பகுதி - 377
சிவந்த ரத்தினங்கள் ஒளிவீசும் தண்டைகளை
பதச் சேதம் | சொற் பொருள் |
படியை அளவு இடு நெடிய கொண்டலும் சண்டனும் Advertisement தமர சதுமறை அமரர் சங்கமும் சம்புவும் பரவ அரிய நிருபன் விரகன் சுடும் சம்பனன் செம் பொன் மேனி
| படியை: பூமியை; அளவிடு: அளக்கின்ற; நெடிய கொண்டல்: நெடியோனும் மேகவண்ணனுமான திருமால்; சண்டன்: யமன்; தமர(ம்): ஒலி, ஓசை; அமரர் சங்கம்: தேவர் கூட்டம்; நிருபன்: அரசன்; விரகன்: சாமர்த்தியசாலி; சம்பன்னன்: நிறைந்தவன்; சுடும் சம்பன்னன்: சுட்டு அழிக்கும் தன்மை நிறைந்தவன்; |
பரமன் எழில் புனையும் அரவங்களும் கங்கையும் திரு வளரும் முளரிஒடு திங்களும் கொன்றையும் பரிய குமிழ் அறுகு கன தும்பையும் செம்பையும் துன்று மூல
| செம்பொன் மேனிப் பரமன்: சிவன்; அரவம்: பாம்பு; முளரியொடு: தாமரையோடு; திங்கள்: சந்திரன்; பரிய: பெரிய; குமிழ்: குமிழம் பூ; கனதும்பை: பெருமை வாய்ந்த தும்பை; செம்பை: செம்பருத்தி மலர்; துன்று(ம்): நெருங்கியுள்ள; மூல: பிரதானமாக (உள்ள); |
சடை முடியில் அணியும் ந(ல்)ல சங்கரன் கும்பிடும் குமரன் அறுமுகன் மதுரம் தரும் செம் சொ(ல்)லன் சரவணையில் வரு முதலி கொந்தகன் கந்தன் என்று உய்ந்து பாடி
| சரவணை: சரவணப் பொய்கை; முதலி: முதல்வன்; கொந்தகன்: சேனாபதி; |
தணிய ஒலி புகலும் விதம் ஒன்றிலும் சென்றிலன் பகிர ஒரு தினை அளவு பண்பு கொண்டு அண்டிலன் தவ நெறியில் ஒழுகி வழி பண்படும் கங்கணம் சிந்தியாதோ
| தணிய: குளிர்ச்சியான; ஒலிபுகலும்: சொற்களைச் சொல்லும்; கங்கணம்: காப்பு நாண்—காரணப் பெயராக உறுதி, வைராக்கியம்; சிந்தியாதோ: (மனத்தில்) தோன்றாதோ; |
கடுகு பொடி தவிடுபட மந்திரம் தந்திரம் பயில வரு(ம்) நிருதர் உடலம் பிளந்து அம்பரம் கதறி வெகு குருதி நதி பொங்கிடும் சம்ப்ரமம் கண்டு சேர
| கடுகுபொடி: கடுகைப் போல பொடியாக; நிருதர்: அரக்கர்; அம்பரம்: கடல்; வெகு குருதி நதி: பெருத்த ரத்த ஆறு; சம்ப்ரமம்: களிப்பு; |
கழுகு நரி கொடி கருடன் அங்கு எழுந்து எங்கு(ம்) நின்று அலகை பல திமிலை கொடு தந்தனம் தந்தனம் கருதி இசை பொசியும் நசை கண்டு கண்டு இன்புறும் துங்க வேலா
| கொடி: காக்கை; அலகை: பேய்; திமிலை: பம்பை மேளம்; பொசியும்: கசியும், பெருகும்; நசை: ஆசை; துங்க வேலா: தூய்மையான வேலை உடையவனே; |
அடல் புனையும் இடை மருதில் வந்து இணங்கும் குணம் பெரிய குருபர குமர சிந்துரம் சென்று அடங்கும் அடவி தனில் உறை குமரி சந்து இலங்கும் தனம் தங்கு(ம்) மார்பா
| அடல் புனையும்: வெற்றி விளங்கும்; இடைமருது: திருவிடைமருதூர்; சிந்துரம்: யானை; அடவி: காடு; சந்து இலங்கும்: சந்தனம் விளங்கும்; |
அருண மணி வெயில் இலகு தண்டை அம் பங்கயம் கருணை பொழிவன கழலில் அந்தமும் தம்பம் என்று அழகு பெற நெறி வருடி அண்டரும் தொண்டு உறும் தம்பிரானே.
