முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 595

தேவர்களாலும் காண முடியாத

Updated On : 30 ஜூன், 2017 at 5:56 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 9:49 PM

பதச் சேதம்

சொற் பொருள்

சக சம்ப குடை சூழ் சிவிகை மெல் மத இன்பத்துடனே பல பணி தனிதம் பட்டு உடையோடு இகல் முரசு ஒலி வீணை

Advertisement

 

சக: ஜக—உலக, உலகோர்; சம்ப: ஜம்ப, ஜம்பமாக, பகட்டாக; சிவிகை: பல்லக்கு; மெல்: மேல் (குறுக்கல் விகாரம்); தனிதம்: சம்பாத்தியம் எனவும் முழக்கம் எனவும் பொருள்; இகல்: போர் (இங்கே, போட்டிபோடும் என்று கொள்ளலாம்);

தவளம் தப்பு உடனே கிடுகிடு நடை தம்பட்டம் இடு இடோல் பல ஒலி சதளம் பொன் தடிகாரரும் இவை புடை சூழ

 

தவளம்: வெள்ளை, வெண்சங்கு; தப்பு: தப்பட்டை; இடோல்: டோல் (dhol) எனப்படும் மேளம்; சதளம்: மக்கள் கூட்டம்;

வெகு கும்பத்துடனே பல படை கரகம் சுற்றிடவே வர இசை வெகு சம்பத்துடனே அழகுடன் நிதம் மேவும்

 

வெகு கும்பத்துடன்: நிறைந்த பூரண கும்பங்களுடன்; சம்பத்துடன்: செல்வத்துடன்;

விருமம் சித்திரமாம் இது நொடி மறையும் பொய் பவுஷோடு உழல்வது விட உம்பர்க்கு(ம்) அரிதாம் இணை அடி தருவாயே

 

விருமம்: பிரமை; சித்திரமாம்: தோற்றமாம்; பவுஷு: கௌரவம்;

திகுதந்தித் திகுதோ திகுதிகு திகுதந்தித் திகுதோ திகுதிகு திகுர்தஞ்செச் செகசே செககண என பேரி

 

 

திமிர்தம் கல் குவடொடு எழு கடல் ஒலி கொண்டு அற்று உருவோடு அலறிட திரள் சண்டத்து அவுணோர் பொடிபட விடும் வேலா

 

திமிர்தம்: பேரொலி; கல்குவடு: மலைத் திரட்சி; சண்டத்து: கொடுமையை உடைய (சண்டம்: கொடுமை); அவுணோர்: அரக்கர்கள்;

அகரம் பச்சுருவோடு ஒளி உறை படிகம் பொன் செயலாள் அரன் அரி அயன் அணடர்க்கும் அரியாள் உமை அருள் முருகோனே

 

அகரம்: ‘அ’ என்ற எழுத்தைப் போல் முதல்வியாய்; பச்சுருவோடு: பச்சை வண்ண உருவத்தோடு;  பொன் செயலாள்: பொன் போன்ற செயலினாள்; அரியாள்: அரியவள்;

அமுர்தம் பொன் குவடோடு இணை முலை மதி துண்டம் புகழ் மான் மகளோடும் அருள் செம் பொன் புலியூர் மருவிய பெருமாளே.

 

துண்டம்: முகம்; மான்மகள்: வள்ளி; புலியூர்: சிதம்பரம்;

சக சம்பக் குடை சூழ் சிவிகை மெல் மத இன்பத்துடனே பல பணி பட்டு உடையோடு... உலகமே (போற்றும்படியானதும்); ஆடம்பரமாகப் பிடிக்கப்பட்டதுமான குடையால் சூழப்பட்ட பல்லக்கின் மேலே மகிழ்ச்சி பொங்கும் இன்பத்தோடும்; பல ஆபரணங்களோடும்; பட்டாடையோடும்;

தனிதம் இகல் முரசு ஒலி வீணை தவளம் தப்பு உடனே கிடுகிடு நடை தம்பட்டம் இடோல் பல ஒலி...முழங்குவதான முரசமும்; ஒலிக்கின்ற வீணையும்; வெண்சங்கும்; தாளம் தப்பட்டையும்; கிடுகிடுக்கச் செய்யும் நடையும்; தம்பட்டமும்; டோல் என்னும் மேளமும் பலவிதமான ஒலிகளை (எழுப்ப);

சதளம் பொன் தடிகாரரும் இவை புடை சூழ வெகு கும்பத்துடனே பல படை கரகம் சுற்றிடவே வர...மக்கள் கூட்டமும்; பொன்தடியை ஏந்திய சேவகர்களும் பக்கங்களில் சூழ்ந்துவர; பூரண கும்பத்தோட பல படைகளும் கரகங்களும் சுற்றியபடி வர;

இசை வெகு சம்பத்துடனே அழகுடன் நிதம் மேவும் விருமம் சித்திரமாம் இது நொடி மறையும்... இசை முழக்கமும்; மிகுந்த செல்வமும்; அழகோடு தினமும் (உலா) வருகின்ற (இந்த ஆடம்பரங்கள்) வெறும் பிரமைத் தோற்றங்களே;  இவை ஒரே நொடியில் மறைந்து போகும்.

