை என்றும் வாழவைக்கின்ற, கருணைத்திறம் மாறாத பெருமாளே!
ஒழுக்கம் நிறைந்த மக்களும் பெண்களும் அருகிலே சூழ்ந்து நிற்க; பரிவோடு உடலின் மேலே பட்டாடையைப் போர்த்தி, மாலை அணிவித்து, பாடையில் ஏற்றித் தூக்கி வருபவர்களும் மற்றவர்களும் ஒன்றாகச் சேர்ந்து அன்பில்லாதவர்களைப் போல அந்த உடலுக்குத் தீமூட்டி, அலையடிக்கும் நீரில் முழுகித் தம்முடைய பெரிய துக்கத்தைத் தொலைத்துக்கொள்ளும்படியாக என் உயிர் பிரிவதற்கு முன்னால்,
உன்னுடைய பொற்பாதங்களை அன்றாடம் என் உள்ளத்திலே அன்போடு ஓதுகின்ற அறிவு நிறைந்ததான வாழ்க்கையைத் தந்தருள வேண்டும்.