| அருண மணி: சிவந்த ரத்தினம்; பங்கயம்: தாமரை; அந்தமும்: எப்போதும்; தம்பம்: பற்றுக்கோடு; அண்டர்: தேவர்கள்; தொண்டுறும்: தொண்டு செய்யும்; நெறி வருடி: வழியைத் தடவிப் (தேடிப்) பற்றி; |
படியை அளவு இடு நெடிய கொண்டலும் சண்டனும் ... பூமியைத் தன் பாதத்தால் அளவிட்ட மேகவண்ணனான திருமாலும் யமனும்;
தமர சதுமறை அமரர் சங்கமும் சம்புவும் பரவ அரிய நிருபன் ... ஒலியோடு ஓதப்படும் நான்கு வேதங்களும் தேவர்கள் கூட்டமும் பிரமனும் போற்றுவதற்கு அரிய அரசன்;
விரகன் சுடும் சம்பனன் செம் பொன் மேனிப் பரமன் ... வல்லவன்; எரித்துப் பொசுக்கும் தன்மையுள்ளவன்; செம்பொன்னைப் போன்ற மேனியை உடைய பரமன்;
எழில் புனையும் அரவங்களும் கங்கையும் திரு வளரும் முளரியொடு திங்களும் கொன்றையும் ... அழகாகப் புனைந்துள்ள பாம்புகள், கங்கை, லக்ஷ்மி வாசம் செய்வதான தாமரை, பிறைச் சந்திரன், கொன்றை,
பரிய குமிழ் அறுகு கன தும்பையும் செம்பையும் துன்று மூலச் சடை முடியில் அணியும் ந(ல்)ல சங்கரன் கும்பிடும் ... பருமனான குமிழம் பூ, அறுகம் புல், பெருமை மிக்க தும்பை, செம்பருத்திப் பூ எல்லாமும் நெருங்கி, முதன்மையாக விளங்கும் சடாமுடியில் அணிபவரான சங்கரன் வணங்குகின்ற,
குமரன் அறுமுகவன் மதுரம் தரும் செம் சொ(ல்)லன் சரவணையில் வரு முதலி கொந்தகன் கந்தன் என்று ... குமரன், ஆறுமுகன், இனிய செம்மையான சொற்களைப் பேசுபவன், சரவணப் பொய்கையில் உதித்த முதல்வன், தேவசேனாபதி, கந்தன் என்றெல்லாம்,
உய்ந்து பாடித் தணிய ஒலி புகலும் விதம் ஒன்றிலும் சென்றிலன் ... உய்வடையும்படியாகப் பாடி; குளிர்ந்த சொற்களைப் பேசுகின்ற ஒருவழியிலும் நான் செல்லவில்லை;
பகிர ஒரு தினை அளவு பண்பு கொண்டு அண்டிலன் ... தினையளவாவது பிறரோடு பகிர்ந்துண்ணும் குணத்தோடு அணுகாதவன்;
தவ நெறியில் ஒழுகி வழி பண்படும் கங்கணம் சிந்தியாதோ ... தவநெறியைக் கடைப்பிடித்து, நல்ல வழியில் பண்படுகின்ற மன உறுதி என்னுள்ளே தோன்றாதோ?
கடுகு பொடி தவிடு பட மந்திரம் தந்திரம் பயில வரு(ம்) நிருதர் உடலம் பிளந்து ... கடுகைப் போலப் பொடிப்பொடியாகத் தவிடும்படும்படியான மந்திர தந்திரங்களைப் பயின்று வந்தவர்களான அசுரர்களுடைய உடல்களைப் பிளந்து,
அம்பரம் கதறி வெகு குருதி நதி பொங்கிடும் சம்ப்ரமம் கண்டு சேர ... கதறுகின்ற கடலில் இரத்த ஆறு பொங்கிவந்து கலக்கின்ற; களிப்புக்கு இடமான (போர்க்களத்தைக்) கண்டு அங்கே சேரும்படியாக,
கழுகு நரி கொடி கருடன் அங்கு எழுந்து எங்கு(ம்) நின்று ... கழுகு, நரி, காக்கை, கருடன் எல்லாமும் அங்கே வந்து ஒன்றுகூடி அனைத்து இடங்களிலும் நிற்கவும்;
அலகை பல திமிலை கொடு தந்தனம் தந்தனம் கருதி இசை பொசியும் நசை கண்டு கண்டு இன்புறும் துங்க வேலா ... பல பேய்கள் பம்பை மேளங்களைத் தந்தனம் தந்தனம் என்ற ஓசையோடு முழக்கி, இசை பொழிந்து, (பிணங்களைத் தின்னும்) ஆசையோடு நிற்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைகின்ற பரிசுத்தமான வேலனே!