பொய்ப் பவுஷோடு உழல்வது விட உம்பர்க்கு அரிதாம் இணை அடி தருவாயே... (இப்படிப்பட்ட) போலி கௌரவங்களோடு திரிவதை விட்டொழித்து; தேவர்களாலும் காண முடியாத திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

திகுதந்தித் திகுதோ திகுதிகு திகுதந்தித் திகுதோ திகுதிகு திகுர்தஞ்செச் செகசே செககண...... என பேரி திமிர்தம்... திகுதந்தி திகுதோ என்றெல்லாம் பேரிகைகள் பேரொலியைச் செய்ய;

கல் குவடோடு எழு கடல் ஒலி கொண்டு அற்று உருவோடு அலறிட திரள் சண்டத்து அவுணோர் பொடிபட விடும் வேலா... மலைத்திரட்சிகளோடு ஏழு கடல்களும் ஒலி எழுப்பியபடி குலைந்துபோய் அச்சத்தோடு அலறும்படியாக கொடுமையான கூட்டமாக வந்த அரக்கர்கள் பொடிபட்டு அழியும்படியாக வேலை வீசியவனே!

அகரம் பச் (சை) உருவோடு ஒளி உறை படிகம் பொன் செயலாள் அரன் அரி அயன் அண்டர்க்கும் அரியாள் உமை அருள் முருகோனே... எல்லாவற்றுக்கும் முதல்வியும்; பச்சை வண்ணத்தைக் கொண்டவளும்; ஒளி நிறைந்த படிகத்தைப் போன்றவளும்; (படைப்பதும் காப்பதுமான) பொன்போன்ற செயல்களை செய்பவளும்; சிவனுக்கும் திருமாலுக்கும் பிரமனுக்கும் தேவர்களுக்குமே அரியவளாக இருப்பவளுமான உமையம்மை அருளிய முருகனே!

அமுர்தம் பொன் குவடோடு இணை முலை மதி துண்டம் புகழ் மான் மகளொடும் அருள் செம் பொன் புலியூர் மருவிய பெருமாளே.... அமுதம் நிறைந்த பொன் மலைகளைப் போன்ற மார்பகங்களையும்; சந்திரனைப் போன்ற முகத்தையும் உடையவளும்; மான் ஈன்றவளுமான வள்ளியோடு பொன்னம்பலமான சிதம்பரத்தில் அருள்பாலித்தபடி வீற்றிருக்கும் பெருமாளே!

சுருக்க உரை

திகுதந்தி திகுதோ முதலான பலவிதமான ஓசைகளை பேரிகைகள் எழுப்ப; மலைத் திரட்சிகளும் ஏழு கடல்களும் ஒலியெழுப்பியபடிக் குலைந்துபோய் அச்சத்தோடு அலறும்படியாகக் கூட்டமாக வந்த கொடுமை நிறைந்த அரக்கர்கள் பொடிபட்டு அழியும்படியாக வேலை எறிந்தவனே!  அனைத்துக்கும் முதல்வியும்; மரகதப் பச்சை வண்ணத்தவளும்; ஒளிபொருந்திய படிகத்தை ஒத்தவளும்; படைத்தல் காத்தல் முதலான பொன்போன்ற செயல்களைச் செய்பவளும்; சிவன், திருமால், பிரமன், தேவர்கள் என்று அனைவருக்குமே அரிதானவளுமான உமையம்மை ஈன்ற முருகனே!  அமுதம் பொதிந்த மலைகளைப் போன்ற மார்பகங்களையும்; சந்திரனைப் போன்ற முகத்தையும் உடையவளும்; மான் ஈன்றவளுமான வள்ளியோடு பொன்னம்பலமான சிதம்பரத்தில் அருள்பாலித்தபடி வீற்றிருக்கின்ற பெருமாளே!

உலகமே வியக்கும்படியானதும்; ஆடம்பரமாகப் பிடிக்கப்பட்ட குடையால் சூழப்பட்ட பல்லக்கின் மேலே மகிழ்ச்சியோடு வீற்றிருந்து; பல ஆபரண்ஙகளையும் பட்டாடைகளையும் அணிந்து; முரசங்கள் முழங்க, வீணைகளும் சங்குகளும் ஒலிக்க; தப்பட்டை ஒலிக்க; அதிரும்படியாகச் செல்லும் நடையும் (எழுப்பும் ஓசைகளோடு) முழங்குகின்ற தம்பட்டமும் டோலும் பல ஓசைகளை எழுப்ப; கூட நடந்து வரும் மக்கள் கூட்டம் இரைச்சலிட; பொன்தடியை ஏந்திய சேவகர்கள் சூழ்ந்துவர, பூரணகும்ப மரியாதைகளோடு தினமும் உலாவருகின்ற இந்த ஆடம்பரங்களெல்லாம் வெறும் பிரமைத் தோற்றங்களே.  இப்படிப்பட்ட போலி கெளரவங்களோடு திரிவதை விட்டொழித்து நான் உய்யுமாறு தேவர்களுக்கும் அரிதான உன்னுடைய திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.