அடல் புனையும் இடை மருதில் வந்து இணங்கும் குணம் பெரிய குருபர குமர... வெற்றி விளங்குகின்ற திருவிடைமருதூரில் பொருந்தியிருப்பவனே! பெரிய குணத்தையுடைய குருபரனே! குமரனே!
சிந்துரம் சென்று அடங்கு(ம்) அடவி தனில் உறை குமரி சந்து இலங்கும் தனம் தங்கு(ம்) மார்பா ... திரிந்த யானைகள் உறங்குகின்ற வள்ளிமலைக் காட்டில்இருந்த வள்ளியம்மையின் சந்தனம் பொலியும் தனங்களில் படியும் திருமார்பனே!
அருண மணி வெயில் இலகு தண்டை அம் பங்கயம் கருணை பொழிவன கழலில் ... சிவந்த ரத்தினங்கள் ஒளிவீசும் தண்டைகளை அணிந்த; தாமரை போன்றதும் கருணையைப் பொழிவதுமான உன்னுடை திருவடிகளே,
அந்தமும் தம்பம் என்று அழகு பெற நெறி வருடி அண்டரும் தொண்டு உறும் தம்பிரானே. ... எப்போதும் நமக்குப் பற்றுக்கோடு என்பதை உணர்ந்து, அந்த நல்ல நெறியை நாடியடைந்து தேவர்களும் தொண்டு செய்கின்ற தம்பிரானே!
சுருக்க உரை
சகலமும் கடுகைப் போலப் பொடிப்பொடியாகத் தவிடுபடும்படியான மந்திர தந்திரங்களைக் கற்றவர்களான அசுரர்களுடைய உடல்களைப் பிளந்தும்; அவற்றிலிருந்து பெருகிவரும் ரத்தவெள்ளமானது கடல் கதறும்படியாக வந்து கலக்கின்ற போர்க்களத்தில் கழுகும் நரியும் காக்கையும் கருடனும் அங்கே ஒன்றாகத் திரண்டு நிற்கவும்; பலபேய்கள் ஒன்றுகூடி பம்பை வாத்தியத்தை—பிணங்களை உண்ணும் விருப்பத்தோடு—தந்தனம் தந்தனம் என்று முழக்கவும், அதைப் பார்த்து மகிழ்கின்ற வேலனே! வெற்றிவிளங்கும் திருவிடைமருதூரில் பொருந்தியுள்ளவனே! குணத்தில் சிறந்த குருபரனே! குமரனே! திரிந்த யானைகள் துயிலுகின்ற வள்ளிமலைக் காட்டில் வாழ்ந்த வள்ளியம்மையின் சந்தனம் பொலியும் திருத்தனத்தி படியும் திருமார்பனே! சிவந்த ரத்தினங்கள் ஒளி வீசுகின்ற தண்டைகளை அணிந்தவையும்; தாமரை போன்றவையும்; கருணையைப் பொழிபவையுமான திருவடிகளே நமக்கு என்றும் உறுதியான பற்றுக்கோடு என்று அந்த நெறியைக் கைக்கொண்டு வருபவர்களான தேவர்கள் தொண்டாற்றுகின்ற தம்பிரானே!
பூமியைத் தன் பாதத்தால் அளவிட்ட திருமாலாலும்; யமனாலும்; ஒலியோடு ஓதப்படும் வேதங்களாலும்; தேவர்கூட்டங்களாலும்; பிரமனாலும் போற்றுவதற்கு அரிதானவனும்; அரசனும்; சுட்டழிக்கும் தன்மைகொண்டவனும்; செம்பொன்னைப் போன்ற சிவந்த மேனியனுமான பரமன்; பாம்புகளையும் கங்கையையும் லக்ஷ்மி வாசம் செய்கின்ற தாமரையையும் நிலவையும் பருத்த குமிழம் பூவையும் அறுகம் புல்லையும் செம்பருத்திப் பூவையும் சடையில் நெருக்கமாகச் சூடிய சங்கரன் வழிபடுகின்ற குமரன்; ஆறுமுகன்; இனிய சொல்லன்; சரவணப் பொய்கையில் உதித்த முதல்வன்; தேவசேனாபதி; கந்தன் என்றெல்லாம், உய்வடையும் வண்ணம் பாடி, குளிர்ந்த சொற்களைப் பேசும் நெறி ஒன்றையும் கடைப்பிடித்தேனல்லன்; மற்றவர்களோடு தினையளவும் பங்கிட்டுண்ணும் பண்புடையேனல்லன்; அந்தப் பண்புகொண்டு அணுகினேனுமல்லன். இத்தகைய எனக்கு தவவழியில் நின்று நல்லபடியாக சீர்பெறுவதில் ஒரு வைராக்கியம் என் மனத்திலே தோன்றுமோ? (தோன்றும்படியாக அருள்புரிய வேண்டும்.)